நாட்டை நேசிக்கும் தலைவர்களையே ஊடகவியலாளர்கள் தேர்தல்களில் அடையாளப்படுத்த வேண்டும்
- வெயாங்கொடையில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

( மினுவாங்கொடை நிருபர் )

   எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடுகின்றார்கள் என்பது முக்கியமல்ல.  போட்டியிடுகின்றவர்களில் யார் சிறந்தவரோ அவரையே நாம் தெரிவு செய்ய வேண்டும் என்பதே முக்கியம். ஜனாதிபதித் தேர்தலில் நாம் தெரிவு செய்யும் சிறந்த தலைவர்களாலேயே எமது நாட்டை முன்னேற்ற முடியும் என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்  அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஊடகவியலாளர்களின் சந்திப்பில் தெரிவித்தார். "சிறந்த ஊடகவியலாளரொருவர் சிறந்த பிரஜையாவார்" என்ற தொனிப்பொருளில், கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் சந்திப்பு, வெயாங்கொடை - "சான்ஸ் பெலஸ்" ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில், (18) ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

ஆசியாவின் ஊடக மற்றும் கலாச்சார சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான உபுல்  ஜனக்க ஜயசிங்க, இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் எராநந்த ஹெட்டி ஆரச்சி உட்பட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் இந்நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

    அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 
   நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அதிகாரத்தை, நாட்டு மக்கள் எமக்கு வழங்கினார்கள்.ஆனால், அது உரிய முறையில் நிகழவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில்  இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாகவோ அல்லது போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்கள் தொடர்பாகவோ, எமது அரசின் தலைவர்கள் இது வரையில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.

மேலும்,
நாட்டின் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் இன்றும் பாராளுமன்றத்தில் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும்  உள்ளனர். இவர்களின் மிக மோசமான செயற்பாட்டின் காரணமாக,  அனைத்து  பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் மத்தியில் அவமதிக்கப்படுகின்றனர். 225 பாராளுமன்ற  உறுப்பினர்களில் 50 வீதமான உறுப்பினர்களே இந்நாட்டை நேசிப்பவர்களாக உள்ளனர்.

ஆகவே, இந்நாட்டை நேசிக்கும் தலைவர்களையே ஊடகவியலாளர்கள் மக்கள் மத்தியில் எதிர்வரும் தேர்தல்களில்  அடையாளப்படுத்த வேண்டும்.
இதிலிருந்து  ஊடகவியலாளர்கள் தவிர்ந்து நடந்து  கொண்டால், நாடு பல சிக்கல்களுக்கும் முகங்கொடுக்க நேரிடும்.

இது தவிர, நாட்டுத் தலைவர்கள் ஊழல் மற்றும் மோசடிப்  பேர்வழிகளுடன் தொடர்பு கொண்டால், பாராளுமன்றத்திலுள்ள சிறந்த உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடமாட்டார்கள். 

எமது நாட்டு மக்கள் எமக்கு வழங்கியுள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் மோசடிப்  பேர்வழிகளையும், அதனுடன் தொடர்பு கொண்டிருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணை செய்யுமாறு, நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் பல தடவைகள் கூறியுள்ளேன். அவற்றை யாரும் இது வரையில்  செவிமடுக்கவில்லை.
இதனால், நான் அவைகளை அமைச்சரவைக் கூட்டங்களில் தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து  கொண்டேன்.

நான்கரை வருட கால அரசாங்கத்தில் பல போராட்டங்களின் பிற்பாடே நவீன வசதிகளையுடைய பஸ் வண்டிகளை, பொதுமக்களின் போக்குவரத்துக்காக வழங்கியுள்ளேன்.

இது எனக்கு மன ஆறுதலையும்  திருப்தியையும் தந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளினால் கோஷங்கள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல அமைச்சுக்களின் வழமையான நடவடிக்கைகள் அனைத்தும்  முடங்க ஆரம்பித்தன. அமைச்சுக்களின் அரச அதிகாரிகளும் அசமந்தப்போக்கிலேயே  கடமையாற்ற ஆரம்பித்தனர்.

இவை மிகவும் வருத்தத்துக்குரிய விடயமாகும்.

   எனவே, எதிர்காலத்தில் இவை போன்ற எந்தத் தவறுகளும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில், அனைத்து ஊடகவியலாளர்களும் இம்முறை சிறந்த ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்து,  எமது நாட்டுக்கு முழு அளவிலான  ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர  வேண்டும் என்றார்.






( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.