( ஐ. ஏ. காதிர் கான் )

   தகப்பன் நபி இப்றாஹீம், தனயன் நபி இஸ்மாயீல் ஆகியோரது தியாக வரலாற்றுப் பின்னணியில் உதித்த இன்றைய ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது உளம் கனிந்த  பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி  பைஸர் முஸ்தபா, தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
   அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
   ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், பல்வேறுபட்ட சங்கடங்களுக்கும், மன உளைச்சலுக்கும்  உள்ளாகியிருந்த நிலையில், இரண்டாவது பெருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
   ஏப்ரல் 21 க்குப் பின்னர், புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடிய  முஸ்லிம்களின் உள்ளங்களில் இன்னும்  நிறைவான மன மகிழ்ச்சியும் உற்சாகமும்  வராவிட்டாலும் கூட, இன்றைய நன் நாளில் எமது அனைவரின் உள்ளங்களும் வழமை போன்று சீராகி உள்ளத்தில் பூரிப்பு ஏற்பட, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போமாக.
   முஸ்லிம்களில் ஒரு சிலரினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலால், நாம் யாரும் அஞ்சி வாழ வேண்டிய அவசியமில்லை. இதற்காக, எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையுமில்லை. எல்லா சமூகங்களையும் போன்று நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.
   எமது கலை, கலாசாரம், அன்றாட சமய அனுஷ்டானங்கள் போன்றவற்றில், நாம் எப்பொழுதும் போல் உறுதியாய் இருக்க வேண்டும்.
   நாம் எல்லாம் வல்ல இறைவனின் ஏவல் பிரகாரம், ஒரு உண்மையான முஸ்லிமாக இவ்வுலகில் நடந்து கொள்ளுமிடத்து, இறைவன் ஒருபோதும் எம்மைக் கை விட மாட்டான். நாம் யார்...? நம்மைப் படைத்தவன் யார்...? அவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒரு முஸ்லிம் இவ்வுலகில் வாழ்வானேயானால், அவனே உண்மையான முஸ்லிமாகும்.
   இன்றைய ஹஜ்ஜுப் பெருநாளில் பொதிந்துள்ள தத்துவங்களையும், வரலாற்றுப் பின்னணிகளையும் நாம் ஒரு முறையேனும் எமது சிந்தனையில் எடுத்துக் கொள்ள வேண்டியதும்,  இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
   இன்றைய சூழ் நிலையில், நாம் எமது அன்றாட வாழ்க்கையை, மேலும் சரி செய்து கொள்வது சாலச் சிறந்தது. இறைவன் எங்கும்  எப்பொழுதும் எம்முடனேயே இருக்கின்றான் என்ற மன தைரியம் எம்மத்தியில் வர வேண்டும். எமக்குள்ள சிறந்த ஆயுதம் துஆப் பிரார்த்தனையாகும். எனவே, இந்தப் பிரார்த்தனை மூலம், நாம் எமது உடைந்து போன உள்ளங்களை சரி செய்து கொள்ள வேண்டும். எமது அத்தனை உரிமைகளும் மீண்டும் முழுமையாகக் கிடைப்பதற்கு, இந்நன் நாளில் எல்லாம் வல்லவனிடம் இரு கரமேந்திப்  பிரார்த்திப்போமாக...! ஆமீன்...!

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.