பிரபாகரன் ரணிலை விரும்பியதில்லை என்று மஹிந்த கூறுவது உண்மையா ? புலிகளை பலயீனப்படுத்தியது யார் ?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பிரபாகரனை புகழ்கின்ற பிரச்சாரத்தை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
பிரபாகரன் கொள்கை உறுதியுள்ளவர் என்றும், ரணிலை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும் அதனாலேயே 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை ரணிலுக்கு வாக்களிக்க பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் இந்த கூற்றை ஏற்றுக்கொள்வதற்கு தமிழ் மக்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அத்துடன் தமிழர்கள் வரலாறுகளை மறந்தவர்களுமல்ல.
2005 இல் ரணிலுடன் புலிகள் மேற்கொண்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் தோல்வி ஏற்பட்டதனாலேயே எவருக்கும் வாக்களிப்பதில்லை என்ற முடிவுக்கு புலிகள் வந்தார்கள். அதனை தங்களுக்கு சாதகமாகவும் புலிகள் பயன்படுத்த தவறவில்லை.
2002 இல் ரணில் – பிரபா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் எதனையும் அமுல்படுத்துவதில் ரணில் ஆர்வம் செலுத்தவில்லை. அத்துடன் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலத்தைக் கடத்தி புலிகளை பலயீனப்படுத்துவதிலே ரணில் கவனம் செலுத்தினார்.
அந்தவகையில் புலிகளின் கிழக்கு தளபதி கருணா தலைமையிலான ஆறாயிரம் போராளிகளை புலிகள் இயக்கத்தில் இருந்து பிரித்ததில் ரணில் மீது புலிகளுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருந்தது.
அத்துடன் 2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்பு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஸ்சின் “பயங்கரவாதத்தினை ஒழித்தல்” நடவடிக்கையில், உலகில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் என்று பட்டியலிடப்பட்ட இயக்கங்களை அழிப்பதில் புஷ் தீவிரமாக செயல்பட்டார்.
அன்றைய காலகட்டத்தில் ஒருபோதும் அழிக்க முடியாத சக்தியாக பலமான நிலையில் புலிகள் இயக்கத்தினர் இருந்தார்கள். ரணில் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க படைகளின் பிரசன்னத்துடன் தங்கள் இயக்கத்தை அழிக்கும் நடவடிக்கையில் ரணில் முயற்சிப்பார் என்ற சந்தேகம் பிரபாகரனுக்கு இருந்தது.
அதனாலேயே ரணில் ஆட்சிக்கு வருவது தங்களுக்கு ஆபத்து என்று கருதிய புலிகள் இயக்கத்தினர், 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்தார்கள்.
இந்த தீர்மானம் மகிந்தவுக்கு சாதகமாக இருந்ததனால் அதனை மகிந்தவுக்கு ஓர் விலையாக நிபந்தனை விதித்து தங்கள் இயக்கத்துக்கு ஆயுதம் கொள்வனவு செய்வதற்கு மஹிந்தவிடம் இருந்து பணம் வசூலித்தார்கள் என்று அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.
எனவே ரணில் புலிகளை பலயீனப்படுத்தியதனால், தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கு செல்வதை புலிகள் தடுத்தன் மூலம் மகிந்தவை ஆட்சியில் அமர்தினார்களே தவிர், மஹிந்த மீது புலிகளுக்கு இருந்த அன்பினால் அல்ல.
புலிகளை மகிந்த ராஜபக்ஸ அழிப்பதற்கு முன்பு அவர்களை ரணில்தான் பல்யீனப்படுத்தினார் என்பதனையும் மஹிந்தவுக்கு புகழ் பாடுகின்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.