(பிறவ்ஸ்)

நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் தேசியக் கட்சிகள் மீது மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர். தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் அமைக்கப்பட்ட நல்லாட்சி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தருணம் பார்த்து காத்திருந்த மக்கள் விடுதலைக் முன்னணி (ஜே.வி.பி.) இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு களம்கண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஊடாக ஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளாராக பெயரிடப்பட்டிருக்கும் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசியலைப் பொறுத்தவரை சுத்தமான கைகொண்டவர் என பலரும் சிலாகித்துப் பேசுகின்றனர். அவர் ஜனாதிபதியாக வந்தால் நாடு நல்லாயிருக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒருகாலத்தில் இதே நம்பிக்கையைத்தான் மைத்திரிபால சிறிசேன மீதும் நாம் கண்மூடிக்கொண்டு வைத்தோம்.
ஜே.வி.பி. என்ன பின்புலத்தில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறது? அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்ன? என்பது பற்றியெல்லாம் ஆராயவேண்டிய தேவைப்பாடு உள்ளது. கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை பிடிக்கவில்லை என்பதற்காக மூன்றாவது தெரிவாக அனுரகுமார திசாநாயக்க அமைந்துவிடக்கூடாது. காரணம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகத்தான் கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவளித்திருந்தனர்.
இவை ஒருபுறமிருக்க, ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. வெற்றி பெறுவதென்பது யதார்த்தத்தை மிஞ்சிய ஒரு செயற்பாடாகத்தான் இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. இது பிரதான வேட்பாளர்களை பிரித்தாளும் தந்திரமா அல்லது 51% வாக்குகள் பெறாமல் அவர்களை தடுப்பதற்கான காய்நகர்த்தலா என்பது குறித்தும் வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவையெல்லாம் இருக்கட்டும். ஜே.வி.பி. கட்சியை எனக்குப் பிடிக்கும். அனுரகுமார திசாநாயக்க சிறந்ததொரு தலைவர். அவருக்குத்தான் நான் வாக்களிக்கப் போகிறேன் என்று கூறுபவர்கள் அவர்களின் கொள்கைகளை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தேர்தல் விஞ்ஞானபத்தில் கூறப்பட்டுள்ள, சிறுபான்மை மக்கள் கட்டாயம் சிந்திக்கவேண்டிய விடயங்களை தொகுத்து தருகிறேன்.
மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்.
மதம் சார்ந்த தீவிரவாத வெளித்தனத்தையும் இனவாதத்தையும் தோற்கடித்து தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பையும் தேசிய ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்காக “நாட்டின் முன்வைக்கின்ற விஷேட அலோசனைகள்”
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைதாரிகளான இஸ்லாம் மதவெறி பிடித்த தீவிரவாதிகளால் கத்தோலிக்க மதஸ்தாபனங்கள் பலவற்றுக்கும் உல்லாச ஹோட்டல்கள் மீதும் தொடுக்கப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் இலங்கையின் பொதுமக்களின் பாதுகாப்பும் பொதுவான சமூக வாழ்வும் பாரிய அச்சுறுத்தலுக்கும் சவாலுக்கும் உள்ளாகியது. இந்த தாக்குதலுடன் இலங்கையில் அரசியலிலும் பல சவால்கள் தோன்றின…. என்று ஆரம்பமாகிறது அந்த தேர்தல் விஞ்ஞாபனம்.
• பொதுவான மறுசீரமைப்பு ஆலோசனைகள்:
3) இலங்கையில் இன, மாத, பால் வேற்றுமையில்லாது அனைத்து நபர்களையும் குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்கள் மத்தியில் சமனானவர்களாக கருதவேண்டும். சமனாக நிர்வகிக்க வேண்டும்.
தற்போது இன, மத, பால் அடிப்படையில் வித்தியாசம் காட்டும் சட்டங்களை பொதுச் சட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும். மத உரிமை தனிப்பட்டதாக இருந்தாலும் சட்டங்கள் அரசுக்குரியதாகும். மதம் தொடர்பாக நிலவும் சட்டங்கள் அல்லது சம்பிரதாயங்கள் பொதுச் சட்டத்துக்கு சவாலாக அமையாமல் இருப்பதோடு, பொதுச் சட்டமே எப்போதும் வலுப்பெற வேண்டும்.
4) இன, மத மற்றும் பிரதேச அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஆரம்பித்து முன்னெடுக்கப்படுதல், பதிவுசெய்தல் ஆகியவற்றை தடைசெய்வதற்கான சட்டத்தை தயாரிக்க வேண்டும்.
• சட்ட மறுசீரமைப்பு:
1) நாட்டில் சகல பிரஜைகளுக்கும் உரித்துடைய பொதுச் சட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்காக தற்போதிருக்கும் முஸ்லிம் சட்டம், மலைநாட்டுச் சட்டம், தேசவழமைச் சட்டம் எனும் தனியார் சட்டம் ஆகியன திருத்தப்பட்டு ஒரு பொதுவான திருமண சட்டம் சகல இனக்குழுக்களும் பின்பற்றுவதற்கு அமைவானதாக இருக்கவேண்டும். அதேபோன்று அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இன, மத, ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமமானவர்கள் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் சகல சட்டங்களையும் தயாரிக்க வேண்டும்.
2) சிறுவர் மற்றும் பெண்கள் சமத்துவம் மற்றும் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அடிப்படையில்,
I) திருமணம் செய்வதற்கான வயது பொதுவாக 18ஆக கருதப்படல் வேண்டும்.
II) ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்துக்கு சட்டத்தில் இருக்கும் தளர்வை இரத்துச் செய்தல்.
IV) திருமணத்தில் தங்களுடைய இன, மத, மொழி மற்றும் சாதி அடிப்படையில் அழுத்தம் கொடுக்காமல், அதனை தன்னுடைய விருப்பமின்றி மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தடைவிதித்தல்.
V) திருமணப் பதிவு மற்றும் விவாகரத்து ஆகிய செயற்பாடுகளின்போது சிவில் நிர்வாக மற்றும் சாதாரண நீதிமன்ற தொகுதி நடவடிக்கைகளின் கீழ் உள்ளடக்குதல்.
• மத நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம்:
3) சகல மதங்களுக்கும் ஓர் அமைச்சு நிறுவப்பட வேண்டும்.
6) மத நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்காக தற்போதிருக்கும் சட்டங்களை முறையாக மேற்பார்வை செய்யும் விதத்தில் திருத்தியமைத்தல்.
• கல்வி:
1) இலங்கையில் கல்வி நிறுவனங்கள், பாலர் பாடசாலைகளையும் ஏனைய பாடசாலைகளையும் இன, மத அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதை இரத்துச் செய்தல். 
7) நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் பொதுவான நாற்காட்டியை (கலண்டர்) உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்.
9) 18 வயது குறைந்த எந்தவொரு பிள்ளைக்கும் சாதாரண பொதுப் பாடநெறிகளை கற்பிக்காத மதக் கல்வியை மட்டும் போதிக்கின்ற கல்வி நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாதவாறு சட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
11) பாரபட்சமின்றி சகல பாடசாலைகளிலும் இனம் அல்லது மத அடிப்படையில் இன்றி சகல பிள்ளைகளும் அழகியல் கல்வியை கற்பிப்பதற்காக சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தல். அதற்காக ஆசிரியர்களை பயிற்றுவித்தல். தற்போது மத அழுத்தங்களில் காரணமாக தடைக்குள்ளாகியுள்ள பிள்ளைகளுக்கு அழகியல் பாடநெறியான சித்திரம், சங்கீதம், நடனம், சினிமா, நாடகம், அரங்கற்கலை போன்ற பாடங்களுக்காக ஊக்குவிப்பதற்காக பெற்றோர் மற்றும் சமூகத்துக்கு ஆதரவளித்தல்.
12) வெசாக், நத்தார், புத்தாண்டு, சிவராத்திரி, ரமழான் ஆகிய உற்சவ காலங்களில் சகல மாணவ, மாணவிகளும் பொதுவாக பங்குபற்றும் உற்சவம், கலாசாரம் மற்றும் கலையம்சங்களை பாடசாலை மட்டங்களில் நடத்துதல்.
• இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்குவதற்காக அரச நிறுவனங்கள் மற்றும் 
பொதுவான மறுசீரமைப்புகள்
4) தனியார் நிறுவனங்கள், வியாபார ஸ்தாபனங்களின் பெயர்ப்பலகைகளில் (வழிபாட்டிடங்களை தவிர) மத மற்றும் இன அடையாளத்துடன் கூடிய பெயர்களை உள்ளடக்காது இருத்தல் வேண்டும்.
5) சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் இடையில் சந்தேகம், நம்பிக்கையின்மை மற்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் ஆடைகள் அணிவதை நிறுத்தல். (உதாரணமாக புர்கா, முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் ஆகியன)
• மத கல்விமான்களுக்குரிய விசேட கடமையும் பொறுப்பும்:
2) முஸ்லிம்கள் வர்த்தகம் மற்றும் மதச் செயற்பாடுகளுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்ட பிரசைகளாக படிப்படியாக தள்ளப்பட்டு வருவதை காணமுடிகிறது. ஒப்பீட்டளவில் ஏனைய சமூகத்திலிருந்து விலகி நிற்கின்றனர். மக்களிடையே புரிந்துணர்வு கட்டாயம் தேவையென்பதால் கலை செயற்பாடுகள், தொழிற்சங்க நடவடிக்கைகள், பெண்கள் அமைப்புகளின் செயற்பாடுகள் விளையாட்டு மற்றும் ஏனைய பொது சமூக வாழ்க்கையுடன் ஒன்றுகலப்பதற்கு அவர்களை ஊக்குவித்தல்.
6) இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்குள்ள (சிங்களம் மற்றும் தமிழ் பெண்களை ஒப்பிடும்போது) வரையறை சில முஸ்லிம் நாடுகளிலும் இல்லையென்பது முஸ்லிம் நிபுணர்களின் கருத்தாகும். ஆகையால், முஸ்லிம் பெண்களுக்கு நாட்டின் ஏனைய பெண்களுடன் பொது சமூக, கலாசார வாழ்க்கையில் உள்நுழைவதற்கான ஆகக்குறைந்த வழிகளை முஸ்லிம் சமூகம் நிர்மாணித்துக் கொடுத்தல்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.