- நாச்சியாதீவு பர்வீன் - 

இலங்கை அரசியலில் எதிர்பாராத சடுதியான மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவ்வாறான சடுதியான நிகழ்வுகளின் மூலம் ஆட்சியில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லையானாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை தாக்கம் செலுத்துகின்ற பிரதான காரணியாக அமைந்து விடுகின்றது. இதற்க்கு நல்ல உதாரணங்களாக அண்மைய சில நிகழ்வுகளை அடையாளமிட்டு கூற முடியும். இதில் குறிப்பாக அண்மையில் ஸஹ்ரான் என்ற முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான,வெறுக்கத்தக்க தற்கொலை குண்டு தாக்குதலும் அமைந்தது எனலாம் .
இந்த குண்டு தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவைத்து விசாரணைக்குற்படுத்தி, குறித்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்த பேரினவாத சக்திகள் கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவர்களின் சூழ்ச்சி அவர்கள் நினைத்த மாதிரி நூறுவிகிதம் பலனளிக்கவில்லை. அதற்க்கு பிரதானமான காரணம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற வலுவான அரசியல் தலைமைத்துவங்களாகும். அதிலும் குறிப்பாக ஆளும் தரப்பில் அதிகாரமிக்க அமைச்சு பொறுப்புக்களில் முஸ்லிம் தலைமைகள் அமர்ந்திருப்பதும், இந்த நல்லாட்சியை அமைப்பதில் மிக முக்கிய பங்காளிகளாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்னின்று செயற்பட்டமையும், அரசுக்கெதிரான சூழ்ச்சிகளின் போது அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டு ஜனநாயகத்தை காப்பதில் முஸ்லிம் தலைமைகளின் செயற்திறனும் முஸ்லிம் சமூகத்தை பேரினவாத சக்திகளிடமிருந்து காப்பதற்கு உதவியது எனலாம்.
ஆனால் முஸ்லிம் தலைமைகளின் சக்திக்கு அப்பாலும் சில வன்முறைகளும், அடாவடித்தனங்களும் திட்டமிட்ட அடிப்படையில் நடந்தேறின. முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வன்முறைகளின் பின்னணியில் வலுவான அரசியல் காரணங்கள் இருப்பதும், அதனை திட்டமிட்டவர்கள் தொடர்பிலான தகவல்களும் தற்போது வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அரசாங்கத்தை முற்றுமுழுதாக நம்பி செயற்பட்டு வந்த முஸ்லிம் சமூகத்திற்கு அரசாங்கம் எவ்விதமான நன்றிக்கடனையும் செலுத்தவில்லை என்கின்ற விமர்சனம் பரவலாக முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் உலவி வருகின்றது. பாதுகாப்பு தரப்பினரின் முன்னிலையிலேயே சகல வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டன என்கின்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும், அரசின் கையாலாகாத தனத்தை இது மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுவதோடு, இந்த அரசின் பங்காளிகளாக முஸ்லிம் தலைமைகளுக்கு இது சமூகத்தின் மத்தியில் பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது அமைச்சுப்பொறுப்புக்களை துறந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். ஜூன் 3 ஆம் திகதி முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தபோது அதற்கான காரணத்தை அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவாக கூறியிருந்தார்கள். இந்த ஊடக சந்திப்பானது அன்றைய தினமே சகல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு மறுநாள் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியாகியது.
அமைச்சுப்பொறுப்புகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதானமாக பின்வரும் காரணங்களை முன்வத்தே தமது அமைச்சுப்பொறுப்புக்களை துறப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்கள்.
A1-முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் திட்டமிட்ட செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் .
A2- பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் எவராவது துணை போயிருந்தால் அவர்கள் எவ்வாறான உயர்பதவிகளை வகித்தாலும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தலும் சுயாதீனமாகஅவற்றை மேற்கொள்ள வழிவிடலும் ,
A3- பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி அப்பாவிகளை விடுதலை செய்தல்.
A4-நாட்டில் இனநல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் மீண்டும் நிறுவுதல் ,
மேற்சொன்ன காரணங்கள் தவிர்த்து வேறு எந்த கோரிக்கைகளையும் அவர்கள் அந்தநேரத்தில் முன்வைக்கவில்லை என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாவின் பின்னர் அதன் பிரதிபலனாக சில விடயங்கள் சடுதியாக அமுலுக்கு வந்தன
B1-நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட திட்டமிடப்பட்டிருந்த வன்முறைகள், உடனடியாக கட்டுக்குள் வந்ததன.
B2- அரச குற்றப்புலனாய்வு துறையினரும் , பாதுகாப்பு தரப்பினரும் விசாரணைகளை துரிதப்படுத்தி முடித்து , முஸ்லிம் அமைச்சர்களோ அல்லது பதவி துறந்த முஸ்லிம் ஆளுநர்களோ குறித்த தீவிரவாத செயலோடு சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்கின்ற முடிவினை தமது இறுதி அறிக்கையில் பகிரங்கப்படுத்தினர் . .
B3-குண்டு வெடிப்பு சம்பவத்துடன் சம்பந்தப்படாமல் புனையப்பட்ட,சில்லறை குற்றசாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட பெரும்பாலானவர்வகள் விடுதலை செய்யப்பட்டு ( Dr ஷாபி உட்பட) சிலர் பிணையிலும் விடப்பட்டுள்ளனர்.
B4- பெரும்பான்மை சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் மெல்ல உருவாகிவருகின்ற ஆரோக்கியமான சூழல் உருவாகிவருகிறது.
இந்த சடுதியான முன்னேற்றகரமான மாற்றம் அதிஸ்டவசத்தால் நிகழ்ந்தது என்று வாதாடமுடியாது. ஏனென்றால் முஸ்லிம் சமூகத்தை சுற்றி பின்னப்பட்டிருந்த இனவாத வலையில் இருந்து இந்த சமூகத்தை சேதாரமில்லாமல் காக்குகின்ற அரும்பணியை முஸ்லிம் தலைமைகள் செவ்வனே செய்துள்ளன. இதன் அர்த்தம் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்பதல்ல மாறாக கடுமையான நெருக்குவாரங்களில் இருந்து முஸ்லிம் சமூகம் தற்காலிகமாக மீற்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இயங்கும் “ காரணமின்றி கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கும் செயலணிக்கு “ கிடைத்த முறைப்பாடுகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தூடாக கையாளப்பட்டு , 90% மானோர் பிணையில் அல்லது முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணியவர்கள் அல்லது ஏதாவது சட்டவிரோத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என 18 கோப்புகளே எஞ்சியுள்ளன. நீண்ட விசாரணைகளுக்கு ஆளாகவேண்டியுள்ளது . இவர்களின் விடுதலைக்கு மு.கா செயளணியினர் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இராஜினாமாவின்போது முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதுடன் அதற்கு மேலதிகமாக –
அப்பாவிகளின் கைதுகள் முற்றாக நிறுத்தப்பட்டு உறுதிசெய்யப்பட்ட ஆதாரங்களுடன் மட்டுமே தற்போது கைதுகள் இடம்பெறுகின்றன.
முஸ்லிம்களின் வீடுகள் , வியாபார நிலையங்கள் பள்ளிவாயல்கள் போன்ற இடங்களில் நடாத்தப்பட்ட திடீர் சோதனைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன
குண்டுவெடிப்பினை தொடர்ந்து பூதாகாரமாக்கப்பட்ட ஹபாயா பிரச்சினை புதியதொரு சுற்றுநிருபத்தின் மூலமாக தீர்வுக்கு வந்தது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சர்வதேச ஊடகங்களின் பல நேர்காணல்களுக்கூடாக கொண்டு சென்றதால் சர்வதேசமும் தமது வலுவான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்தது .
எத்தகைய காரணங்களை முன்வைத்து முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை துறந்தார்களோ அவற்றில் கணிசமான அடைவை அரசின் துணையுடன் எட்டியுள்ளதுடன் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளவிருந்த பாரிய பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு ஓரளவு சுதந்திரமாக நடமாடும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் கூட்டு இராஜினாவின் போது முன்வைக்கப்படாத கோரிக்கைகளை காரணம் காட்டி அமைச்சுக்களை பொறுப்பெடுக்காமல் காலம் தாழ்த்துவது ,
பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் “ பேரம் பேசல் “ போன்ற பிழையான மனப்பதிவுகளை ஏற்படுத்தலாம் ,
அஸ்கிரிய, மல்வத்து உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோள்களை தொடர்ந்தும் புறந்தள்ளுவது அவர்களை அகௌரவப்படுத்துவதாக அமையலாம்.
பெரும்பான்மை சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் மெல்ல உருவாகிவருகின்ற ஆரோக்கியமான சூழலில் பாதிப்புக்களை உண்டாக்கலாம் .
இவற்றுக்கு புறம்பாக பேசப்படும் பிரச்சினைகளான
கல்முனை உள்ளூராட்சி எல்லைப்பிரச்சினை ,
முஸ்லிம் விவாக -விவாகரத்து சட்டம்,
மத்ரஸாக்களின் பாடத்திட்டம் தொடர்பிலான முரண்பாடு ,
புர்கா-நிகாப் தடை விவகாரம்
போன்றவை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே அவ்வப்போது பேசப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதுமாக இருந்த பிரச்சினைகளாகும். அத்தோடு மேற்சொன்ன எந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை வேண்டி இந்த இராஜினாமா இடம்பெறவில்லை என்பதனை நாம் மனங்கொள்ளவேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறித்த காலப்பகுதியில் பல்வேறு சமூக செயற்பாடுகளில் தனித்து நின்று செயற்பட்டது. குருநாகல், புத்தளம்,கம்பஹா மாவட்டங்களில் சிங்கள காடையர்களினால் திட்டமிட்டு நாடாத்தப்பட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அப்பகுதிகளில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள், வாகனங்கள், அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பிலான சேதவிபரத்தையும், இழப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையையும் துல்லியமாக பெற்று அரசுக்கு வழங்கியது. அதன் பிரதிபலனாக அண்மையில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கான இழப்பீடுகள் அரசினால் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புர்கா -நிகாபுக்கு மாத்திரம் தடை என்றிருந்த போதும் அபாய அணிவதும் குற்றமாக சித்தரிக்கப்பட்ட போது முஸ்லிம் பெண்கள் மானசீகமாக பாதிக்கப்பட்டார்கள். இதற்காக முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைமை ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கு இணங்க ஒரு செயலணியை அமைத்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டது.
அத்தோடு புனையப்பட்ட கைதுகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றும் முகமாக அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வீணான கைத்துகளில் இருந்து பலரை காப்பாற்ற ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கியது. மேற்சொன்ன செயற்பாடுகள் அனைத்தையும் ஒருகட்சியாக இருந்து முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே செய்தது என்பது யாவரும் அறிந்த உண்மை.
இவைகள் அந்தக்கட்சியின் கடமையும் கூட. இவைகள் கூட்டு இராஜினாவுக்கு முன்னரே இருந்து செய்யப்பட்டு வந்த செயற்பாடுகளாகும்.
அத்தோடு கூட்டாக இராஜினாமா செய்தவர்களுள் ஐக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் பிரதிநிதிகள் ஏற்கனவே அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள நிலையில் , மற்றைய கட்சியான மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகள் அனைவரும் அமைச்சுக்களை பொறுப்பேற்க தீர்மானித்துள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்பதா , இல்லையா என்கிற கருத்து முரண்பாடு 29.07.2019 அன்று பேசப்பட்டபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தின் முடிவின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் பதவி ஏற்பதில்லை என்கின்ற முடிவில் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதியாக இருந்தார். ஆனால் இராஜினாமாவுக்காக முன்வைத்த காரணங்களில் கணிசமான அடைவினை எட்டியிருப்பதனாலும், தேர்தல்கள் நெருங்கி வருகிற சூழலில், அமைச்சரவையில் வளைந்து கொடுக்காத முஸ்லிம் தலைமைத்துவத்தின் அவசியத்தை முன்னிறுத்தியும் தலைவர் ஹக்கீமை அமைச்சுப்பொறுப்பை ஏற்குமாறு அன்றையதினம் இது விடயமாகவும் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் குறித்தும் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்குபற்றிய மு .காவின் உயர்பீட செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் உயர்பீடத்தில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களும் பாராளுமன்ற பிரதிநிதிகளுமான பைசல் காசிம், அலி ஸாஹிர் மௌலானா, எம் .எஸ் .தௌபீக், ஏ .எல் .நசீர், எம்.ஐ .மன்சூர் ஆகியோர் வலியுறுத்தினர்.
ஆகவே மிக முக்கியமான இக் காலக்கட்டத்தில் அமைச்சரவை தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது என்ற நோக்கில் தலைவர் ஹக்கீம் மாத்திரம் அமைச்சுப்பொறுப்பை ஏற்பதென்றும் ஏனைய மு.கா சார்பிலான முன்னாள் அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறித்த பிரச்சினைகளில் நியாயமான அடைவுகளை எட்டும்வரை எவ்வித அமைச்சுப்பதவிகளையும் ஏற்காது தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதென்றும் கூட்டாக முடிவெடுத்தனர் .
அமைச்சுப்பொறுப்புக்களை மீளப் பாரமெடுத்ததற்கு அடுத்த தினம் ( 30.07.2019 )காலையில் கூடிய அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டிருந்த “நிகாப் – புர்கா” தடைக்கான அமைசரவைப் பத்திரம் , அமைச்சர் , தலைவர் ஹக்கீம் அவர்களின் பலத்த கண்டனத்தினால் பிற்போடப்பட்டமை தலைவர் ஹக்கீம் மீளவும் அமைச்சுகளைப் பொறுப்பேற்றதன் உடனடிப் பிரதிபலனாகும் . அத்தோடு மாகாண சபைதேர்தலை புதிய தொகுவாரியான முறையில் நடத்துவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக அரசல்புரசலாக கதை வெளியாகியது, முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையில் இல்லாத நிலையில் அந்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் 41 ஆக இருந்த முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது வெறும் 13 க்கு மட்டுப்படுத்தப்படும் அபாயம் நிகழும். எனவே முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் மிக முக்கியமாகும்.
அமைச்சர்களான ஹலீம் -கபீர் ஹாஷிம் ஆகியோர் அமைச்சரவையில் இருக்கின்றார்கள் தானே இந்தவிடயத்தை அவர்கள் பார்க்க மாட்டார்களா? என்ற கேள்வி சில புத்திசாலிகளுக்கு எழலாம். உண்மையில் அவர்களும் இந்த கூட்டு இராஜினாமாவின் பங்காளிகளாக இணைந்து கொண்டமையே சகல அரசியல் தரப்புக்களையும், பௌத்த உயர்பீடங்களையும் ஆழமாக சித்திக்க வைக்க ஏதுவாக அமைந்தது. அவர்களின் இராஜினாமாவானது நன்றிக்கும்,பாராட்டுக்கும் உரியது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் அவர்கள் இருவரும் பெரும் தேசிய கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்த கட்சியின் கொள்கைக்கும்,கோட்பாட்டுக்கு, கட்டளைகளுக்கும் செவிசாய்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது அதனால் அவர்களினால் சுயமாக முடிவெடுக்க முடியாது. அவர்களின் கட்சி தலைமையின் விருப்பத்திற்கு அமையவே பெரும்பாலான விடயங்களில் அவர்கள் முடிவெடுப்பார்கள். ஆனால் ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைமைகளுக்கு அவ்வாறான இக்கட்டான நிலை கிடையாது சமூகம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அரசுக்கெதிராக முடிவெடுக்கின்ற திராணியும், அதிகாரமும் நூறுவிகிதம் உண்டு. அது பலதடவைகள் நிரூபிக்கப்பட்டும் உள்ளன,

எனவே முஸ்லிம் தலைமைகளின் பதவி துறப்பு எவ்வாறு கொண்டாடப்பட்டதோ ! அவ்வாறே அவர்களின் பதவியேற்பும் சமூக நலனுக்காகவே என்கின்ற உண்மையை முஸ்லிம் சமூகம் ஏற்கத்தான் வேண்டும். ஒரு சிக்கலான அரசியல் சுழிக்குள் நாம் சிக்கியிருக்கிறோம் அதிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் சக்தியை இறைவன் நமது முஸ்லிம் தலைவர்களுக்கு வழங்குவானாக என்று பிரார்த்திப்போம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.