கம்பஹாவுக்கு 3 கோடி ரூபா ஒதுக்கீடு!
இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை
.............................................................................
கம்பஹா மாவட்டத்தில் மூன்று இடங்களில் வைத்திய சேவைகளை மேம்படுத்துவதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 3 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வாரம் பைசல் காசிமுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் மேற்படி நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி,திஹாரியில் புதிதாக சிகிச்சை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதனை நிர்மாணிப்பதற்கு மொத்தமாக மூன்றரைக்கோடி ரூபா தேவைப்படுகிறது.மீதிப் பணம் அடுத்த வருடம் ஒதுக்கப்படும்.

மீரிகம தொகுதியில் பசியாலவில் உள்ள வைத்தியசாலையில் திருத்த வேலைகளை செய்வதற்காகவும் ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தனகல கஹட்டோவிட்ட பகுதியில் புதிதாக ஒரு வைத்திய நிலையத்தை நிறுவுவதற்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழங்கப்பட்டுள்ள காணியில் அந்த ஊர் மக்கள் உடனடியாக மண் நிரப்பி தயார்படுத்தித் தந்தால் நிர்மாணப் பணிகளை உடன் மேற்கொள்ள முடியும் என்று ஷாபி ரஹீம் தெரிவித்தார்.

[ஊடகப் பிரிவு]

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.