ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்- பாகம் -7
=================================
வை எல் எஸ் ஹமீட்

முஸ்லிம்கள் ஜே வி பி யை ஆதரிக்கலாமா?
——————————————————-
ஐ தே க யின் வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.  இன்னும் குழப்பநிலை. ஶ்ரீ சு க யின் நிலைப்பாடும் இன்னும் தெளிவில்லை.  இந்நிலையில் அறிவிக்கப்பட்ட இருவேட்பாளர்கள் கோட்டா, அநுர.

சில முஸ்லிம்கள் ரணிலின் ஆட்சியிலும் அடிவிழுகிறது. அதைவிட மஹிந்தவின் ஆட்சியில் அடிவாங்குவதே எங்களுக்குப் பெருமையென எப்போதோ அப்பக்கம் சென்றுவிட்டார்கள்.

அநுர வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கூட்டத்தின் சனத்திரளைக் கண்ட சிலர் அநுரவின் புகழ்பாட ஆரம்பித்துவிட்டார்கள். அநுர நல்லவர், துவேசம் இல்லாதவர், இவ்வளவு காலமும் இவ்விரு கட்சிகளுக்கும் வாக்குப்போட்டு அடிவாங்கியதைத்தவிர எதைக்கண்டோம். எனவே, இம்முறை அநுரவுக்குப் போடுவோம்; என்கிறார்கள்.

அநுரவுக்கு அளிக்கின்ற வாக்குகளால் அவர் வெற்றிபெறுவாரா? மாறாக, அவ்வாக்குகள் இன்னுமொரு வேட்பாளரை இலகுவாக ஜனாதிபதியாக்கத்தான் உதவப்போகின்றதா? மறுவார்த்தையில் கூறுவதானால் அநுரவுக்குப் போடுவதென்பது நீங்கள் வாக்களிக்க விரும்பாத ஒருவருக்கு சாதகமான வாக்காக மாறப்போகின்றதா? என்பதையெல்லாம் சிந்திக்க அவர்கள் ஆயத்தமாக இல்லை. முஸ்லிம் சமூகம் மீண்டுமொருமுறை அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

இந்நிலையில் ஜே வி பி இற்கு வாக்களிப்பது தொடர்பாக சற்று கவனம் செலுத்துவோம்.

ஜே வி பி யிற்கு நன்றிக்கடன்
————————————-
உண்மையில் முஸ்லிம்கள் ஜே வி பி யிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றார்கள். இனவன்செயல்காலங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைவிடவும் காத்திரமாக முஸ்லிம்களுக்காக குரல்கொடுப்பவர்கள் அவர்களே.

நம் வாக்கால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியோ, நம்மால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட பிரதமரோ பேரினவாத சக்திகளுக்கெதிராக குரல்கொடுக்கத் தயங்கியபோது; அநியாயத்திற்கெதிராக குரல்கொடுக்காமல் தம் வாக்குகளைப் பாதுகாக்க மௌனம் காத்தவேளைகளிலெல்லாம் வாக்குகளைப்பற்றி யோசிக்காமல் நியாயத்தைப் பேசியவர்கள் அவர்கள். இன்றும் பேசிக்கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மதவாதிகளின் அடக்குமுறைகளுக்கு பெரும்பாலும் இடமிருக்காது; என்று நம்பலாம். அதற்காக எல்லாம் சுகமாக இருக்கும்; என நினைக்க முடியாது.

ஒரே நாடு; ஒரே சட்டம்
——————————
அவர்களும் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள். எல்லோரும் ஒன்று; என்பதுவும் அவர்களது நிலைப்பாடு.

ஒரே நாடு; ஒரே சட்டம் என்பது ஏனைய தரப்புக்கள் கூறுவதைப்போன்று வீரியத்துடன் முஸ்லிம்களை இனவாத நோக்குடன் இலக்கு வைப்பதாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவர்களது கோட்பாட்டு ரீதியான எல்லோருக்கும் ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் முஸ்லிம் தனியார் சட்டம் துடைத்தெறியப்படலாம். அதேநேரம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கெதிராக அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் சில கருத்துக்களை வெளியிட்டும் இருக்கிறார்கள்; என்பதும் கவனிக்கத்தக்கது.

எல்லோரும் ஒன்று; என்பது வெளித்தோற்றத்தில் சிறந்த நிலைப்பாடு. மனிதனென்றமுறையில், பிரஜையென்றமுறையில் சகலரையும் சமமாக நடாத்துவதென்பது வரவேற்கத்தக்கது. இந்நாட்டின் இன்றைய அவசரத்தேவையும் அதுதான். ஆனால் ‘ எல்லோரும் ஒன்று’ என்ற பதம் ஒரு திட்டமிட்ட வரையறைக்கு அப்பாற்பட்டது.

ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவ அடையாளங்களுக்கு மதிப்புக்கொடுத்து ஒவ்வொரு சமூகமும் தமது வேறுபாட்டைப்பேண அனுமதிப்பது; என்பதில் “ ஒவ்வொருசமூகமும் தமது வேறுபாட்டைப்பேண அனுமதிப்பது” என்பது எல்லோரையும் ஒரேவிதமாக நடாத்துவதுதான். அவருக்கு அவரது வித்தியாசத்தை அனுமதிப்பதுபோல் எனக்கு எனது வித்தியாசத்தை அனுமதிப்பது ஒரே விதமாக நடாத்துவதுதான்.

அதேநேரம் பொதுமைகளை அடையாளம் கண்டு அவற்றை மேலும் ஊக்கப்படுத்தி அப்பொதுமை விடயத்தில் எல்லோரையும் சரிசமமாக நடாத்துவதும் “ எல்லோரையும் ஒரேவிதமாக நடாத்துவதுதான்”. இதுதான் Unity in diversity ஆகும். இதைத்தான் Integration என்றும் கூறுவார்கள்.

மாறாக, பெரும்பான்மை சமூகத்தின் சில அடையாளங்களை அளவுகோலாக எடுத்து அல்லது சோசலிச, கம்யூனிச நாடுகளைப்போன்று அவர்களது சித்தாந்த ரீதியான சில அளவுகோல்களை எடுத்து அவற்றிற்கு பொதுப்பெறுமானம் கொடுத்து அவற்றை பொதுவிதியாக மாற்றமுனைந்தால் சிறுபான்மைகள் தங்கள் தனித்துவத்தை இழந்த சமுதாயங்களாக மாறவேண்டி ஏற்படும்.

தங்கள் சித்தாந்தங்களை வாழவைப்பதற்காக இருமுறை கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பல உயிரிழப்பிற்கு காரணமானவர்கள்; என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். உயிர்களைவிட தம் சித்தாந்தங்கள் பெறுமதியானவை; என்பதை அக்கிளர்ச்சிகளினூடாக நிரூபித்தவர்கள். அதிகாரம் கிடைத்தால் சீனாவின் ‘உகூர்’ முஸ்லிம்களின் நிலை நமக்கும் வருமா? அல்லது அசர்பைஜானின் அன்றைய நிலைவருமா? என்ற கேள்விகள் நம் சிந்தனையை விட்டு தப்பிக்கமுடியாது.

ஜே வி பி, சித்தாந்த ரீதியாக இனவாதத்திற்கெதிரான கட்சி. ஆனால் அந்தக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவராக இருந்த விமல் வீரவன்சவுக்குள் எவ்வளவு பெரிய இனவாதி ஒழிந்திருந்திருக்கின்றார்; என்பதை அவர் வெளியே வந்தபோதுதான் கண்டோம்.

சிலவேளை, அன்று மஹிந்த அவரை வெளியில் எடுக்காமல் இருந்திருந்தால் இன்று அவர்தான் ஜே வி பி தலைவர்; ஜனாதிபதி வேட்பாளர். நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்; என சிந்தித்துப் பாருங்கள். இருக்கின்ற கட்சியைப்பொறுத்து சிலவேளை சற்று அடக்கி வாசிக்கலாம். அதற்காக அசல் மாறாது. இதற்கு சிறந்த உதாரணம்தான் சம்பிக்க அவர்கள்.

இந்நிலையில் ஜே வி பி யிற்குள் இனவாதிகளே இல்லை; என்று யாரும் சான்றிதழ் வழங்கமுடியாது. ஆனாலும் மற்றவர்களைவிட இனவாத வீரியத்தில் குறைவாக இருக்கலாம்.

தேசியப் பார்வை மற்றும் பொருளாதாரக்கொள்கை
—————————————————————-
இன்று உலகில் எந்தவொரு நாடும் தனித்து வாழமுடியாது, அமெரிக்கா உட்பட. ஏதோ ஒரு விதத்தில் அடுத்த நாடுகளில் தங்கித்தான் வாழவேண்டும். ஆனாலும் சரணாகதி அல்லது அடிமை நிலைக்கு செல்லமுடியாது.

ஜே வி பி யைப் பொறுத்தவரை சர்வதேசத்தை உதாசீனம்செய்து வாழலாம்; என்ற அவர்களது நிலைப்பாடு அவர்களது பேச்சில் அடிக்கடி தொனிக்கிறது. இது நாட்டின் எதிர்காலத்திற்குப் பாதகமானது.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அவர்களது கொள்கைகளில் தெளிவு இல்லை. ஆனாலும் சந்தைப் பொருளாதாரத்திற்கு அப்பால் ஒருவகை மூடிய அல்லது இருண்ட பொருளாதார கொள்கையே அவர்களது கோட்பாடாகத் தெரிகிறது.

இன்று ரஷ்யா, சீனா போன்ற நாடுகள்கூட மூடிய பொருளாதாரத்திலிருந்து வெகுதூரம் வெளியே வந்துவிட்டார்கள்.

வெற்றிபெறும் வாய்ப்பு
—————————-
இவ்வாறு கோட்பாட்டு ரீதியான பல பிரச்சினைகள் ஒருபுறம். அவையெல்லாம் ஒரு புறம் தள்ளிவிட்டு வாக்களிப்பதென்றாலும் அவர்கள் வெற்றிபெற முடியுமா? என்பது அடுத்து சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகள் 5.75% ஆகும். இத்தேர்தலில் இன்னும் இரண்டொரு வீதம் அதிகரிக்கலாம். ஒட்டுமொத்த 10% முஸ்லிம்களும் வாக்களித்தாலும் வெற்றிபெற முடியுமா?

சில சகோதரர்கள், இதுவரை மற்றவர்களுக்கு மாறிமாறி வாக்களித்து எதனைக்எண்டோம் அடிவாங்கியதைத் தவிர; என்கிறார்கள். இன்னும் சிலர் வெற்றிபெறுபவர்க்கு மட்டும்தானா வாக்களிக்க வேண்டும்? வெற்றிபெற்றவர் நமக்கு நன்மை செய்துவிடுவாரா? எனவே, இம்முறை இவர்களுக்கு வாக்களிப்போம்; என்கிறார்கள்.

இவர்கள் இத்தேர்தலில் முஸ்லிம்களின் பரிமாணத்தைப் புரியாமல் பேசுகின்றார்களா? அல்லது “வாக்கு” என்பது என்ன வென்று தெரியாமல் அதனை ஒரு வெறும் புள்ளடியென நினைத்துக்கொண்டு பேசுகின்றார்களா? என்பது புரியவில்லை.

இத்தேர்தலில் போட்டியிடப்போகின்றவர்கள் அனைவருமே இனவாத சிந்தனை உடையவர்கள்தான் என்பது தெளிவாகின்றது. ஜே வி பி யிற்கும் ரணிலிற்கும் சில விதிவிலக்குகள் இருக்கின்றபோதிலும். ஆயினும் ரணில் தொடர்பாகவும் சில பிரச்சினைகள் நமக்கு இருக்கின்றன. அது தொடர்பாக பின்னர் பார்ப்போம். அதேநேரம் இவர்களது இனவாத வீரியத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கின்றது.

இங்கு கேள்வி ஒரு ஆபத்தில் பாவிக்கக்கூடிய ஒரு ஆயுதம் தம்கைகளில் இருக்கும்போது அதனை அந்த ஆபத்தில் பாவிக்காமல் யாராவது அதனைக் கடலில் வீசுவார்களா? இதனை ஏன் இந்த சகோதரர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை.

அவர்களுக்கு வெற்றிபெறும் வாய்ப்பிருந்தால் அவர்களின் கொள்கை தொடர்பாக வாதப்பிரதிவாதங்களை நடத்தலாம். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களது கொள்கைகளுக்கு மத்தியிலும் ஜே வி பி யால் முஸ்லிம்களுக்கு பாதிப்புக்குறைவே! என ஒரு தரப்பு வாதிடலாம்; வாக்களிக்க முற்படலாம். அதற்கு எதிராக அடுத்த தரப்பு வாதிடலாம். ஆனால் அவர்கள் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்கின்றபோது அவர்களுக்கு அளிக்கும் வாக்கு கடலில் கரைத்த உப்பாகாதா? ஏன் இவர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை!

மறுபுறம் ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் இனவாத சிந்தனையுடையவர்கள்தான் என்கின்றபோது அதிகூடிய இனவாதத்தையுட, ஆபத்தை ஏற்படத்தக்கூடிய வேட்பாளரைத் தோற்கடிக்க நமது வாக்கு எனும் ஆயுதத்தை பாவிக்கமுடியாதா? அதன்மூலம் நமது பாதிப்பை தடுக்கத்தான் முடியாவிட்டாலும் ஓரளவு குறைக்க முடியாதா? ஏன் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள்?

எனவே, சகோதரர்களே! சிந்தியுங்கள். குறிப்பாக அநுரவை நன்றிக்கண்ணோடு நீங்கள் நோக்குவதில் தவறில்லை. அதற்காக அவருக்கு வாக்களிப்பதாக நினைத்து கடலில் உங்கள் வாக்கை வீசுவதன்மூலம் நாங்கள் கட்டாயம் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டிய ஒரு வேட்பாளருக்கு எதிராக பாவிப்பதற்கு உங்கள் கைகளில் இருந்த ஆயுதத்தை இழந்து நிராயுதபாணியாகப் போகிறீர்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு ராணுவப்பட்டாளம் எல்லையில் ஆயுதங்களுடன் காவல் நிற்கின்றது. எதிரி நாட்டுப்படை வருகின்றபோது சில ராணுவ வீரர்கள் தம்கைகளில் இருந்த ஆயுதங்களை தூக்கிவீசிவிட்டு வெறுங்கையுடன் நின்றால் அது எவ்வளவு துரோகமானது. எதிரி அவர்களை இலகுவாக வெற்றிகொள்வான். அதன்பின் போராடியவனும் நிராயுதபாணியும் எல்லோரும்தான் பாதிக்கப்படுவார்கள்.

அதேபோல்தான் இத்தேர்தலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு முடிந்தளவு எமது ஆபத்தைத் தவிர்க்கூடிய, முடியாவிட்டால் குறைக்கக்கூடிய திசையில் வாக்கு என்னும் அவ்வாயுதத்தைப் பிரயோகிக்க வேண்டும். மாறாக ஜே வி பி யிற்கு உதவுவதாக நினைத்து கடலில் அதைவீசி சமூகத்தைப் பலவீனப்படுத்தி சமூகத்திற்கு துரோகம் செய்துவிடாதீர்கள்.

( தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.