( மினுவாங்கொடை நிருபர் )



   எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், 
கம்பஹா மாவட்டத்தின் தாழ் நிலங்களில்  மூன்று நாட்களாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது
 இதேவேளை, கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளால் நீர் வடிந்தோடாமை காரணமாக, வத்தளை பிரதேசத்தின் சில இடங்களில் வௌ்ள நீர் தேங்கிக் காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

   தொடர்ச்சியாக மூன்று நாட்களாகப்  பெய்து வரும் கடும் மழை காரணமாக, நீர்கொழும்பு நகரின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.    நீர்கொழும்பு - தளுபத்த, கட்டுவ, பெரியமுல்ல, கட்டுவாப்பிட்டிய உட்பட பல பிரதேசங்களின் தாழ் நிலங்களில் நீர் தேங்கியுள்ளது.
   பெரியமுல்ல - தெனியாய வத்தையில் 190 குடும்பங்களும், செல்லக்கந்த பிரதேசத்தில் 40 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

   பெரியமுல்ல ஜயரத்ன வீதியில் உள்ள இறப்பர் வத்தை, கோமஸ்வத்தை ஆகிய பிரதேசங்களில் 300 குடும்பங்கள் வரை அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளன. அவர்கள் தற்போது அப்பிரதேசங்களிலிருந்து  வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

   நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் கட்டுவாப்பிட்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்த வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

   நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியின் மஹ ஹுணுப்பிட்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டமையால், கட்டுநாயக்க - நீர்கொழும்பு பிரதான வீதியில் சுமார் இரண்டு அடியளவில் வெள்ள நீர் தேங்கியிருந்தது.

   இந்நிலையில், அதி கூடிய மழை வீழ்ச்சி கட்டுநாயக்கவில் பதிவாகியுள்ளது. அங்கு 219 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

   இது தவிர, சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களில் 12,109 குடும்பங்களைச் சேர்ந்த, 48,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

   சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 282 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 878 குடும்பங்களைச் சேர்ந்த 3,488 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

   இதேவேளை, அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு பொலிஸாரால் விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

011 2587225 மற்றும் 
011 2454576 ஆகிய இலக்கங்கள் ஊடாக அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.