சோமாலியா மக்களுக்கு விமானத்தில் இருந்து தாராளமாய் உணவு கொண்டு வந்து கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர்.ரணில் கேட்டு இருந்தால் நாலு முழம் பெட்சீட்டைப் போட்டுக் கொண்டு தூங்கி எழுந்து ரிசல்ட் பார்க்க வேண்டிய அகோரமாய் பரிணமிக்க இருந்த ஜனாதிபதி தேர்தல் கடைசி நேரத்தில் யூ டேர்ன் எடுத்து இருக்கிறது.சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராகி இருக்கிறார்.உலக மக்களின் பொது பிரச்சினைகளில் ஒன்று போல இளித்துக் கொண்டு இத்தனை நாளாய் இழுத்தடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குளறுபடியை ‘செட்டிங்’என்று சிலர் சொல்கிறார்கள்...இல்லை....வேறு வழி இன்றி ரணில் கொடுத்து தொலைத்து இருக்கிறார்....
ஃபேஸ்புக் கருத்துக் கணிப்புக்களில் தேர்வு செய்யப்படும் ஜனாதிபதிகளை ஒதுக்கிவிட்டு லொக் அவுட் செய்துவிட்டு சூழலை அவதானித்தால் தற்போதைய அரசியலைப் புரிந்து கொள்ளலாம்.கோட்டா ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தருணத்தில் நான் ஊரில் சிங்கள டிரைவர் ஒருவரின் ஆட்டோ ஒன்றுக்குள் இருந்தேன்.கோட்டாவின் லைவைக் கேட்டபடியே ரணிலை மிகக் கடுமையாய் திட்டித் தீர்த்த அவர் சஜித் பிரேமதாஸ வேட்பாளரானால் மட்டும்தான் போட்டி ஒன்றைப் பார்க்கலாம் என்றார்.இப்போது திடீரென்று தன்னை மாற்றிக் கொண்டு சஜித் என்கிறார்.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவர் "இதுவரை யூ என் பீக்கு வோட்டுப் போட்டதில்லை.எனது மகளுக்கு சஜித் பிரேமதாஸ ஹம்பாந்தோட்டையில் வீடு கட்டித் தந்ததால் அந்த நன்றிக்கு பிரதியுபகாரம் செய்ய வேண்டி இருக்கிறது "என்றார்.....மகிந்த தரப்புடன் நெருங்கிப் பழகும் அரசாங்க ஆபீஸ்களில் இருக்கும் ஆபீசர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை விசாரித்துப் பாருங்கள்.சஜித் பிரேமதாஸ வேட்பாளராகுவார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை.அவர்கள் ரணிலை நம்பி ஏமாந்து போய் இருக்கிறார்கள்..
சஜித் பிரேமதாஸ அப்படி என்னதான் செய்து இருக்கிறார் என்று பார்த்தால் ஏழை பாளைகளுக்கு பத்தாயிரத்துக்கு மேல் வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறார்.இதுவே மகிந்த ஆட்சியில் இருந்தால் விமானிகளுக்கு ரேடாரே தெரியாதளவுக்கு இலங்கை முழுக்க கட்டவுட் ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு இருக்கும்.இந்த ஆட்சியின் பிரதான சீரழிவுகளில் ஒன்று சரியாய் மார்க்கட்டிங் பண்ணத் தெரியாமல் முழிச்சி நிற்பது தான்.....
தனி பெளத்த வாக்குகளால் மட்டும் இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தேர்வு செய்யப்படுவதாயின் கிட்டத்தட்ட 65 வீதம் பெளத்த வோட்டுக்களை அள்ள வேண்டும்.ரணில் கேட்டு இருந்தால் கோட்டா சிம்பிளாய் அள்ளி இருப்பார்.அதுமட்டுமல்ல ரணிலுடன் பகைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் அநுரகுமாரவுக்கு வோட்டு போட்டு தள்ளி இருப்பார்கள்.இப்போது நிலமை வேறு....நகர வோட்டுக்கள் எப்படிப் போனாலும் சிங்கள கிராம வோட்டுக்கள் சஜித் கோட்டா என்று உடையப் போகின்றன.2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சி தன் சொந்த வேட்பாளரை நிறுத்துகிறது.ரணிலால் கட்சியை விட்டுத் தூரமான ஒரு பெரும் கூட்டம் திடீர் எழுச்சி கண்டது போல இருக்கிறது...
கடந்த எட்டு பத்து வருசங்களாய் ரணிலுக்கு எதிராக கம்பு சுத்தி ஓய்ந்து போன சஜித் பிரேமதாஸவிற்கு இந்த அந்தஸ்து கிடைக்கப் பெற்றதன் பின்னணியில் இருந்த மறைகரம் வண்ணாத்துப் பூச்சி என்றும் ஒரு பால்காரர் என்றும் சிலரால் பரிகசிக்கப்படும் மங்கள தான்.இலங்கை அரசியலில் கிங்மேக்கர் மங்கள..2005 ஆம் ஆண்டு மகிந்தவை வேட்பாளராக்க சந்திரிக்கா மறுத்து நின்ற போதும் மங்கள போய் சந்திரிக்காவை நச்சரித்து மகிந்தவை அபேட்சகராக்கினார்.மங்களவின் அரசியல் சரித்திரத்தில் பாரிய சறுக்கல்கள் குறைவு. பொதுவாய் அவர் தோற்கும் சூது விளையாடுவதில்லை.2005 ஜனாதிபதித் தேர்தல் போல படுசுவாரசியமாய் அமைய இருக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலில் மங்கள சஜித்தின் வாழ்வில் மங்கள விளக்கு ஏற்றுவாரா இல்லையா என்பது நவம்பர் 17 இல் தெரிந்துவிடும்.

((ஸபர் அஹ்மத்) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.