தமிழில் ராஃபி சரிப்தீன்
நாடு தற்போது முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை இன்னும் அதிகரிப்பதாகவே ஜனாதிபதித் தேர்தல் அமையப் போகின்றது. ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியைப் பெற்ற போதிலும் நாடு தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முடியாத நிலையே ஏற்படப்போகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் தமது அபேட்சகர் பெயர்கள் வெளியிடப்பட்ட நிலையில் அரசியலமைப்பின் 19 வது சீர்திருத்தித்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய ஜனாதிபதி என்பது ஒரு பெயரளவுப் பதவியாகவும் அரசு சார்ந்த அனைத்து அதிகாரங்களும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை வசம் இருக்கும் விதத்திலேயே அமையப் போகின்றது.
ஜனாதிபதி என்பவர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றார் என்ற காரணத்தினாலும் ஜனாதிபதி ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை வேறு ஒரு கட்சியைச் சார்ந்ததாகவும் தெரிவாகுமாயின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் என்பவற்றுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு, அதன் விளைவாக முழு அரசியலமைப்பையும் நகைப்புக்குள்ளாக்குவதற்கு காரணமாக அமையலாம்.
இலங்கை தற்போது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளின் தன்மைகளை கீழ்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
1. ஊழலினால் மாசுபட்டு நாசகார தாக்குதல்கள் மூலமாக பலவீனமான நிலையிலும் செயற்படும் சக்தியை இழந்த நிலையிலுமே இன்றைய அரசாங்கம் காணப்படுகின்றது.
2. சாதி குல மத பேதங்கள் காரணமாக உருவான கலவரங்கள் சண்டைகள் மூலமாக பிரிவினைக்குற்பட்ட நிலையிலேயே இன்றைய சமூகம் காணப்படுகின்றது.
3. எப்போது வேண்டுமானாலும் வங்குரோத்து நிலையை அடைந்துவிடலாம் என்ற பாதகமான நிலையிலேயே நாட்டின் பொருளாதாரம் காணப்படுகின்றது. புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதும் இதுவரைகாலமும் ஜனாதிபதி வசமிருந்த நாட்டின் ஆட்சி அதிகாரமானது பாராளுமன்றத்திற்கு கிடைக்கப் பெறவிருக்கின்றது. எனினும் இவ்வாறான ஒரு பாரிய பொறுப்பை ஏற்பதற்கு எந்த விதத்திலும் பொறுத்தமில்லாதததும் ஊழல் நிறைந்த நிலையிலுமே இன்றைய பாராளுமன்றம் இருக்கின்றது என்பது துரதிஸ்ட்டவசமான நிலையாகும்;.
கிராம மக்களின் வாழ்க்கை முறை
கிராமிய மக்களின் வழ்க்கைத் தரம் மிகவுமே பரிதாபகரமான நிலையில் காணப்படுகின்றது. மிக அண்மைக் காலம் வரை இலங்கையின் தெற்குப் பகுதியின் கிராமங்களில் வசிப்பவர்களின் பிரதான வருமான ஈட்டும் முறையாக சிறு தேயிலைத் தோட்டங்கள் காணப்பட்டு வந்தன.
“ஹினிதும” போன்ற கஷ்டப் பிரதேசங்களில் கூட சிறு தேயிலைத் தோட்டங்களை வைத்திருக்கும் விவசாயிகளின் பொருளாதார மட்டமானது அந்தப் பகுதியில் வேறு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் பொருளாதார மட்டத்திலும் பார்க்க உயர்ந்த மட்டத்திலேயே காணப்பட்டது. மின்சாரம் இல்லாத பிரதேச விவசாயிகளின் வீடுகளில் ஜெனரேட்டர்கள் காணப்பட்டன. இன்றைய காலப்பகுதியில் சிறி தேயிலைத் தோட்ட விவசாயிகளது நிலை மிகவும் கவலைக்கிடமானதாக காணப்படுகின்றது.
காலியிலிருந்து பெத்தேகம வரையான தூரம் 19 கிலோமீட்டர்களாகும். கீம்பிய தொடக்கம் பெத்தேகம வரையில் 7 தேயிலைத் தொழிற்சாலைகள் காணப்பட்டன. அவற்றில் 06 தொழிற்சாலைகள் இன்றளவில் மூடப்பட்டுள்ளதுடன் மிகுதியாக இருக்கும் ஒரே ஒரு தொழிற்சாலை மிகுந்த சிரமத்துடன் செயற்பட்டுவருகின்றது.
தேயிலையின் விலையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு இது வரைகாலமும் அறவிடப்பட்டு வந்த பொருளாதார சேவைகள் வரியினை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்பட்ட அழுத்தங்கள், வங்கிக் கடன்களுக்கான வட்டி வீதம் இரட்டிப்பாக்கபபட்டமை, தொழிலாளர்கள் தட்டுப்பாடு, கிலைபோசெட் தடை செய்யப்பட்டமை, தேயிலை மீள் ஏற்றுமதிக் கொள்ளை போன்ற காரணிகள் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரங்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த தேயிலை தொழிற்சாலைகளின் இருப்புக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின.
கருவா மற்றும் மிளகு பயிரிடும் விவசாயிகளின் நிலைமை கூட இது போன்றதாகவே காணப்படுகின்றது. மீள் ஏற்றுமதி முறையின் கீழ், தரத்தில் குறைந்த கருவா மற்றும் மிளகு என்பன இறக்குமதி செய்யப்பட்டு அவற்றுடன் இலங்கையில் விளையும் கருவா மிளகு என்பவற்றை கலந்து ஏற்றுமதி செய்தததன் காரணமாக கருவா, மிளகு என்பவற்றுக்கான விலை வீழ்ச்சிகண்டது. இதன் விளைவு கருவா மற்றும் மிளகு பயிரிடும் விவசாயிகளை நேரடியாகவே பாதிப்புக்குள்ளாக்கியது. இலங்கையின் இறப்பர் தோட்டங்கள் கூட கைவிடப்படும் நிலையிலேயே காணப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் இறப்பரின் விலை இலங்கையில் இருக்கும் இறப்பரின் விலையிலும் குறைவு என்பதனால் உற்பத்திச்சாலைகள் இலங்கை இறப்பரை வாங்காமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இறப்பரையே உற்பத்திகளுக்காக பயன்படுத்துகின்றன.
கால் போன போக்கில் பயணித்தல்
நெற் பயிர்ச்செய்கை கூட மோசமானதொரு நிலையிலேயே காணப்படுகின்றது. நெல் பயிரானது இலங்கையின் பிரதான ஒரு பயிர்ச் செய்கையாக கருதப்பட்ட போதிலும் மற்றைய அனைத்து பயிர்ச் செய்கையிலும் பார்க்க மிகவும் குறைந்த அளவிலான வருமானத்தையே நெற்பயிர்ச் செய்கை ஊடாக விவசாயிகளால் ஈட்டிக்கொள்ள முடிகின்றது. நெல் பயிரிடும் விவசாயி ஒருவருக்கு அதிஷ்டம் இருக்குமாயின் ஒரு போகத்தில் ஒரு ஏக்கர் வயல் நிலத்திலிருந்து ரூ 40,000 அளவில் வருமானம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர் பற்றாக்குறையானது நெற் செய்கையில் பிரதானமான பிரச்சினையாக காணப்படுவதுடன் அறுவடைக்காலங்களில் இந்தியாவிலிருந்து ஊழியர்களை அழைத்துவர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஈர வலயங்களில் அதிகளவிலான வயல் நிலங்கள் பயிரடப்படாமல் கைவிடப்படும் நிலைக்குள்ளாகியிருக்கின்றது. கைவிடும் நிலையில் இருக்கும் வயல் நிலங்களில் வேறுவகையான பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதறகான வாய்ப்புகள் இருந்த போதிலும் வயல் நிலங்கள் தொடர்பான இறுக்கமான சட்டங்கள் காரணமாக ஈர வலயப் பிரதேசங்களில் எந்தப் பயிர்ச் செய்கைகளும் மேற்கொள்ளப்படாமல் ஆயிரக் கணக்கிலான ஏக்கர் அளவில் வயல் நிலங்கள் எந்த வருமானம் பெறப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
கடந்த சில தசாப்தங்களாக விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் அவை பல்கிப் பெறுகுவதற்கு இடமளித்து வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை காரணமாக பாரிய எண்ணிக்கைகளாக அதிகரித்திருக்கும் விலங்குகள் மூலமாக விவசாய நிலங்களுக்கு பாரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்துகின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புகளுக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதத்திலும் அதிகமான விவசாய உற்பத்திகள் வன விலங்குகள் மூலமாக அழிக்கப்படுகின்றன எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக நாடொன்றில்; வன விலங்குகளினால் விவசாய உற்பத்திகளுக்கு ஏற்படும் அழிவுகள் 10 வீதத்திலும் குறைவான அளவிலேயே இருக்க வேண்டும். எமது நாட்டில் காணப்படும் நிலையானது நாட்டின் தேசிய பொருளாதாரத்தை நேரடியாக பாதிப்பதுடன் விவசாயிகள் ஈட்டுகின்ற வருமானத்தின் அளவில் குறைவு ஏற்படுவதற்காகவும் நேரடித் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
கிராமிய பெண்களுக்காக பிணைகள் இன்றி கடன் வழங்குவதற்காக (மைக்ரோ) நுண் நிதி நிறுவனங்களினால் செயற்படுத்தப்படுகின்ற கடன் திட்டங்கள் பகல் கொள்ளை வகையராவாகக் குறிப்பிலாம். தாம் பெற்றுக் கொண்ட தவணைக் கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் தொகை 150 விட அதிகம் என்பதாக குறிப்பிப்படுகின்றது. சிகரட் மதுபானம் என்பவற்றுக்கான அதிக விலையேற்றம் காரணமாக கசிப்பு மற்றும் பீடி போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தங்களை பழக்கப்படுததிக்கொள்ளும் கிராம மக்களின் தொகை பாரிய அளவாக உயர்ந்துவருகின்றது. ஒரு தீய பழக்கத்தினை ஒழிப்பதற்காக மேற்கொண்ட முயற்சி அதனை விட பாரதூரமான தீய பழக்கம் ஒன்று உருவாக காரணமாக அமைந்திருக்கின்றது.
காணி கொள்ளையிடல்
கிராமிய சமூகத்திடம் காணப்படுகின்ற இந்த பரிதாபகரமான நிலை அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய வீழ்ச்சி நிலை மற்றும் அழுகல் நிலை என்பனவற்றின் காரணமாகவே ஏற்பட்டிருக் வேண்டும். கடந்த சில தசாப்தங்களாக நாட்டின் அனைத்து விடயங்களும் அரசின் முறையான வழிகாட்டல்களோ கட்டுப்பாடுகளோ இல்லாத நிலையிலேயே நடைபெற்றுவருகின்றன. இதனைத் தோல்வியடைந்த ஒரு தேசத்திற்கான அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக குறிப்பிட முடியும்.
வர்த்தகப் பயிர்ச் செய்கைகள் பிரித்தானியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு பொக்கிசமாக கருதமுடியும். பிரித்தானிய காலம் முதல் 1970 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டங்களை அரசாங்கம் தன் வசம் சுவீகரித்துக் கொண்ட காலம் வரை இலங்கை உலக அலவில் சிறந்த தேயிலை உற்பத்தி செய்யும் நாடு என்ற அந்தஸ்த்தைப் பெற்றிருந்தது. தேயிலை உள்ளிட்ட வர்த்தகப் பயிர்ச் செய்கைகள் அனைத்துமே போதுமான அளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற பிரதான ஏற்றுமதிப் பண்டங்காளாகவே இருந்துவந்தன.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களை அரசுடமையாக்கல் மற்றும் காணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தேயிலைத் தோட்டங்கள் அரசுடமையாக சுவீகரிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் வர்த்தகம் சார்ந்த பாரிய பின்னடைவு ஆரம்பமானது என்பதாக குறிப்பிடலாம். இந்த இரண்டு முறைகள் ஊடாகவும் அரசினால் சுவீகரிக்கப்பட்ட மொத்த காணிகளின் அளவு ஒரு மில்லியன் ஏக்கர்களிலும் அதிகமாகும். சுவீகரிக்கப்பட்ட தோட்டங்களை வெற்றிகரமாக பராமரிப்பதற்கான திட்டங்கள் எதுவும் அரசிடம் காணப்படவில்லை. தோட்ட முகாமை குறித்த அடிப்படை அறிவு துளி கூட இல்லாத ஆளும் கட்சி அரசியல்வாதிகளே இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட தோட்டங்களின் முதல் நிர்வாகிகளாக நியமிக்கப்பபட்டனர். அரசினால் சுவீகரிக்கப்பட்ட இந்த தோட்டங்களில் குறித்த ஒரு பாரிய பகுதி 1977 ஆம் ஆண்டுகளின் பின்னர் ஆளும் கட்சி அரசியல்வாதிகளும்; அவர்களது உற்ற நண்பர்களும் மிகவூம் குறைந்த தொகைக்கு கொள்வனவு செய்யப்பட்டு தோட்ட உரிமையாளர்களாக தங்களை ஆக்கிக்கொண்டனர். பிரித்தானியா இலங்கையை ஆக்கிரமித்த போது தேயிலைத் தோட்ட பயிர்செய்கையின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானியர்களால் மேற்கொள்ளப்பட்ட காணிக் கொள்ளையிடலுக்கு ஒப்பானதாக அரசியல்வாதிகளின் காணிக் கொள்ளையிடல் நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.
இந்த கொள்ளையடித்தல் நடவடிக்கையின் பின்னர் மீதமாக இருந்த தோட்டங்களில் பாரிய ஒரு பகுதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் தனியார் நிறுவகங்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு தேயிலைத் தோட்டங்களைப் பெற்றுக்கொண்ட தனியார் நிறுவனங்கள் குறித்த தோட்டங்களின் வெளித் தோற்றத்தினை அழகு படுத்தியதே தவிர தேயிலை உற்பத்தின் தரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கைகளின் பிரதிபலனாக உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்காக இருந்து வந்த அங்கீகாரம் குறைவடையத் துவயங்கியது. அதன் பின்னரான காலப்பகுதிகளில் குறித்த நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் தேயிலை உற்பத்தி செய்யும் போது அதனுடன் சீனியைக் கலந்துவிட்டதன் காரணமாக தற்போதளவில் இலங்கைத் தேயிலைக்கான அங்கீகாரம் மிகவும் மோசமான அளவில் குறைந்திருக்கின்றது. ஏற்றுமதிப் பொருட்களின் தர நிர்ணயம் குறித்த பொறுப்பு அரசிடமே காணப்படுகின்றது. தோட்டத் துறை சம்பந்தமான நடவடிக்கைகளுக்காகவென அமைச்சு ஒன்றும் விடயங்களுக்குப் பொறுப்பாக அமைச்சர் ஒவருடன் பாரிய அதிகாரிகள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இவைகள் அனைத்தையும் பரிபாலனம் செய்வதற்காக அரச நிதியில் ஒரு பகுதியும் செலவிடப்படுகின்றது. இவ்வாறான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் வர்த்தக துறையில் இலங்கையின் தோட்டத் துறை பின்தங்கிய நிலையில் இருப்பதானதன் ஊடாக இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளது என்பது நிரூபனமாகின்றதல்லவா?
தோல்வியடைந்துள்ள அரசு
இலங்கை அரசு அடைந்திருக்கும் தோல்வி குறித்து கிராமிய விவசாயம் மற்றும் மக்களினது வாழ்க்கைததரம் என்பன அடைந்திருக்கும் வீழ்ச்சியின் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது. மீள் ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் போது இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்கள் மற்றும் அதனுடன் கலக்கப்பட்டு ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் தொடர்பாகவும் அவை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளின் சாதக பாதக தன்மை குறித்தும் ஆராய்ந்துபாராமல் மீள் ஏற்றுமதிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன என்பது இதன் ஊடாக தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது.
இலங்கையின் குப்பை பிரச்சினைக்கு முறையான தீர்வுகாணப்படாமல் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில் வெளிநாட்டுக் குப்பைகளை இறக்குமதி செய்து அவற்றை மீள் ஏற்றுமதி செய்வதற்காக அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்பதை தம்மிக பெரேரா தொடர்பான நிகழ்வு ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது. மேற்படி குப்பைகள் மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படவில்லை. அவைகளை இலங்கையின் குப்பைகளுடம் சேர்த்து விட்டு அதன் ஊடாக இலாபம் ஈட்டிக்கொள்ளும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதை புரிந்துகொள்வது கடினமானதொரு விடயமல்ல. இது நாட்டிற்கு பாரிய பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க விடயமாக இருந்த போதிலும்இ மேற்படி தவறுகளை சரிசெய்வதற்கான உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. அரசு தோல்வியடைந்த நிலையில் இருப்பதனை இந்த சம்பவம் கூட எடுத்துக்காட்டி நிற்கின்றது. கருவா, மிளகு மீள் ஏற்றுமதி கொள்ளை ஊடாகவும் இந்த விடயம் நிரூபனமாகின்றது.
உலகிலேயே மிகச் சிறந்த கருவா இலங்கையிலேயே கிடைக்கின்றது. இயற்கையின் அருட்கொடையாக இலங்கையின் கருவா வகைகளுக்காக கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த சிறப்பியல்பைப் பயன்படுத்தி கருவா ஊடாக நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வருமானங்களை பெற்றுக்கொள்வதில் இலங்கை தோல்வி கண்டுள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கை கருவாவிற்கு இருக்கும் விசேட அங்கீகாரத்தினை போக்குவதற்கு இலங்கையின் அரசின் கருவா தொடர்பிலான கொள்கைகளே காரணமாக அமைந்திருக்கின்றன. மிளகு தொடர்பிலும் இதே விடயத்தையே குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
இலங்கையின் விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வன விலங்குகள் தொடர்பில் அரசாங்கம் நீண்டகாலமாக கடைபிடித்துவரும் முட்டாள் தனமான கொள்கைகள் தொடர்பிலும், அந்த கொள்கைகள் ஊடாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் தொடர்பிலும் பார்க்கும் போது இலங்கை அரசின் தோல்வியடைந்த தன்மை உறுதி செய்வதற்காக முன்வைக்க முடியூமான நூற்றுக்கணக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று என்பதாக கூறமுடிகின்றது.
கிலைபோசெட் தொடர்பில் மேற்கொண்ட தான்தோன்றித் தனமான கொள்கைகள் ஊடாகவும் இதே தன்மையே தெளிவாகின்றது. விவசாயத் திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானிகளின் பரிந்துரைகளுக்கு இசைவாக அரசு கிலைபோசெட் இற்கு தடை விதிக்கவில்லை மாறாக சுற்றாடல் பாதுகாவலர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொண்டு அரசுடன் தொடர்புகளைப் பேணி வந்த அரசியல் குழுவொன்றின் வேண்டுகோளுக்கிணங்கவே மேற்படி தடை விதிப்பினை அரசு மேற்கொண்டிருந்தது. இந்த தடை உத்தரவானது நாட்டின் வர்த்தக தோட்டங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. நெல் மூலமாக பெறப்படுகின்ற வருமானம் மிகக் குறைந்த அளவில் இருக்கும் நிலையிலும் நாட்டிற்கு தேவையான அரிசி முழுவதையும் உலர் வலயத்தில் அமைந்திருக்கும் வயல்களின் ஊடாக பெறமுடியுமான நிலையிலும் அவைகள் மீது கவனம் செலுத்தாது நெல்லுக்கான முக்கியத்துவத்தினை முதன்மைப் படுத்திக்கொண்டிருப்பது ஊடாகவூம் அரசாங்கம் தோல்வியை அடைந்திருப்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றது.
கல்வி
கல்வி என்பது ஒரு நாட்டின் நிகழ்காலத்தில் மாத்திரமன்றி எதிர்காலத்திலும் தாக்கம் செலுத்தக்கூடிய திறன் கொண்ட மிக முக்கியமான காரணியாகும். இலங்கையின் மொத்த கல்வித் துறையும் சிக்கலான அமைப்பாக மாறியிருக்கின்றது. நாம் இங்கு குறிப்பிட முனைவது முழு கல்வித் துறை தொடரபாகவல்ல, மாறாக பாடசாலைக் கல்வி தொடர்பாக மாத்திரமே குறிப்பிட முனைகின்றோம். பணம் படைத்தவர்களுக்கு சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகள் என்ற அமைப்பிலும் வசதியற்றவர்களுக்கு ஆசிரமம் போன்ற பாடசாலைகள் என்ற அமைப்பிலுமே இன்றைய பாடசாலைக் கல்வித் துறை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பாடசாலை முறையில் காணப்படுகின்ற இந்த முரண்பாடுகள் ஒட்டு மொத்த கல்வித் துறையையும் பாதித்திருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் முன்பள்ளிகள், ஆரம்ப நிலைப் பாடசாலை, கனிஷ்ட பாடசாலைகள், சிரேஷ்டபாடசாலைகள் என்ற அடிப்படையில் பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து பாடசாலைகளினதும் தரம் ஒரே மாதிரியானதாக அமைவதுடன் ஆரம்பாடசாலை ஒன்றுக்காக விண்ணப்பிக்க வேண்டுமாயின் வீட்டின் அருகாமையில் அமைந்திருக்கும் ஆரம்பப் பாடசாலைக்கே விண்ணப்பிக்கப்பட வேண்டும். இந்த இலகுவான முறைமை ஊடாக அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் ஒரே தரத்தில் வைத்துப் பார்க்கப்படுவதுடன் மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதில் போட்டித் தன்மையோ பாடசாலை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் வழங்கும் முறையோ காணப்படுவதில்லை. அதுமாத்திரமன்றி இந்த இலகுவான முறைமையின் ஊடாக பாடசாலையின் வளங்கள் சமமாக பங்கிடப்படுவதுடன் பாடசாலை முகாமைச் செயற்பாடுகளையூம் இலகுபடுத்துகின்றது. பாடசாலை முறை ஊடாக வர்க்க பேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கப்பெறுவது தனது வீட்டிற்கு அருகாமையில் அமைந்திருக்கும் பாடசாலை என்பதால் போக்குவரத்துக்கான செலவுகள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படுவதில்லை என்பதுடன் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.
தற்போது காணப்படும் சிக்கலான பாடசாலை முறைக்குப் பதிலாக மேற்குறிப்பிட்ட இலகுவான முறையை அமுல்படுத்துவதன் அவசியப்பாடு குறித்து இளைஞர் விரக்தி ஆணைக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தொடராக வலியுறுத்தி வந்துள்ள போதிலும் நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களும் அரசின் உயர் அதிகாரிகளும் தற்போது நிலவுகின்ற ஊழல் நிறைந்த முறையை மாற்றியமைப்பதற்கு இடமளிப்பதாக தெரியவில்லை. இது இலங்கை அரசின் தேல்வியடைந்த தன்மையை விளக்குவதற்கான இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.
தோல்வியடைந்த தன்மையினை வெற்றிகொள்ளல்.
நிறைவேற்று அதிகாரமற்ற புதிய ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொள்வதனாலோ அல்லது பாரளுமன்ற தேர்தல் ஒன்றின் மூலமாக புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக்கொள்வதன் ஊடாகவோ இலங்கை அரசுக்கே உரித்தான தோல்வியடைந்த தன்மையினை வெற்றிகொண்டுவிட முடியாது. நாட்டில் நிலைகொண்டிருக்கும் தேல்வியடைந்த தன்மையினை வெற்றிகொள்ளும் வரை நாட்டில் நிலவுகின்ற நாசகாரத் தன்மை அவ்வாறே இருந்துகொண்டிருக்கும்.
தோல்வியடைந்த நாடொன்றையே இலங்கையராகிய நாம் பெற்றிருக்கின்றோம். இது ஊழல் நிறைந்திருக்கின்ற, திறம்பட செயற்படுவதற்கான பலமற்ற, சுயநினைவை இழந்து போன தேசமொன்றாகும். நாட்டின் நாசகாரத் தன்மையினை இல்லாதொழிக்க வேண்டுமாயின் தோல்வியடைந்த அரசாங்கமானது வெற்றியடைந்த அரசாங்கமாக புனர்நிர்மாணிக்கப்பட வேண்டும். அதற்காக கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டு மக்களின் பூரண அவதாணத்தையும் இந்த முக்கியமானதும் அவசியமானதுமான பிரச்சினையின் மீது செலுத்தப்படல் வேண்டும். அரச மற்றும் சமூக மேம்பாட்டிற்காக புனர்நிர்மாணம் ஒன்றினை, ஊழல் காரணமாக அழுகிப் போயுள்ள பாராளுமன்றத்தின் மூலமாக ஏற்படுத்தலாம் என்பதனை எதிர்பார்க்க முடியாது. கட்டமைப்பு மாற்றம் ஒன்றை இலக்காக கொண்ட மக்கள் அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான செயற் திட்டம் ஒன்றை நோக்கி நாட்டை நகர்த்துவதே இலங்கையின் இன்றைய நிலைக்கு அமைய புனர்நிர்மாணம் மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.