( மினுவாங்கொடை நிருபர் )

   இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ள ஜனாதிபதியின் தீர்மானம்,  நாட்டின் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக அமைவதாக, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்  ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
   இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 
   அக்கடிதத்தில் அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது,  ஊடகத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து முறையற்ற நிர்வாகம் காரணமாக நட்டத்தில் இயங்கிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நடைமுறை நிர்வாகத்தை நீக்கி, தகைமையான திறமையுள்ள மற்றும் சிறந்த தலைவரொருவரை நியமிக்க முற்பட்டேன்.
   அதற்காக பல சந்தர்ப்பங்களில் நான் முயற்சித்த போதும், நீங்கள் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து அதற்குத் தடையாக இருந்தமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
   ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமானது, திறைசேரிக்குச் சுமையாக மாதாந்தம் ஐந்து கோடிக்கு மேல் நட்டமேற்பட்ட நிறுவனமாக அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. 
ஊடக மீளாய்வு அறிக்கைகளுக்கு இணங்க, இந்தக் கூட்டுத்தாபனம் தற்போது இலங்கை தொலைக்காட்சிச் சேவைகளில் ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
   இந்த தொலைக்காட்சிச் சேவையை நேயர்களின் விருப்பத்தை வெல்லக்கூடியதாகக் கொண்டு வருவதற்கு தற்போதைய தலைவரினால் முடியவில்லை என்பதை, நான் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
   இதற்கு ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பெருமளவான ஊழியர்கள் சாட்சி பகிர்வார்கள்.
   இவ்வாறான நிலையில், உங்களால் கடந்த 9 ஆம் திகதி 2140/2 இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை ஊடகத்துறை அமைச்சிலிருந்து நீக்கி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளமையானது சிக்கலான ஒரு விடயமாகும்.
   வரலாற்றில் ஒருபோதும், நாடு யுத்தமொன்றை எதிர்நோக்கியிருந்த காலத்திலும் கூட,  ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
   இந்த நிலையில், உங்களது இந்தத் தீர்மானம் நாட்டின் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே கருத முடியும் என்றும் அவர் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.