நரிகள் கூடி நகர்த்தும் காய்கள்; ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பாராளுமன்ற தேர்தலா ?????

சுதந்திர கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன ஆற்றிய உரையை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. அவர்;
👉🏿 அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படவிருக்கும் பிரதமர் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்துங்கள்
👉🏿 19 ஆவது சரத்து திருத்தத்தின் பிரகாரம் இதற்கு பின்னர் வருகின்ற ஜனாதிபதியை விட பிரதமரே அதிகாரமிக்கவராக இருப்பார்
எனக்கூறியுள்ள 2 விடயங்களும் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவையாகும்.

அவருடைய உரையில் முக்கியம் கொடுக்கப்பட்ட  இந்த விடயங்களை நாம் ஆராய்கின்ற போது இரண்டு முடிவுகளுக்கு வரலாம்
 01) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் வரலாம்
 02) எதிர்கால பிரதமர் பதவியை ஜனாதிபதி இலக்கு வைக்கிறார்

✏️ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் சாத்தியமா ???...
சாத்தியமே. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் ஒன்றை கொண்டுவருவதற்கு ஏலவே மைத்ரி, மகிந்த, ரணில் முத்தரப்பு உடன்பாட்டிற்கு வந்துவிட்டதாக அறியக்கிடைக்கிறது. இதற்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி காரணங்கள் இருக்கின்றன.

👉🏿 மைத்ரிக்கு இன்னும் கொஞ்சநாள் ஜனாதிபதியாக இருப்பதோடு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும் ஆசனங்களை வைத்து ஒரு பேரம்பேசலுக்கு சந்தர்பப்பம் எடுத்துக்கொண்டு தன்னுடைய எதிர்கால அரசியல் இருப்பை பலப்படுத்தல்.
👉🏿 ரணிலுக்கு சஜீத்தின் தலையிடியிலிருந்து தப்பித்து தலைமைத்துவத்தை காப்பாற்றுவதோடு, தனக்கு எதிரானவர்களை கட்சிக்குள்ளிருந்து அப்புறப்படுத்த சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொள்ளல்.
👉🏿 மகிந்தவிற்கு தமது ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவின் பின்னர் ஏற்பட்டிருக்கும் அரசியல் இறுக்கத்தை தளர்த்தி, இன்னும் கொஞ்சம் ஆழ / அகல கால்குத்தி, தேவைப்படின் வேட்பாளர் தொடர்பில் மறுபரிசீலனைக்கு சந்தர்ப்பத்தினை பெறல்.
அந்த அடிப்படையில் மூவரும் ஏலவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடாத்த பரஸ்பர உடன்பாடு கண்டுள்ளனர்.

இவ்வாறு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடாத்த - 19 ஆவது திருத்தச்சட்டம் - 28 ஏப்ரல் 2015 ஆம் திகதி பராளுமன்றத்தினால் வாக்களித்து நிறைவேற்றப்பட்டாலும் - மே மாதம் 15 ஆம் திகதிதான் அதில் சபாநாயகர் கையொப்பமிட்டார் என்ற அடிப்படையில் - 19 ஆவது திருத்தச்சட்டம் எப்போதிலிருந்து அமுலில் வருகிறது என - ஜனாதிபதி உச்ச நீதிமன்ற அபிப்பிராயத்தை கேட்க போகிறார்.

அதற்கு உச்ச நீதிமன்றம் மே மாதம் 15 ஆம் திகதியிலிருந்துதான் 19 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் வருகின்றது என அபிப்பிராயம் தெரிவிக்கும். ஏன்எனில், சபாநாயகர் கையொப்பமிட்ட பின்னரே பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் எந்த சட்டமும் அமுலில் வருகின்றது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த முடிவினை அறிவிக்கும்.

அப்படி அறிவிக்கப்படின் ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் சுமார் 06 மாதங்கள் நீடிக்கப்படும். அந்த இடைவெளியில் - பாராளுமன்றத்தை ஜனாதிபதி 4 1/2 வருட முடிவில் கலைக்கலாம் என்பதன் அடிப்படையில் - பாராளுமன்றத்தை கலைத்து - ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்லலாம்.

அதனையே சுதந்திர கட்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரையில் அவர் சூட்சுமாக கூறியுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்ற அபிப்பிராயத்தை கேட்கும் படலத்தை ஆரம்பிக்கலாம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்லலாம்.

✏️ எதிர்கால பிரதமர் பதவியை ஜனாதிபதி இலக்கு வைக்கிறாரா ??? அது சாத்தியமா ???
👉🏿 UNP யுடன் கூட்டு சாத்தியமில்லை. ரணில் அதற்கு தயாரில்லை. ஜனாதிபதியும் அதற்கு தயாரில்லை. இரண்டு பேருக்கும் இனி ஆகாது என்ற நிலை இருப்பதால் சிரிசேன பிரதமராக அதனை ஒரு வழியாக கொள்ள முடியாது.

👉🏿 SLPP யை பொறுத்தவரை ஏலவே தனது ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாவையும் - பிரதமர் வேட்பாளராக மகிந்தவையும் பகிரங்கமாக அறிவித்த நிலையில் - ஜனாதிபதி சிரிசேனவிற்கு அந்த அணியில் பிரதமர் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. சபாநாயகர் பதவி என்பது வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

👉🏿 இந்த இரண்டு வழிகளையும் தவிர்த்து மூன்றாவது வழியாக சஜீத் - சிரிசேன கூட்டு என்ற இன்னொரு வழி இருக்கிறது. அது சிரிசேன பிரதமராக அதிக சாத்தியப்பாடுகளைக்கொண்ட வழியாக கருத முடியும். ரணிலை பொறுத்தவரை சஜீத்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் நிலைப்பாட்டிற்கு வந்ததாக தெரியவில்லை. அதில் பிடிவாதமாக இருப்பது போல் தெரிகிறது. தனது தலைமைத்துவத்திற்கு ஆப்பாக வரக்கூடிய இந்த தீர்மானத்தை அவர் எடுப்பாரா என்பதும் கேள்விக்குறியே.

இந்நிலையில், சஜீத்தின் ஆதரவுக்குழு - UNP சார்பில் சஜீத் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படாது விடின் - UNP க்கு புறம்பாக ஒரு கூட்டினை அமைத்து - அக்கூட்டணியில் சஜீத்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது. அந்த கூட்டின் பிரதான பங்காளி கட்சியாக SLFP சேர்கின்ற நிலையும் தெரிகிறது. அக்கூட்டில் - சஜீத் ஜனாதிபதி வேட்பாளராகவும் - சிரிசேன பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்கும் நிலை ஏற்பட சாத்தியமிருக்கிறது.

மறுபுறம், பாராளுமன்ற தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வருகின்ற நிலை தோன்றுமாக இருந்தாலும் - ரணிலின் நரித்தனமான காய்நகர்த்தல்களால் சஜீத்திற்கு ஆதரவான எம்.பிக்களுக்கு குழிபறிப்பு இடம்பெறலாம் என்பதால் - அவர்களை பாதுகாக்கும் நோக்கில் சஜீத் அணி - UNP க்கு புறம்பான கூட்டை பற்றி யோசிக்க சந்தர்ப்பங்களுண்டு. இந்நிலையிலும் சஜித் - சிரிசேன கூட்டு ஏற்பட சாத்தியங்கள் உண்டு. அப்போதும் சஜீத் ஜனாதிபதி வேட்பாளர் எனவும் - சிரிசேன பிரதமர் வேட்பாளர் எனவும் உடன்பாடு காணலாம்.

இது தவிர்த்து, பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடாத்தப்படும் சூழல் ஏற்பட்டு SLFP தனித்து களமிறங்கிடினும் 20 தொடக்கம் 25 ஆசனங்களை கைப்பற்றும் நிலையுள்ளது. அவ்வாறு SLFP பெறுகின்ற நிலையில் எந்தக்கட்சி ஆட்சி அமைப்பதாயினும் SLFP யை கூட்டு சேர்க்காமல் ஆட்சியமைக்க முடியாது என்ற சமன்பாடு தோன்றலாம். அவ்வாறான சந்தர்ப்பத்திலும் சிரிசேன பிரதமர் பதவியை தனக்கு தரவேண்டுமென கோரிக்கை வைக்கலாம்.

ஆக;
👉🏿 ஜனாதிபதி தேர்தலில் சஜீத் - சிரிசேன கூட்டு
👉🏿 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான பாராளுமன்ற தேர்தலில் சஜீத் - சிரிசேன கூட்டு
👉🏿 பாராளுமன்ற ஆட்சி அமைப்பதில் SLFP யின் அவசியம்
ஆகிய மூன்று சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி சிரிசேன பிரதமராகும் சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளன.

இக்காரணங்களால்தான் அவருடைய மாநாட்டு உரை அவ்வளவு இலகுவாக கடந்துசெல்ல முடியாததாக அமைந்துள்ளது. அடுத்த அரசியல் அதிர்ச்சிக்கு நாடு தயாராக வேண்டுமென்ற செய்தி அவருடைய உரையில் பொதிந்துள்ளது. அவர் அனேகமாக இன்னும் ஒரு சில தினங்களில் உச்ச நீதிமன்ற அபிப்பிராயத்திற்கு செல்ல போகிறார். அதனை சூட்சுமமாக கூறியுள்ளார்.

மொத்ததில் ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கான அத்திவாரம் அமைதியாக போடப்படுகிறது. அதனூடாக சிரிசேனவும் - ரணிலும் - மகிந்தவும் தங்களுக்கு தற்போதிருக்கும் தலையிடிகளுக்கு நரித்தனத்தினூடாக Win Win solution க்கு வரப்போகிறார்களே தவிர - நாட்டையும் மக்களையும் பற்றி கிஞ்சித்தும் இவர்களுக்கு கவலையில்லை.

நாம என்ன செய்யலாம்?
றேசில் ஓடுறான்....வேற என்னதான் செய்யலாம்?
On your mark......

ஏ.எல். தவம்
மு.மா.ச. உறுப்பினர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.