எல்பிட்டிய பிரதேச சபைக்குத் தேர்தல்  நடந்து மொட்டு வெற்றி பெற்றிருக்கிறது.இதைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் கூலிக்கு எழுதும் ஒரு சில ஊடகவியலாளர்கள்.எப்போதோ நடந்து முடிந்து இருக்க வேண்டிய தேர்தல் இது.யூ என் பி இன் பிற்போக்குத்தனத்தால் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்பில் இதைக் கொண்டு இப்போது நடத்தவாகிவிட்டது.பெந்தர எல்பிட்டிய என்பது ஒரு தனித் தொகுதி.கீதா குமாரசிங்க போன்ற அல்பர்ட் ஐன்ஸ்டீன்களை வாக்காளர்கள் பெரும் களிப்போடு தேர்வு செய்யும் தொகுதி.

இந்தத் தொகுதியில் யூ என்பீ 88 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வென்றதுக்குப் பிறகு எந்த தேசிய முக்கியத்துவமிக்க தேர்தலிலும் வென்றது இல்லை.நூறு வீதம் சிங்கள மக்களைக் கொண்ட தொகுதி அது..கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற சிரிசேன தரப்பு எல்பிட்டியவில் 39வீதமே பெற்று இருக்கிறது.

பெந்தர எல்பிட்டிய தொகுதியின் ஒரு பகுதியான எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலாகவே கருதியது மகிந்த தரப்பு.எண்பது வீதம் அள்ளுவோம் என்றார் பஷில் ராஜபக்‌ஷ.ஆனால் வெறும் 56 வீதத்தைப் பெற்று இருக்கிறது மொட்டு.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமைப்பு 12 வீதம்.சுதந்திரக் கட்சியைக் கருணைக் கொலை செய்துவிட்டு உடலை மட்டும் ராஜபக்‌ஷாக்களிடம்  தாரை வார்த்து இருந்தார் சிரிசேனா."தொண்ணூறு வீதமான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் நிலைப்பாட்டை மீறி ஏன் மொட்டுவுடன் இணைந்து கொண்டீர்கள் "என்று புலம்புகிறார் சந்திரிக்கா..இதையெல்லாம் இரண்டு கண்,இரண்டு காது இரண்டு கால் உடைய சித்த சுயாதீனமுள்ள சுதந்திரக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பார்த்தனர்.அவர்கள் மொட்டுவை ரசிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் சொல்கிறது.

சுதந்திரக்கட்சியின் காதலைக் கொலை செய்துவிட்டு திடீர் என்று பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தான் இந்த மொட்டுவுடன் கூட்டிணைப்பு..ஆனால் சுதந்திரக் கட்சி மணமேடையில் இருந்தபடியே பழைய காதலியை எண்ணிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது.ஆக சுதந்திரக்கட்சியின் பன்னிரண்டு வீதமான வாக்குகள் மொத்தமும் தனி சிங்கள ஏரியாக்களில் மொட்டுவுடன் இல்லை.ஆனால் இந்தப் புள்ளிவிபரங்களை பார்த்துக் கொண்டு மெத்தனமாய் இருந்தால் யூ என் பீ இன் கதையும் முடிந்துவிடும்..

சிங்கள வாக்குகள் மட்டும் போதும் என்ற நிலையிலேயே ஈஸ்டர் குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து ராஜபக்‌ஷ தரப்பு இருந்தது.எடுபிடி ஊடகங்கள் எல்லாவற்றையும் பக்காவாகப் ப்ளான் பண்ணி செய்தன.அறுபத்தைந்து வீதத்திற்கு மேல் பெளத்த வாக்குகளை அள்ளலாம் என்று நினைத்தது மொட்டு.ஆனால் அந்தக் கணிப்புக்கள் பிழைத்துப் போகவே 'ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்'போன்ற கோமாளிகள் உருவாக்கப்பட்டு உலவவிட்டப்பட்டு இருக்கிறார்கள் போலும்..

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி மக்கள் அளித்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை.2000ஆம் ஆண்டு அல்கோர் புஷை விட அதிகமாகவும் 2016 இல் ஹிலாரி ட்ரம்பை விட அதிகமாகவும் வாக்குகள் பெற்ற போதும் தொகுதி அடிப்படையில் மண்ணைக் கவ்வினர்.ஆனால் இலங்கையில் சிஸ்டம் வேறு.இங்கே தொகுதி அடிப்படையில் வெற்றியைத் தீர்மானித்தால் 2015இல் ராஜபக்‌ஷ தான் ஜனாதிபதி.சிங்கள தொகுதிகள் மட்டும் வெல்லப் போதுமானது. அப்படி ஒரு நிலை இல்லாதபடியால்தான் வடக்கு கிழக்கில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பதினைந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

(Zafar Ahmed)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.