சிறுபான்மையினரின் ஆதரவின்றி ராஜபக்சாக்களால் வெற்றிபெற முடியுமா ? வேட்பாளரை மாற்றுவது பற்றி ஆராய்வது எதற்காக ?

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டாமீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் முன்வைக்கப் படுவதனால் கடைசி நேரத்தில் வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது பற்றி ராஜபக்சாக்கள் ஆராய்ந்துவருவதாக கூறப்படுகின்றது.

வேட்பாளரை மாற்றுவதற்கு கூறும் காரணம் அதுவாக இருந்தாலும், வேறு முக்கியமான விடயங்களும் அதற்குள் பொதிந்து கிடக்கின்றது பற்றி நாங்கள் ஆராய வேண்டும்.

ஓர் அரசியல் கட்சியை வெற்றிபெற செய்வதற்கு பலவகையான வியூகங்கள் வகுக்கப்படும். அதில் ஒன்றுதான் தனக்கு சவாலாக இருக்கின்ற கட்சிக்குள் உட்கட்சி மோதலை ஏற்படுத்துவதாகும்.

அந்தவகையில் ராஜபக்ச குடும்பத்தினர் தனது கட்சியை வெற்றிபெற செய்து ஆட்சியை கைப்பெற்றுவதற்காக பெருமெடுப்பில் கோட்டபாய ராஜபக்சவை வேட்பாளராக அறிவிப்பு செய்தார்கள்.

தனது வேட்பாளர் இந்நாட்டில் உள்ள இரண்டு சிறுபான்மை சமூகங்களின் ஆதரவை பெறாதவர் என்பது நன்றாக தெரிந்திருந்தும், சிங்கள வாக்குகளை மட்டும் குறிவைத்து அவரை வேட்பாளராக நிறுத்த தீர்மானித்தார்கள்.
வேட்பாளர் அறிவிப்பு செய்ததுடன் நின்றுவிடாது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படாமலேயே தங்களது தேர்தல் பிரச்சாரத்தினை கவர்சியானமுறையில் மிகவேகமாக மேற்கொண்டார்கள்.

அத்துடன் ஐ.தே. கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பல துருவங்களாக பிரிந்து செல்லவைப்பதுடன், அதில் சிலரை தங்களது பக்கம் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.
தான் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்கும் என்பதுபோல, ராஜபக்சாக்கள் நினைத்தது போன்று ஐ.தே கட்சிக்குள் பிளவுகளை உண்டுபண்ண முடியவில்லை.

தனது கட்சியை பிளவுபடுத்த முயற்சிகள் நடைபெறுகின்றது என்று அறிந்ததனால் ரணில் விக்ரமசிங்க மிகவும் நுணுக்கமாக காயை நகர்த்தி சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார்.
ஐ.தே கட்சி பிளவுபடாத நிலையில், சஜித்தான் அக்கட்சியின் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதன் பின்பு ராஜபக்சாக்களின் கனவில் இடி விழுந்தது.
அதாவது ஐ.தே கட்சியை பிளவு படுத்த எவ்வாறெல்லாம் திட்டமிட்டார்களோ அதற்கு மாற்றமாக தன்னுடன் இருந்த முன்னாள் ஐ.தே கட்சியின் மக்கள் செல்வாக்குள்ள உறுப்பினர்கள் ஒவ்வொன்றாக சஜித்தின் பக்கம் செல்ல ஆரம்பித்தார்கள்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் இன்னும் சிலர் தங்களைவிட்டு பிரிந்து செல்வார்கள் என்ற நிலைமை காணப்படுவதனால், சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி சிங்கள வாக்குகளால் மட்டும் வெற்றிபெற்று காட்டுவோம் என்ற ராஜபக்சாக்களின் கனவு தலைகீழாக மாறியுள்ளது.
தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளை வளைத்துப்போடும் எந்தவித முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
த.தே. கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் அவர்கள் கோட்டாவுக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் என்பது தெரிந்த விடயமாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் கள நிலவரம் இன்னும் பாதகமான நிலைமையை உருவாக்கும். அதனால் சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி வெற்றிபெறுவதென்பது சாத்தியமற்ற விடயம் என்பதனை ராஜபக்சாக்கள் புரிந்துள்ளார்கள். இதன் காரணமாகவே கோட்டாவுக்கு பதிலாக வேறு வேட்பாளரை களம் இறக்குவது பற்றி ஆராயப்படுகின்றது.

எனவேதான் சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியும் என்ற மமதையில் களமிறங்கிய கோத்தபாயாவினால் அவர்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது என்ற கள நிலவரம் கானப்படுவதனால்தான் சிறுபான்மை மக்களை கவரும் வேட்பாளரை தேடுகின்றார்கள்.
எது எப்படி இருப்பினும் தலையிடிக்கு தலையணை மாற்றுவதன்மூலம் நோயை குணப்படுத்த முடியுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.