தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கும் போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள எமது புதிய ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனைத்து தீர்வுகளையும் பெற்றுத் தருவோம், எங்களை நம்புங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்று (14) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு இந்த அரசாங்கம் வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் கூட வடக்கில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவில்லை.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன் காரணமாகவே, வடக்கில் இருந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. வடகிழக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய எந்த நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. இன்று இந்தப் பகுதியில் உள்ள மக்கள் கடன்காரர்களாக இருக்கின்றார்கள்.

நீங்கள் எங்களை நம்புங்கள். எங்களோடு ஒன்றிணைந்தால், உங்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்வுக்கு கொண்டு வருவோம். 1983 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய உள்ளன. காணிப் பிரச்சினை, சிறைக்கைதிகள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

2009 முதல் 2015 வரை புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளை விடுவித்து, அவர்களுக்கான வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தோம். தேசிய பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கும் போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள எமது புதிய ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனைத்து தீர்வுகளையும் பெற்றுத் தருவோம் என உறுதியளித்தார்.

ஒரு மாதத்தில் செய்கின்றோம். இரு மாதத்தில் செய்கின்றோம் என உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. எங்களால் முடிந்தவற்றை முடியும் என்றே கூறுவோம், முடியாதவற்றை முடியாதென்றே கூறுவோம். அதற்குத் தான் மஹிந்த ராஜபக்ஷ முக்கியத்துவம் வழங்கி வருகின்றார்.

செய்வோம் என்றால், செய்வோம். 2005 ஆம் ஆண்டு முதல் டக்ளஸ் தேவனாந்தா எங்களுடன் இருக்கின்றார். அதற்கு முன்னரும் அவருடைய ஆதரவு எங்களிற்கு இருந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கிடையாது. நாங்கள் அனைவரும் இலங்கை மக்கள். அரசியல் இலாபங்கள் கருதி நீங்களும் நாங்களும் பிரிந்து செல்ல வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது.

எனவே, இந்த நாட்டில் இருக்கும் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களின் பிரச்சினைக்கான தீர்வினைத் தேடுவோம். பல அரசியல்வாதிகளைப் பார்க்கின்ற போது, இலாபம் கிடைக்கின்றதோ, அங்கே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள். அவ்வாறான போலியான அரசியலுக்குள் நீங்கள் அகப்பட்டு விடக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

வடபகுதியை அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாற்றுவதற்கு, அதேநேரம் யாழ். நகரை, மேலும் அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.