ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்
============================
வை எல் எஸ் ஹமீட் 

சட்டத்தின் பார்வையில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களும் தாம் ஜனாதிபதியாக வருவதற்கே போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் அதிகரிப்பு காரணமாக சில நூறுகோடி மக்கள் வரிப்பணம் மேலதிகமாக செலவாகிறது. 

இந்த 35 பேரில் யார் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிப்பது மக்கள். இன்னுமொரு வேட்பாளர் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்கு ஒரு வேட்பாளருக்கு நியமனம் வழங்குவதுமில்லை. கோடிக்கணக்கான பணம் அதற்காக செலவழிக்கப்படுவதுமில்லை. 

எனவே, தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்; என்பது சட்டவிரோதமானதாகும். ஏற்கனவே, நா காக்காததனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

இது ஒரு புறமிருக்க, தனக்கு மூன்று லட்சம் வாக்குகள் கிடைக்கும்; தானே ஜனாதிபதியைத் தீர்மானிப்பேன்; என்கின்றார்.  மூன்று இலட்சம் பேர் இவரிடம் கூறினார்களா?  என்ற கேள்வி இருக்கட்டும். மூன்று லட்சம் வாக்குகள் கிடைக்கின்றன; என்றே வைத்துக்கொள்வோம். 

இவர் கூறுகின்ற வேட்பாளருக்கே அவர்கள் அனைவரும் இரண்டாம் வாக்கை அளிக்கிறார்கள்; எனவும் வைத்துக் கொள்வோம். ( இவர் கூறுகின்ற வேட்பாளருக்கே அவர்கள் வாக்களிப்பதாயின் அவர்களுக்கு சொந்தமூளை இல்லையா? இவர் என்ன அடிப்படையில் ஒப்பந்தம் செய்வார்? [ஒப்பந்தம் செய்யப்படுமா? என்பதும் இன்னுமொரு கேள்வி] அந்த ஒப்பந்தம் செய்வதற்கான அடிப்படைக் காரணிகளை இதுவரை வெளிப்படுத்தியிருக்கிறா?  தமிழ் கட்சிகள் வெளிப்படுத்தியதுபோல். போன்ற பலகேள்விகள் இருக்கின்றன. அவைகளையும் ஒரு பக்கம் வைப்போம்.)

இந்தப்பதிவின் பிரதான கேள்வி
——————————————-
இவருடைய இரண்டாம் வாக்கு சட்டப்படி இன்னுமொருவருக்குப் போடலாம். பிரச்சினையில்லை. இரண்டாம் சுற்று எண்ணிக்கையில் இவருடைய இரண்டாம் வாக்குகள் தவிர்த்து ஏனைய 32 பேருடைய இரண்டாம் வாக்குகளின் எண்ணிக்கை யாரை இரண்டாம் இடத்திற்கு கொண்டுவருகின்றதோ அந்த  வேட்பாளருக்கே இவரது இரண்டாம் வாக்குகள் பயன்படும். அதுவும் மூன்று இலட்சம் அல்லது அதைவிடக்குறைவான இடைவெளியே அந்த இருவருக்கும் இடையில் இருக்க வேண்டும். 

அந்த வேட்பாளர் யார்? அவரை எந்த அடிப்படையில் இவர் இனம் காண்பார்? தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணியதன் பின்பா? அதற்கு முன்பா? அதற்கு முன்பு அவரை அடையாளம் காண்பதற்கான அளவுகோல் என்ன?

அவ்வாறு அடையாளம் காணுகின்ற அந்த வேட்பாளர் இவரது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் முதலாவது இடத்திற்கு வரும் வேட்பாளருக்கா வழங்குவார்? ( வழங்கச் சொல்லுவார்?)

முதலாவதாக அவர் வருவாராயின் இவரது வாக்குகள் தேவையில்லையே! மட்டுமல்ல, அப்பொழுது இவர் ஜனாதிபதியைத் தீர்மானிக்கவில்லையே! இரண்டாவதாக வருகின்ற வேட்பாளர் இவரது இரண்டாம் வாக்குகளைப் பெற்றும் முதலாவது வேட்பாளரை மேவ முடியாவிட்டால் அப்பொழுதும் இவர் ஜனாதிபதியைத் தீர்மானிக்கவில்லையே! இப்போது வஹியும் வருவதில்லையே! எந்த அடிப்படையில் தன்னை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்; என்கின்றார்?

இவர் மூன்று லட்சம் வாக்குகள் தருவதாக ஒப்பந்தம் செய்து மூவாயிரம் வாக்குகள்தான் கிடைத்தால் அவ்வொப்பந்தத்தின் பெறுமதி என்ன? இவர் கூறுகின்ற வேட்பாளருக்கு இவரது இத்தனை இரண்டாம் வாக்குகள் கிடைத்தன? என்பதை அளவிடும் முறை என்ன? 

இந்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பாரா?

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.