நியாயத்தின் பக்கம் நாமா?
நாம் நிற்கும் பக்கம் நியாயம் பேசுகின்றோமா?
===============================
வை எல் எஸ் ஹமீட்
ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றோம். 2010ம் ஆண்டிற்கு முந்தியவை போன்ற ஒரு தேர்தலாக இத்தேர்தல் இருக்குமாயின் நாம் சற்று தளர்வாக நம் முடிவுகளை எடுக்கலாம். நமது பிரதான தலைப்புகள் அபிவிருத்தி, பொருளாதாரம், உரிமைகளோடு சம்பந்தப்பட்ட சில விடயங்கள்; என்று பேசலாம்.
இன்று அவைகளுக்கும் மேலாக, எதிர்காலத்தில் நாம் இந்த நாட்டில் வாழக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இருக்குமா? இலங்கை ஒரு மியன்மாராக மாறுமா? அல்லது சீனாவின் உய்குர் முஸ்லிம்களின் நிலைவருமா? அல்லது இந்தியாவின் வடமாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் இறைச்சியை கொண்டுசென்றாலே அடித்துக் கொலைசெய்து அதனை சமூக வலைத்தளங்களிலேயே பதிவிட்டு எந்த சட்ட நடவடிக்கையும் இல்லாமல் இருக்கும் நிலை வருமா? என்று தெரியாத ஒரு நிலையை உருவாக்கக்கூடிய ஒரு இக்கட்டான தேர்தலை முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்றைய பிரதான போட்டியாளர்களில் எந்தத் தரப்பும் சிறுபான்மைகளின் அல்லது முஸ்லிம்களின் நண்பன் என்று சொல்லக்கூடியதாக இல்லை. எல்லாம் இனவாத மேகம் கருக்கொண்ட, இனவாதிகளால் சூழப்பட்ட கூடாரங்களாகவே இருக்கின்றன.
இனவாதத்திற்கு சாஷ்டாங்கம் செய்யும் சிறுபான்மை
—————————————————-
இன்று இருதரப்பிலும் உள்ள எந்த முஸ்லிம்கட்சியோ, மலையகக்கட்சியோ எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஒப்பந்தம் செய்யாததை சாணக்கியமாக அவர்கள் கருதுகிறார்கள். ஒப்பந்தம் செய்தால் அது இனவாதிகளுக்கு சாதகமாகப்போகும். எனவே, இனவாதிகளுக்கு தீனிபோடுவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.
இந்நிலை, பல அர்த்தங்களைத் தொனித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, இந்நாட்டின் ஆட்சியாளர் யாராக இருந்தாலும் அவர்கள் இனவாதத்திற்கு அடிபணிந்துதான் ஆட்சிசெய்ய வேண்டும். சிறுபான்மைகள் இரண்டாம்தர பிரஜைகளாக அந்த இனவாதத்திற்கு சாஷ்டங்கம் செய்துதான் வாழவேண்டும்.
இன்று ஒரு தரப்பு சிறுபான்மையின் வாக்குகள் இல்லாமல் வெற்றிபெறுவோம்; என்கிறார்கள். ( களநிலவரம் அவர்களின் நிலைப்பாட்டைக்கூட மாற்றிக்கொண்டிருக்கிறது. அது தொடர்பாக பின்னர் பார்ப்போம்)
அடுத்த தரப்பு தன்வெற்றிக்குத் தங்கியிருப்பதே சிறுபான்மை வாக்கில்தான். அந்தத் தரப்பும் சிறுபான்மைகளுடன் எந்த ஒப்பந்தமும் செய்யத் தயாராயில்லை. சிறுபான்மையுடன் ஒப்பந்தம் செய்தால் வெற்றிபெறுவதற்குத் தேவையான மிகுதி வாக்குகளைக்கூட பெரும்பான்மை சமூகம் தராமல் விட்டுவிடுமோ என்கின்ற அச்சம். அப்படியானால் கிட்டத்தட்ட மொத்த பெரும்பான்மை சமூகமும் இனவாதத்தின் பக்கம்தான் நிற்கின்றதா?
முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு இனவாத வாக்குகளும் உங்களுக்குத் தேவை. கடந்தகாலங்களில் ஒப்பந்தம் எழுதித்தான் எதைச் சாதித்துவிட்டோம். எனவே, இனவாதிகளின் மனம்கோணாமல் தேர்தல் செய்து அவர்களின் வாக்குகளையும் பெறுங்கள்; என்கிறார்கள். அதை சாணக்கியம் என்றும் கூறுகிறார்கள்.
அவர்களது இந்த மனோநிலை சரியா? பிழையா? த தே கூ துணிச்சலாக ஒப்பந்தம் செய்துதான் ஆகவேண்டும்; என்கின்றதே! அதைப்பற்றி என்ன சொல்லப்போகிறோம்? என்ற விடயங்களை இன்னுமொரு ஆக்கத்தில் பார்ப்போம்; இன்ஷாஅல்லாஹ். ஆனால் தேர்தலில் சிறுபான்மையின் வாக்குகளில் தங்கியிருந்துகொண்டே இவ்வாறு செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் இனவாதிகளிடம் இருந்து எவ்வளவு தூரம் சிறுபான்மைகளை, குறிப்பாக முஸ்லிம்களைப் பாதுகாப்பார்கள்?
கடந்தகாலங்களில் முஸ்லிம்களைப் பாதுகாக்க காத்திரமாக எதையும் செய்யமுடியாமல்போன முஸ்லிம்கட்சிகள் எதிர்காலத்தில் எதைச்செய்வார்கள்? என்ற கேள்விகள் எமக்குள் எழுப்பப்பட வேண்டும்.
முஸ்லிம் கட்சிகளும் எதிர்காலத்தில் நமக்கு பெரிதாக உதவப்போவதில்லை. போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் ஒன்றில் இனவாதியாக அல்லது இனவாதிகளுக்கு அஞ்சுகின்றவர்காக அல்லது தலைசாய்க்கின்றவர்களாத்தான் இருக்கின்றார்கள். போதாக்குறைக்கு முன்னாள் ராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்ககூட “ One Coutry, One Law” என்று கோசம் எழுப்பிக்கொண்டு திரிகின்றார்.
இந்நிலையில், நாம் எடுக்கப்போகும் தீர்மானம் மிகவும் நுணுக்கமாக, பல விடயங்களையும் ஆராய்ந்து குறைந்த பாதிப்புள்ளவரைத் தெரிவுசெய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
இத்தேர்தலிலும் சிறுபான்மை வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போகின்றன.
இந்த இக்கட்டான நிலையை இன்று நாம் சிந்திக்கின்றோமா?
இன்று நாம்
—————-
ஒரு கூட்டம் தம் சொந்த மூளையால் சிந்திக்க ஆயத்தமில்லை; என்ற நிலை. தனது கட்சி, தனது தலைவன் எந்தப் பக்கமோ, நாமும் அந்தப் பக்கம். இன்று தரப்பு A யை ஆதரிக்கும் கட்சிகள், தரப்பு B யையும் அடுத்த தரப்பு மறுதிசையிலும் ஆதரித்திருந்தால் இந்தக் கைகளெல்லாம் மறு திசையில் எழுதியிருக்கும்.
தன் கட்சியின் தலைவன் எதை உளறினாலும் அதற்கு வக்காலத்து வாங்குவதற்காக ஒருகூட்டம். இன்று ஒரு பதிவு பார்த்தேன். அதில், “தலைவன் கழுதையை குதிரையென்றால்; தொண்டன், ஆமாம் தலைவா, அது தரமான வரிக்குதிரை “ என்னுமளவு இந்தத் தொண்டன் இருக்கின்றான்; என்ற ஒரு கருத்தை அது குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இன்னொரு புறம்; சுயேட்சையாக போட்டியிடும் தன் தலைவனை தேர்தல் திணைக்களத்திற்கு முன்னால், அத்தனை தேசிய ஊடகங்களுக்குமுன்னால் வைத்துக்கொண்டு ஒரு தொண்டன் “ அபே ஜனாதிபதி துமாட”; என்கின்றான். அந்தத்தலைவனும் ஏனைய தொண்டர்களும் இணைந்து “ஜயவேவா” என்கின்றனர்.
இவற்றையெல்லாம் எங்கே போய்ச் சொல்லி அழுவது.
இன்னுமொரு கூட்டம், அவர்கள் எந்தத் தலைவனுக்குப் பின்னாலும் இல்லை; அவர்களாகவே, ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள்; தாம் எந்தப்பக்கமென்று.
கேட்டால் இந்தத் தரப்பு, அந்த ஆட்சியில் நடந்தவற்றைக் கூறுகிறது. அந்தத் தரப்பு இந்த ஆட்சியில் நடைபெற்றவற்றைக் கூறுகின்றது.
இரண்டு தரப்பிலும் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடந்தது; என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்கின்றதா? வெற்றிபெறக்கூடிய மூன்றாவது தரப்பும் இல்லாத நிலையில் இவ்விரண்டு தரப்பில் ஒன்றைத்தானே தெரிவுசெய்தாக வேண்டும்.
எவ்வாறு தெரிவுசெய்வது
———————————
இவ்விரண்டு தரப்பிலும் சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்ககின்றன; என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். இவற்றில் குறைவான பாதிப்பை அடையாளம் காணவேண்டுமானால் இரண்டினதும் கடந்தகால, சமகால செயற்பாடுகளை அலசி ஆராய்ந்து சமூகத்திற்கு எது சிறந்த முடிவோ, அதைத்தானே எடுக்கவேண்டும். ஆனால், என்ன நடக்கிறது.
ஒரு தரப்பு ‘ அவரது முகத்தில் கறுப்புப் புள்ளியிருக்கிறது’ என்றால் அடுத்த தரப்பு, ‘இவரது கழுத்தில் கறுப்புப்புள்ளி இருக்கிறதே!’ என்று எதிர்வாதம் புரிகிறது.
அதாவது, ஒரு தரப்பு தனது மாமன், மாமனை விட்டுக்கொடுக்க முடியுமா? என்பதுபோலவும் அடுத்த தரப்பு அவன் என் மச்சான், என் மச்சானை விட்டுக் கொடுக்க முடியுமா? என்பதுபோலவும் வாதப்பிரதிவாதம் புரிகிறார்கள்.
இவ்விரு தரப்பும் உங்கள் குடும்பமா? கண்ணை மூடிக்கொண்டு நியாயம், அநியாயங்களுக்கப்பால் வாதாடுவதற்கு. குடும்பமென்றாற்கூட நியாயத்தின் பக்கத்தில்தான் நிற்கவேண்டும்; ஆனாலும் பெரும்பாலும் அவ்வாறிருப்பதில்லை.
இவர்கள் யார் நமக்கு. ஏன் கண்மூடித்தனமாக ஆளுக்கொரு தரப்பை ஆதரித்துக்கொண்டு, தான் ஆதரிப்பதற்காக அத்தரப்பை நியாயப்படுத்துகிறீர்கள். மாறாக, ஒரு நடுநிலையான மனோநிலைக்கு வந்து, இருபக்கமுமுள்ள பாதகங்களை மீண்டும் மனத்திரைமுன் கொண்டுவாருங்கள்.
அவற்றை அசைபோடுங்கள். யாரையும் யாரும் தாக்காமல் நாம் எல்லோரும் சகோதரர்கள். எந்தப் பக்கம் முடிவெடுப்பது இச்சந்தர்ப்பத்தில் நமக்கு உசிதமானது; என ஏன் தீர்மானிக்க முடியாது?
எல்லாமுட்டையையும் ஒரு கூடையில் வைக்கக்கூடாது.
——————————————————
கோட்டாவுக்கு ஆதரவளிப்பதன்மூலம்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்; அல்லது சஜித்தின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட சாத்தியமான ஆபத்துக்களைவிட கோட்டாவின் ஆட்சியில் ஆபத்துக்கள் குறைவாகத்தான் இருக்குமென்பதுதான் யதார்த்தமென்றால் அனைவரும் கோட்டாவுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை.
ஆபத்துக்கூடிய வேட்பாளரைத் தெரிவுசெய்து நாளை அதனால் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் மறுமையில் அதற்கும் நாம் பதில் சொல்லவேண்டும். ஆனால், எந்தவகையில் அந்த முடிவுக்கு வந்தீர்கள்; என்பதற்கான நியாயத்தைக்கூறவேண்டும்.
கடந்தகால, சமகால நிகழ்வுகள், அவர்களின் கொள்கை நிலைப்பாடுகள், அவர்களுடன் இணைந்திருப்பவர்கள், இவை அனைத்தும் தொடர்பாக ஒரு முழுமையான பார்வையில் ஆராயப்படவேண்டும். ( A holistic analysis).
அதைவிடுத்து ஒரு தரப்பு, ‘உங்களுடன் விமல், உதய, டிலான்’ போன்றவர்கள் இருக்கின்றார்கள்; என்றால் அடுத்த தரப்பு ‘உங்களுடன் சம்பிக்க’ இருக்கிறார்; என்பது. ஏட்டிக்குப்போட்டி. யாருக்காக இந்தப்போட்டி?
இதில் மிகப்பெரிய ஜோக், டிலான் பெரேராவையும் இனவாதி பட்டியலில் சேர்ப்பது. இவ்வாறு தாம் இருட்டில் தடவிக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்ட ஒருகூட்டம்.
இதேபோன்றுதான், சஜித்திற்கு வாக்களிக்க வேண்டுமானால் அதற்கான நியாயங்களை கடந்தகால, சமகால அனுபவத்தின் அடிப்படையில் முன்வைக்க வேண்டும். அதன்பின் ஏற்படுகின்ற தெளிவின் அடிப்படையில் கோட்டாவோ, சஜித்தோ, சமூகம் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். ஆனால் இன்று நாம் அதற்கெல்லாம் ஆயத்தமில்லை.
யாராவது கடந்தகால மஹிந்த அரசினால் ஏற்படும் பாதிப்புக்களை எழுதினால் மஹிந்தவாதிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது. ரணிலின் ஆட்சியின் குறைபாடுகளை எழுதினால் அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது. நீங்களெல்லாம் யார்?
ஏன் இருதரப்பு விடயங்களையும் நடுநிலை மனோநிலையில் இருந்து ஆராய்வதற்கு ஆயத்தமில்லாமல் இருக்கிறீர்கள்.
இந்த லட்சணத்தில் சமூகத்தை மறந்து தாம் பிரிந்து நிற்பதற்கு கொடுக்கும் இன்னுமொரு நியாயப்படுத்தல் ‘ எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது. ஒரு முன்னாள் அமைச்சரும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவர் இதை பகிரங்கமாகவே சொல்கின்றார். அவர் குறித்த ஒரு தரப்பை ஆதரிப்பதற்குக் காரணம் அத்தரப்பு, சரியானதென்பதல்ல. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது; என்பதாகும்.
மறுவார்த்தையில் கூறுவதாக இருந்தால் நாம் இருப்பதோ 10%, கத்தி தலைக்குமேல் தொங்குகிறது. சேர்ந்து முகம்கொடுக்காமல் பிரிந்து நிற்போம்; என்கின்றார். பிழையான கூடையில் முட்டையைப் போட்டு முட்டை கூழானாலும் பறவாயில்லை. ஒரே கூடையில் போடக்கூடாது; என்கிறார்.
எல்லோரும் நல்ல வேட்பாளர்களே! என்றால் அது பொருந்தும். சில கூற்றுக்கள் பொதுவாக பொருந்தும். சில விசேட சூழ்நிலைக்குப் பொருந்தாது. மழை வரும்போது குடையை விரிக்கவேண்டும்; என்பது பொதுவான விதி. அதற்காக, மழையுடன் சேர்த்து பயங்கர சூறாவளியும் வீசும்போது குடையை விரித்தால் என்ன நடக்கும். ஆளையும் சேர்த்துத் தூக்கிப்போகாதா?
2010 ஆண்டிற்கு முந்திய ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு அந்தக்கூற்று பொருந்தலாம். இனவாதம் உச்சம்தொட்ட இந்த காலகட்டத்திற்குப் பொருந்துமா? சிந்திக்க வேண்டாமா?
நாட்டைப் பாதுகாக்க வாக்களிப்போம்
————————————————-
இன்னும் சிலர் நாட்டைப் பாதுகாக்க வாக்களிக்கப் போகின்றார்களாம். யாரிடமிரூந்து நாட்டைப் பாதுகாக்க? முஸ்லிம்கள் அடிப்படை வாதிகள், தீவிரவாதிகள்; முஸ்லிம்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அவர்கள் சிங்கள மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள். அனைத்து முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்களில் தேடுதல் நடாத்தப்பட வேண்டுமென்று ஏற்கனவே கூறியிருக்கின்றார்கள். நீங்களும் முஸ்லிம்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கத்தானா வாக்களிக்கப் போகின்றீர்கள்? அவ்வாறாயின் நீங்கள் யார்?
எனவே, அன்புள்ள சகோதரர்களே! நீங்கள் ஏதாவது தனிப்பட்ட ஆதாயத்திற்காக வாக்களிக்கப் போகின்றீர்களா? அல்லது உங்களுக்காக, உங்கள் எதிர்கால சந்ததிக்காக, இந்த சமூகத்திற்காக வாக்களிக்கப் போகின்றீர்களா?
முந்தியதுதான் உங்கள் காரணமென்றால் பேசுவதற்கெதுவுமில்லை. சில அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அதுதான் காரணம்.
பிந்தியதுதான் காரணமென்றால் முதலாவது நடுநிலை மனோநிலைக்கு வாருங்கள். “ நான் எடுக்கும் முடிவு இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக ஆக்கிவிடு இறைவா” என்ற பிரார்த்தனையுடன் சகல பக்கங்களையும் ஆராயுங்கள். அதன்பின் முடிவெடுங்கள்.
தமிழ் மக்களைப் பாருங்கள். எவ்வளவு ஆறுதலாக அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அவசரப்படவில்லையே!
நவம்பர் 16ம் திகதிதான் வாக்களிப்பு. காலம் இருக்கிறது. எல்லாப் பக்கத்தையும் ஆராயுங்கள். அதன்பின் முடிவெடுங்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.