அபிவிருத்தியடைந்த தேசங்களில் யாரும் மதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தொங்குவதில்லை.மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம் என்ற புரிந்துணர்வு அத்தனை பேருக்கும் இருக்கிறது.
தலைவர்கள் தேர்தல்கள் வரும் போது சனத் தொகை டாப்பைத் தூக்கிக் கொண்டு வந்து கிறிஸ்தவன் எத்தனை வீதம் ,முஸ்லிம் எத்தனை வீதம் ,என்றெல்லாம் கணக்கிட்டு மெஜாரிட்டியான சமூகத்தின் வாக்குகளைக் கவர மதகுருக்களையும் காடையர்களையும் மீடியாக்களையும் ஏவுவதில்லை..
தேர்தல்களில் நொமினேஷன் தாக்கல் செய்யும் போது சுற்றிவர பாதிரியார்களைச் சேர்த்துக் கொண்டு பட்டாபிஷேக உற்சவமாய் கொண்டாடி வெடி கொளுத்துவதில்லை...
கைகளில் ஏழெட்டுக் கிலோவுக்கு கணத்த மந்திரித்த வெள்ளைத் தாயத்துக்களைக் கட்டிக் கொண்டு தேசப் பற்று பேசிக்கொண்டு உலாத்துவதில்லை..
நாலு டிபென்டர் முன்னேயும் பின்னேயும் வர பிய்ந்த செருப்புடன் மொன்டேரோ ரக வாகனங்களில் இருந்து இறங்குவதில்லை.அடிப்பொடிகள் யாரும் அதை ஃபோட்டோ எடுத்து எங்கள் தலைவனின் எளிமையைப் பாரு என்று பீற்றிக் கொள்வதுமில்லை.உண்மையில் அடிப்பொடிகளோ .எடுபிடிகளோ ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களோ குறளி வித்தை கோஷ்டிகளோ அங்கே இல்லை...
குடிவரவு கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள்,காலநிலை சீர்கேடுகளை எதிர்கொள்வது எப்படி போன்ற தலைப்புக்களில் பகிரங்க தொலைக்காட்சி விவாதங்கள் அபேட்சகர்களிற்கிடையே நடக்கும்.தேர்தல் தேதியை சாஸ்திரம் பார்க்கும் கும்பலோ சூனியம் செய்யும் கும்பலோ தீர்மானிப்பதில்லை.
கருத்துக் கணிப்பு தோற்றாலே பதவி விலகுவார்கள்.பொய் சொன்னால் பகிரங்க மன்னிப்புக் கேட்பார்கள்.குற்றச் சாட்டு சுமத்தப்பட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதிர்கொள்வார்கள்..
மக்கள் போக்குவரத்து,கல்வி,மருத்துவம் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்வதில்லை..ஒரே சொல்லில் சொன்னால் உன்னதம்.....
இலங்கை போன்ற பாதாள உலக தேசத்திற்கு மதம் தான் பிஸ்னஸ்..சுபநேரம் பார்த்து வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவார்கள்..அப்படியே பல நூறு கோடிகளை லபக்கென்று சுருட்டிவிட்டு வெள்ளை வேளேர் என்று மதஸ்தலங்களுக்குச் செல்வார்கள்..
காலையில் ஆட்களை கொலை செய்வார்கள்.மாலையில் பூத்தட்டு ஏந்தி பன்சலைக்குச் செல்வார்கள்..
வேட்பாளர்கள் தேர்தல்காலங்களில் ஒவ்வொரு மதஸ்தலங்களாய் ஏறி இறங்குவார்கள்.சேர்ச்சுக்குப் போவார்கள்.திருநீறு பூசிக் கொள்வார்கள்.தொப்பி போட்டு ஹலாலாகுவார்கள்.
அரசியல்வாதிகள் மதக் கலவரங்களை உண்டாக்குவதில் பீ எச் டீ முடித்து இருப்பார்கள்.வருடத்திற்கு ஒரு கலவரம் ரஜினி படம் போல ரிலீஸ் செய்வார்கள்...
மழைக்காலத் தேரையை தும்புத்தடி எடுத்து எவ்வளவுதான் விரட்டினாலும் அது வீட்டைப் பார்த்துக் கொண்டு தான் வீதியில் போய் விழும்.அதே போலத்தான் இங்கே உள்ள தலைமைகளும்.எத்தனை தடவை தோற்றாலும் ஓய்வே பெறுவதில்லை.சலிப்பில்லாத மழைக்காலத் தேரை போல இருப்பார்கள்..
மக்கள் வெம்பி வெந்தபடி ரயில்களில் செல்வார்கள்.ஸ்ட்ரைக் நடக்கும் தினங்களில் ரயில் கூரை மேல் ஏறி ஆபிஸ் போய் கூகிளில் "புல்லட் ட்ரெய்ன் சேர்விஸ்" என்று தேடிப் பார்ப்பார்கள்..நடுவீதியில் ஹு போடுவார்கள்.ஃபேஸ்புக் கமெண்டில் யாருக்காவது எப்போது பார்த்தாலும் சுவர்க்கம் நரகம் ஃபத்வா கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்...வீடு வாங்க வாகனம் வாங்க ஆயுள் முழுக்க கடன்படுவார்கள்.அடுத்தவனின் வீட்டையும் வாகனத்தையும் எரித்துவிடுவார்கள்.தனிமனித ஒழுக்கம் பற்றி நிறையப் பேசுவார்கள்.
அமெரிக்கா ஐரோப்பா தேசங்களில் நிரந்தரக் குடியுரிமை,வதிவிடம்,சொத்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அலைமோதுவார்கள்.அவர்கள் மேற்குலக கலாச்சாரத்தை விமர்சிக்கும் போது ஜெயவேவா என்றபடி பலமாய் கைதட்டி மகிழ்ந்துவிட்டு பஸ்ஸில் எவளையாவது உரசியபடி "வெஸ்டர்ன் கல்ச்சர் நமக்கு ஒத்துவராது.இது தொன்மையான பாரம்பரியமிக்க நாடு " என்றபடி வீடு வந்து சேர்வார்கள்..
கடைசியாக இப்படியே வாட்ஸப்பும் வறுமையுமாய் வாழ்ந்து மடிவார்கள்.......

(Zafar Ahmed)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.