நேற்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் கோல் ஃபேஸ் கூட்டத்தில் இருந்த சனத்திரளை ஜியோகிராபிக் இன்போர்மேஷன் சிஸ்டத்தில் போட்டுப் பார்த்தால் இரண்டரை இலட்சம் தாண்டுகிறது என்று சொன்னார் குறித்த துறையில் எம் எஸ் ஸீ பட்டதாரி ஒருவர்.சிஸ்டம் கிடக்கட்டும்.ஆனால் ஒரு வேலை நாளில் இத்தனை பேரைக் கூட்டி இருக்கிறார்கள்.இத்தனை பேருக்கும் வேலை வெட்டி இருக்கிறதா என்று கேள்விக்குப் பதில் இல்லை.
இங்கே பஸ் பஸ்ஸாய் சனத்தைக் கூட்டி வந்து இறக்குவது தான் அனைத்து அரசியல் கட்சிகளின் பொது லட்சணம் ,இலங்கையின் தேசிய அடையாளம் என்பதால் கடந்துவிடலாம்.
சஜித் பிரேமதாஸ ஒருவரே யூ என் பீ இன் கடைசி நேர மீட்பராக இருப்பதாலும் 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு யூ என் பீ தனது சொந்தக் குதிரையைப் பந்தயத்தில் இறக்கியிருப்பதாலும் கூட்டத்தை செயற்கையாய் கூட்டுவது எல்லாம் தாண்டி மிகுந்த உத்வேகத்துடன் தேர்தலில் தாமாகவே இறங்கி இருக்கும் அடிமட்ட யூ என் பீ தொண்டர்களைப் பார்க்க முடிகிறது.
சஜித்திற்கு மிகப் பெரும் மைனஸாய் இருப்பது இரண்டே இரண்டு விடயங்கள்.ஒன்று மகிந்த ராஜபக்‌ஷ.உண்மையில் மகிந்த நான்காவது தடவையாகப் போட்டி போடும் தேர்தல் இது.கோட்டாபய ஐந்தாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப் மாணவன் மாதிரி என்றால் மகிந்த தான் தாய்..அவர் தான் எல்லாமே.இந்த நிமிஷம் மனுஷன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் கோட்டாபய படு தோல்வியடைவார்.அடுத்த மைனஸாய் சஜித்துக்கு அமைந்து இருப்பது ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களும் தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகளும்..
பாதுகாப்புப் பிரச்சினைகள் என்று சொல்லும் போது ஞாபகத்தில் வருகிறது 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.2002 இல் ரணில் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஆட்சியையும் பறிகொடுத்து அமெரிக்கனோ காபி குடித்துக் கொண்டிருந்தார்.'ரணில் என்றால் புலி 'என்று தேசம் எங்கும் போஸ்டர் ஓட்டித் தீர்த்தது ஜே.வி.பி."புலிகளிடம் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் மிஸ்டர் பீன் "என்றார் மங்கள சமரவீர.
மாத்தறை கொழும்பு பஸ்களிலும் ருஹுனு குமாரி ட்ரெய்னிலும் பயணிகளால் ரணில் செம்மையாய் ஆசீர்வாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.ஒரு யூ என் பீக்காரனைப் பார்க்க ஆசையாக இருந்தது.அந்தளவுக்கு மகிந்த அலை வீசியடித்தது.."ரணில் எழுந்து நிற்கவே முடியாதளவுக்குப் படு கேவலமாய் தோற்றுப் போவார்" என்று நினைத்தேன்.ஆனால் வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வோட்டுக்களால் தோற்றுப் போனார்.வடமாகாணத்தில் தமிழர்கள் வோட்டுப் போட்டு இருந்தால் ரணில் தான் ஜனாதிபதி.ஆக புலி என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு தலைவர் தமிழ் மக்களின் வோட்டுக்கள் இல்லாமல் தோற்றுப் போனது ஒரு அவல நகைச்சுவை.
2005 ஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் பதியுதீன் மகிந்தவின் ஆஸ்தான தோழராய் இருந்தார்.கிழக்கில் குறிப்பிட்டளவு முஸ்லிம் வாக்குகள் மகிந்தவுக்குச் சென்றன.அதை இம்முறை காத்தான்குடி ஜனாதிபதி ஹிஸ்புல்லா எடுக்கக்கூடும்.அல்லது கோட்டாவுக்கு கை காட்டக் கூடும்..மேலும் முஸ்லிம் இளைஞர்களின் வாக்குகள் ஜேவிபி பக்கமும் விழக் கூடும் என்பதால் ஆக இம்முறை ஜனாதிபதியை தீர்மானிக்கப் போவது தமிழர்கள்.அதுவும் வடமாகாண தமிழ் வாக்குகள்.வடமாகாணத்தில் எழுபத்தைந்து ,எண்பது வீதம் வாக்களிப்பு நடந்தால் சஜித் ஜனாதிபதி வாக்களிப்பு மந்தமாய் இருந்தால் கோட்டா ஜனாதிபதி..

(zafar ahmed)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.