தேர்தல் ஒன்றுக்கான திகதி அறிவிக்கப்பட்டால் கருத்துக் கணிப்புக்களுக்கும், ஆய்வறிக்கைகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை.

அதிலும் ஏனைய தேர்தல்களைவிட இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சாத்தியமான இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே உள்ளதனால் ஆய்வறிக்கைகள் மலிந்து காணப்படுகின்றது. 

இது அரசியல்வாதிகளிடமிருந்து பணம் சம்பாதிப்பதற்கான புதுவகையான தந்திரோபாயமே தவிர அதில் எந்தவித உண்மையும் இல்லை. ஏனெனில் கடந்தகால வரலாற்றில் வெளியான எந்தவொரு ஆய்வறிக்கைகளும் தேர்தல் பெறுபேறுகளுடன் ஒத்துப்போனதில்லை.

அது ஒருபுறமிருக்க, யார் வெற்றி பெறுவார் என்ற அறிக்கையை அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளதாகவும், புலனாய்வு துறையினர் துல்லியமான அறிக்கைகளை தயாரித்துள்ளதாகவும் வதந்திகள் பரப்பப்படுவது வழமையாகும்.

வாக்களிக்கின்ற மக்கள் நாட்டின் பல பாகங்களிலும், மூலை முடுக்குகளிலும் பரந்து காணப்படுகின்ற நிலையில், யார் வெற்றிபெறுவார் என்று எங்கயோ இருக்கின்ற அமெரிக்க தூதரகம் எவ்வாறு அறிக்கை வழங்க முடியும் ? 

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சுமார் இருபது நாட்கள் இருப்பதனால் அதற்குள் பிரச்சார தந்திரோபாயங்கள் காரணமாக மக்கள் மனதில் பலவித மாற்றங்கள் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த காலப்பகுதிக்குள் அரசியல் பிரமுகர்களின் கட்சித் தாவல்கள் நடைபெறலாம். மதில்மேல் பூனையாக இருக்கின்றவர்கள் மற்றும் யாருக்கு வாக்களிப்பது என்று இதுவரையில் முடிவெடுக்காமல் இருக்கின்றவர்களின் மனோநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இவைகள் ஒருபுறமிருக்க தேர்தல் நடைபெறுவதற்கு முன்புள்ள சில மணித்தியாலங்களுக்குள் வாழ்வாதாரப் பொருட்கள் அல்லது பணம் வழங்கப்பட்டு அப்பாவி ஏழைகளின் வாக்குகள் விலைக்கு வாங்கப்படலாம்.

அத்துடன் அரசியலில் திடீர் திடீரென ஏற்படுகின்ற மாற்றத்தினால் வேட்பாளர்களின் செல்வாக்கில் வீழ்ச்சியும், வளர்ச்சியும் திடீரென ஏற்படலாம். இதற்கு இருபத்தி நான்கு மணித்தியாலங்கள் போதுமானது. 

இவ்வாறான களநிலவரங்களை துல்லியமாக அறியாமலும், நடுநிலையாக சிந்திக்காமலும் ஆய்வறிக்கை என்ற போர்வையில் தான் சார்ந்த வேட்பாளருக்கு சாதகமாக அறிக்கைகளை வெளியிட்டு அவரை மகிழ்சிப்படுத்துவதுடன் பணம் சம்பாதிக்கின்ற பொய்யர்கள் மத்தியில் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு வெளியிடப்படுகின்ற அறிக்கைகள் மக்களை குழப்புவதற்கான தந்திரோபாயம் என்பது வேட்பாளர்களுக்கு தெரியாமலில்லை. ஆனாலும் தளம்பல் நிலையில் உள்ள வாக்காளர்களை தன்பக்கம் ஈர்க்க முடியும் என்பது வேட்பாளர்களின் தந்திரோபாயமாகும்.

எனவே யார் வெற்றிபெறுவார் என்று தேர்தல் நடைபெறுவதற்கு முன்புள்ள ஒருசில தினங்களுக்கு முன்பு ஊகிக்கலாமேதவிர, எந்தவொரு ஆய்வரிக்கைகளாலும் நூறுவீதம் உறுதியாக கூறமுடியாது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.