ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் நடத்தும் இறுதி கலந்துரையாடலாக இது அமைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெறும் தினத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதன் பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களில் உறுப்பினர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினது பிரதிநிதிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் மேலும் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று முதல் அமைதிகாலம் நடைமுறைப்படுத்தப்படுவதால் தேர்தல் வாக்குசாவடிகள் அமைந்துள்ள பிரதேசங்களில் செயற்பட்டுவந்த அனைத்து தேர்தல் காரியாலயங்களும் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தேர்தல் கடமைகளுக்காக 9 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

AdaDerana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.