2009 மே மாதம் முள்ளியவாய்காலோடு முடிவுற்ற இறுதி யுத்தத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் போனார்கள். இந்த யுத்த குற்றம் மேற்கொண்ட இராணுவத்தினரும், அதற்கு தலைமை தாங்கிய இராணுவ தளபதியுமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இராணுவத் தளபதி மீது குற்றம்சாட்டாமல் பாதுகாப்பு செயலாளர் மீதே தமிழ் மக்கள் விரலை நீட்டினார்கள்.

2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்ததன் மூலம் அவர் குற்றமற்றவர் என்ற சைகையை காண்பித்தார்கள்.

அவ்வாறானால் யார் யுத்தக் குற்றம் மேற்கொண்டார்கள் ?

ஒரு யுத்தம் நடைபெறுகின்றபோது மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ ரகசியங்கள் வெளியாகுவதில்லை. ஆனால் அவர்களுக்குள் அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டால் ரகசியங்கள் வெளியாகுவது இயல்பாகும். அதனாலேயே இறுதி யுத்ததின்போது அரசாங்கம் மேற்கொண்ட பல ரகசியங்கள் அம்பலமானது.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலிகள் தங்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களை ஒவ்வொன்றாக இழந்துகொண்டு பின்வாங்கி சென்றபோது அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழ்ந்த மக்களும் இடம்பெயர்ந்து சென்றார்கள்.

இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதனால் மக்களை வெளியேற்றும் வரைக்கும் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இரு தரப்புக்களுக்கும் ஐ.நா சபை அழுத்தம் வழங்கியது.

இந்த சூழ்நிலையில் யுத்த நிறுத்தத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடன்பட்டாலும் பாதுகாப்பு செயலாளர் கோட்டப்பாய உடன்படவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றதனால் ஐ.நா அதிகாரிகளாலும் அங்கிருக்க முடியாமல் வெளியேறினார்கள்.

பின்பு எதிர்பார்த்ததுபோன்று ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கனரக ஆயுதங்களின் எறிகணை வீச்சினால் கொல்லப்பட்டார்கள்.

இறுதியில் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதன்பிள்ளையின் அனுசரணையுடன் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் தலைமையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

சரணடைந்தவர்களை பத்திரமாக பாதுகாக்குமாறு இராணுவ தளபதியினால் உத்தரவிடப்பட்டும் இறுதியில் சரணடைந்தவர்கள் அனைவரும் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

வெளியுலகுக்கு தெரியாத இந்த ரகசியங்களும் இராணுவத் தளபதியினாலேயே வெளிப்படுத்தப்பட்டது. அதனால் சரத் பொன்சேக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்பாவி சிறுபான்மை மக்களின் ஆயிரக்கணக்கான உயிர்களைவிடவும் சிங்கள மக்களிடம் வெற்றிச் செய்தியை கூறி தனது அரசியல் சக்தியை பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அன்று கோத்தாவின் மனதில் இருந்தது.

யுத்தக் குற்றம் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான காட்சிகள் மேற்குலக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டதுடன், இந்த விவகாரம் ஐ.நா சபைக்கும் சென்றது.

இந்த சம்பவம் மூலம் முஸ்லிம்களும் படிப்பினை பெறவேண்டும். அதாவது அண்மையில் மௌலவி சஹ்றான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்பு சந்தேகத்தின்பேரில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு சில வாரங்களின் பின்பு விடுவிக்கப்பட்டார்கள்.

ஆனால் இந்த சூழ்நிலையில் கோத்தா அதிகாரத்தில் இருந்திருந்தால் இன்னும் வகைதொகையின்றி ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு காணமல் போயிருப்பார்கள். அதாவது தமிழ் மக்களின் நிலைமைதான் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

எனவேதான் கோத்தபாய அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று வரிந்துகட்டுபவர்கள் அவர் யார் என்பது பற்றி முதலில் அறிந்திருக்க வேண்டும்.   

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.