வை எல் எஸ் ஹமீட் 

யாரை ஆதரிப்பது?



சென்ற தொடரில் கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் எவ்வாறு வித்திடப்பட்டு, வளர்ந்து வந்தது; எனப்பார்த்தோம்.

நடந்த பிரதான சம்பவங்கள்
————————————-
முஸ்லிம்களுக்கெதிராகவும் இஸ்லாத்திற்கெதிராகவும் நாளாந்தம் வன்சொற்களும் இழிசொற்களும் இனவாதிகளால் வீசப்பட்டன. இந்த இனவாதிகளுக்குப் பின்னால் அரசு இருந்ததா? இல்லையா? என்பது வாதப்பிரதிவாதங்களுக்குள்ளாகலாம். யார் பின்னால் இருந்திருந்தாலும் அரசுக்கு ஒரு கடமை இருந்தது அவற்றைக் கட்டுப்படுத்த. ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

முஸ்லிம் தலைமைகள், ஜம்மியத்துல் உலமா உட்பட சிவில் அமைப்புகள் செய்த எந்த முறைப்பாட்டையும் அரசு சட்டை செய்யவில்லை. இனவாதிகள் சட்டத்திற்கப்பாற்பட்டவர்களாக செயற்பட்டார்கள். பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பு வளர்ந்துகொண்டே வந்தது. இருவருக்கிடையில் நடக்கும் சிறிய சம்பவங்களே பெரிய கலவரங்களாக மாறும் நிலை உருவானது.

அவ்வப்போது பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இன்று இரண்டொரு பள்ளிவாசல்கள்தான் தாக்கப்பட்டன; என நம்மவர்களே கூறுகிறார்கள்.

இந்த வரிசையில்தான் அளுத்கம, பேருவளை வன்செயல் அரங்கேறியது. முழு உலகமும் நேரலையாக பார்த்துக்கொண்டிருக்க, ஞானசார தேரர் பொதுக்கூட்டம் நடாத்தி அதில் சிங்கள மக்களை வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கெதிராக தூண்டினார்.

அதன்பின் முஸ்லிம் பகுதிகளை ஊடறுத்து வெண்டுமென்றே முஸ்லிம் எதிர்ப்புக்கோசங்களுடன் ஊர்வலம் சென்று அளுத்கம- தர்கா டவுன், பேருவளை போன்ற பிரதேசங்கள் துவம்சம் செய்யப்பட்டன. அடுத்த நாள் அதிகாலைக்குள் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது உண்மைதான். ஆனால் அனைத்தும் அந்த ஒரு இரவிற்குள்ளேயே அழிக்கப்பட்டன.

ஞானசார தேரரின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே அதனைத் தடுத்துநிறுத்துமாறு முஸ்லிம் தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது. அனைத்தையும் நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பம் ஒரு முழு இரவும் வழங்கப்பட்டது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா போன்றவர்கள் அந்த காரிருள் கருக்கொண்ட இரவில் களத்திற்கு விஜயம் செய்து கலங்கிப்போன மக்களுக்கு ஆறுதலளிக்க சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. அங்கு புலிகள் தாக்குதல் நடாத்தவில்லை. சாதாரண மக்கள்தான் செய்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் களத்திற்குகூட விஜயம் செய்ய ஏன் அனுமதி மறுக்கப்பட்டது?

துரதிஷ்டவசமாக, அந்த சம்பவத்தைக்கூட வேறுயாருடையவோ தலையில்கட்டி, அந்த அழிவுகளுக்கு காரணம் கற்பித்து அந்த அரசை நியாயப்படுத்த நம் சமூகத்திற்குள்ளே அரசியல் தலைமகள் இருக்கின்றன. அரசியல் அவ்வளவு சுகமானது.

பல இடங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாகின. Fashion Bug, Nolimit......என்று இரையான வர்த்தக நிலையங்களின் பட்டியல் விரிந்தது.

நாளாந்த நெருக்குவாரத்தால் முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளையும் அச்சுத்துடனும் அந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவா இறைவா? என்ற பிரார்த்தனையோடும்தான் கழித்தார்கள்.

அன்றைய நெருக்குவாரத்தின் எல்லைக்கான அளவுகோலாக வரலாற்றில் முஸ்லிம்கள் 90% இற்குமேல் அந்த ஆட்சியை ஒழிக்க  ஒன்றுபட்டார்கள். அரசியல் கட்சிகள் முடிவெடுக்க முன்பே சமூகம் முடிவெடுத்த முதல் தேர்தல் அது. ஏனைய சிறுபான்மைகளும் அதேபோல் ஒன்றுபட்டார்கள்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது என்னவென்றால், வரலாற்றிலேயே முதல்தடவையாக, தேர்தல் பிரகடனம் செய்யப்பட்டபின் எத்தனையோ தனவந்தர்கள் உம்றா சென்றார்கள் அந்த ஆட்சியை அகற்றுவதற்கு பிரார்த்தனை புரிவதற்காக. அதுவொன்றே போதும் அந்த ஆட்சியின் அகோரத்தை அளவிடுவதற்கு.

இன்றைய ஆச்சரீயம்
—————————
இந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடந்தது. அதற்கு அடுத்ததாக வருவோம். ஆனால் அன்று அனைத்து சிறுபான்மையும் ஒன்றுபட்டு துரத்திய ஆட்சியாளர்கள்,உம்றா சென்று பிரார்த்தித்து அகற்றிய ஆட்சியாளர்கள் இன்று சிலருக்கு நல்லவர்களாக மாறியதெவ்வாறு?

இன்றைய ஆட்சி கடந்த ஆட்சியைவிட அகோரமான ஆட்சி, அதனால் அந்த ஆட்சியை விரும்புகிறோம்; என்ற ஒரு பதிலை இதற்கு வழங்கலாம். அதற்காகத்தான் இரு ஆட்சியையும் இத்தொடரில் ஒப்பீடு செய்யப்போகின்றோம்; இன்ஷாஅல்லாஹ். அதற்குமுன் இங்கு எழுகின்ற கேள்வி:

அது சரியாயின் மொத்த முஸ்லிம் சமூகமும் அந்தப் பக்கம் சாயவேண்டுமே! ஆனால் பெரும்பான்மை இன்னும் இந்தப்பக்கம் நிற்கின்றதே!

கடந்த தேர்தலில் முழுமையாக ஒற்றுமைப்பட்ட ஒரு சமூகம் இந்தத் தேர்தலில்  அன்னம், மொட்டு, திசைகாட்டி, ஒட்டகம் என பிரிந்து நிற்கின்றதென்றால் அன்றிருந்த நெருக்குவாரம், அகோரம் இன்று இல்லையென்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?

—————————————————————-
இது ஒன்றும் போதுமே எது அதிகம் பாதிப்பானது; எது குறைவாக பாதிப்பானது; என்பதற்கு சாட்சி பகர; என்றால் அது பிழையாகுமா? ஆம், எனில் எவ்வாறு?
—————————————————————
மட்டுமல்ல, ஜனாதிபதி ஆட்சிமுறை முஸ்லிம்களுக்கு தேவையா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினால் சகல தரப்பையும் ஆதரிப்பவர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி முறைமை இருக்கவேண்டுமென்றே பதிலளிப்பார்கள்.

எந்தவகையில் முஸ்லிம்களுக்கு சாதகமானது? என்ற அடுத்த கேள்விக்குப் பதில்: முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது. எனவே, முஸ்லிம்களே ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்றார்கள்; அவ்வாறு தீர்மானிக்கின்றபோது அவர் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வார்; என்பார்கள்.

கடந்த காலங்களில் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டவர்கள் அரவணைத்துச் சென்றார்களா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க; எதிர்காலத்தில் நம்பிக்கைவைத்தாலும் அவ்வாறு ஒருவரைத் தீர்மானிக்க சமூகம் ஒற்றுமைப்பட வேண்டுமே! வெவ்வேறு பக்கங்களில் பிரிந்துநின்று எல்லோரையும் தீர்மானிக்கப்போகின்றோமா?

இந்தப் பின்னணியில் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது; என்ற தத்துவம் பொருந்துமா?

எந்த நோக்கத்திற்காக ஜனாதிபதி முறைமையை வேண்டுமென்கின்றோமோ, அந்த நோக்கத்தை நாமே பிரிந்து நின்று நாமே தோற்கடிக்கப்போகின்றோம்; என்பதைப் புரியாமல் பட்டிமன்றம் நடாத்துகின்றோமே! அது யாருக்காக?

கடந்த தேர்தலில் ஒரு தரப்பு தனி சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றிபெற வேண்டுமென இனவாதத்தைக் கட்டவிழ்த்தும் தோல்விகண்டார்கள். ஆனாலும் அவர்கள் முயற்சியைக் கைவிடவில்லை.

இம்முறையும் அதே பரீட்சையில் இறங்கினார்கள். முஸ்லிம்கள் மீதுள்ள  இறைவனின் கருணையினாலாக இருக்கலாம்; இம்முறை அநுரவும் மகேஷ் சேனாநாயக்காவும் களத்தில் இறங்கி ஓரளவு சிங்கள பௌத்த வாக்குகளைப் பிரிக்கப்போகிறார்கள். இல்லையெனில் இம்முறை தனி சிங்கள பௌத்த வாக்குகளால் இலகுவாக வெற்றிபெற வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

இவர்கள் இருவரும் களத்தில் குதித்ததால் குறையப்போகும் சிங்கள பௌத்த வாக்குகளை ஈடு செய்வதற்கு நம்மில் சிலர் முயற்சிக்கின்றோமே! இது அறிவுடைமையா? இவர்கள் இருவரும் களத்தில் குதிக்காவிட்டிருந்தால் இன்று இரண்டாம் வாக்கைப் பற்றிப்பேச சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.

ஏதோ ஒரு தரப்பு இலகுவாக 50% ஐத் தாண்டியிருக்கும். கடந்தமுறையைப் போலல்லாது சிறுபான்மை ஓரளவு பிரிந்து நிற்கின்ற இந்த சூழலில் இனவாதத் தரப்பு இலகுவாக 50% ஐத் தாண்டியிருக்கும்.

கடந்த தேர்தலில் 4 1/2 லட்சம் வாக்குகளால்தான் தோல்வியுற்றோம். இம்முறை 2 1/2 லட்சம் வாக்குகளை மேலதிகமாக பெற்றுவிட்டால் சிறுபான்மையின் வாக்குகள் இல்லாமலே வெற்றிபெறலாம்; எனக் கணக்குப் போட்டவர்களின் எண்ணத்தில் இவர்கள் இருவரது வரவும் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது.

இவர்களின் வரவு ஒரு தரப்பிற்கு மாத்திரம்தான் பாதிப்பா? கடந்த தேர்தலில் மைத்திரிக்கு கிடைத்த வாக்குகள் இப்போது ஐ தே கட்சிக்கு இல்லாமல் போகப்போகிறதே! எனவே, எதிர்த்தரப்புற்கு வாசிதானே! என்றொரு கேள்வியை இங்கு எழுப்பலாம்.

நிச்சயமாக ஐ தே க தரப்புக்கு பாதிப்புத்தான். மறுக்கவில்லை. அநுர புதிதாக கவரப்போகின்ற வாக்குகளில் கணிசமான அளவும் மகேஷ் கவரப்போகின்ற வாக்குகளின் பெரும்பகுதியும் எதிர்த்தரப்பு வாக்காக இருக்கப்போகின்றது. அதனால்தான் 50% + சாத்தியமில்லை என்பதைப் பற்றிப்பேசப்படுகின்றது.

இல்லையெனில் இனவாதத்தின் மூலம்  2 1/2 லட்சம் பௌத்த வாக்குகளை மேலதிகமாக பெற்றால் 50% ஐத் தாண்டவேண்டுமே! 50% இற்கும் குறைந்த வாக்குகளை ஏனைய அனைத்து எதிர்த்தரப்புகளும் பங்கிட்டாலும் பாதிப்பு இல்லையே!

எனவே, இவர்களின் வரவு சிங்கள பௌத்த வாக்கை மட்டும் நம்பியவர்களுக்கு பெருத்த இடியாக மாறியிருக்கிறது. அதேநேரம் இன்றைய களநிலவரம் அடுத்த தரப்புக்கு சாதகமாக பௌத்த வாக்குகளைப் பொறுத்தவரையிலும் மாறிக்கொண்டிருக்கின்றது; என்பது இன்னுமொரு விடயம். இன்ஷாஅல்லாஹ், புள்ளிவிபரம் தொடர்பாக பார்க்கும்போது அதனைப் பார்ப்போம்.

இன்று முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிக்கச்செய்ய எத்தனையோ உத்திகள் கையாளப்படுகின்றன. சுயேச்சையும் அதிலொன்று. தேர்தல் தினத்தன்று வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம் பிரதேசங்களில் சில அசம்பாவிதங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களின் வாக்களிப்பு விகிதத்தை குறைக்க திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இறைவன் பாதுகாக்க வேண்டும்.

நாம் ஒன்றை மாத்திரம் சிந்திக்க வேண்டும். பௌத்த வாக்குகளால் மட்டும் வெற்றிபெற எத்தனித்த, எத்தனிக்கின்ற தரப்பு வெற்றிபெற்றால் அதன்பின் நிலைமை என்ன? என்பதை புரியமுடியாதவர்களாக நமது சமூகம் இல்லை. அதன்பின் எதிர்காலத்தில் எல்லா வேட்பாளர்களும் தனி பௌத்த வாக்குகளை இலக்குவைத்து பௌத்தர்களுக்காகவே ஆட்சிசெய்யத் தொடங்கினால் நிலைமை என்ன?

இப்பொழுதே ரத்ன தேரர் இறைச்சிக்கடையில் எதிர்காலத்தில் மாட்டிறைச்சி, கோழியிறைச்சி, பன்றியிறைச்சி எல்லாம் விற்கவேண்டும்; என்பதை அந்த வேட்பாளர் அனுமதித்திருப்பதாக ஆவணமொன்றை பதிவேற்றியிருக்கின்றார்.

எனவே, எந்தத் தரப்பு ஒரு சமூகத்தின் வாக்குகளை மட்டும் நம்பி இனவாதம் பேசி களத்தில் குதித்ததோ அத்தரப்பிற்கெதிராக நாம் ஒன்றுபட்டு இந்நாட்டில் ஒரு சமூகம் மாத்திரம் ஜனாதிபதியைத் தீர்மானிக்கமுடியாது; என்பதை நிரூபித்து எந்த நோக்கத்திற்காக நாம் ஜனாதிபதி முறைமையை விரும்புகின்றோமே அதனை நிறுவுவதன்மூலம் ஓரளவாவது முஸ்லிம்களைப் பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்.

அதற்காக அடுத்த தரப்பு வெற்றிபெற்றால் தேனாறு, பாலாறு ஓடும் என்பதுமல்ல. அடுத்த பதிவில் இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் தொடர்பாகப் பார்ப்போம்.

(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.