( மினுவாங்கொடை நிருபர் )

   2020 புத்தாண்டு உதயத்தில் அரச பணிகளை ஆரம்பிப்பதற்காக ஜனவரி மாதம் முதலாம் திகதி விசேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும், மாகாண பிரதம செயலாளர்களுக்கும், அரச நிறுவன பிரதானிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

   இதற்கு அமைவாக, தேசியக் கொடியை ஏற்றி தேசிய கீதத்தை இசைக்குமாறும், படை வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூறுவதற்காக இரண்டு நிமிட நேரம் மௌனம் செலுத்துமாறும் அந்த  ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   இதேபோன்று, அரச நிறுவனங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமக்குஆள வசதியான மொழியில் அரச சேவை உறுதி மொழியை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   2020 ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரச பணியை ஆரம்பிப்பது தொடர்பான பிரதான  வைபவம், ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி செயலக வளவில் நடைபெறவுள்ளது.

   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் "நாட்டை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு" என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக பணியாற்றும் நாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கான அரச சேவைச் சிந்தனையின் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதினால், இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.