சமூகத்தில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு தனியான கட்சிகள் தேவையில்லை. அவர்கள் தேசியக்கட்சிகளில் சங்கமிக்கவேண்டும்; என்ற கருத்து ஆங்காங்கே எழுந்துகொண்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்பின் அந்தக் கருத்து இன்னும் சற்று வியாபித்திருக்கின்றது.

கடந்தகாலங்களில் இந்தக் கருத்து எழுந்ததற்கான காரணம் முஸ்லிம்கட்சிகள் முஸ்லிம்களுக்காக, குறிப்பாக மறைந்த தலைவருக்குப்பின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதனையும் செய்யவில்லை; என்பதாகும். இது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் அதற்குரிய தீர்வு மீண்டும் தேசியக்கட்சிகளில் சங்கமமாவதா? என்பதுதான் கேள்வியாகும்.

அதேபோன்று தற்போது அக்கருத்து இன்னும் சற்று வியாபிப்பதற்கான காரணம்  இக்கட்சிகளின் செயற்றிறன் இன்மைக்குமேலதிகமாக, இக்கட்சிகளைப் புறந்தள்ளுகின்ற ஓர் ஆட்சி வந்திருக்கின்றது. எனவே, அந்த ஆட்சியை சார்ந்து ஆளுங்கட்சியை ஆதரிப்பதே முஸ்லிம்களுக்கு சிறந்தது; என்பதாகும்.

இங்கு நம்மவர்கள் புரியத்தவறுகின்ற விடயம் அரசைச் சார்ந்துபோவது என்பதும் ஆளும்கட்சிக்கு வாக்களிப்பது; என்பதும் ஒன்றல்ல ; என்பதாகும்.

முஸ்லிம் கட்சியின் தோற்றத்தை பின்னோக்கினால் அதற்கான காரணம் அதுவரை தேசியக்கட்சி அரசியலில் இரண்டறக்கலந்திருந்த முஸ்லிம் சமூகத்தின் நலன் அக்கட்சிகளின் நலனுக்கு கீழ்ப்பட்டதாக இருந்ததாகும்.

இலங்கை- இந்திய ஒப்பந்ததில் முஸ்லிம்கள் கண்டுகொள்ளப்படாததே முஸ்லிம்கட்சியின் தோற்றுவாய்க்கான காரணம்; எனக்கூறுவோரும் உளர். அவ்வொப்பந்தத்திற்கு முன்னரே முஸ்லிம்கட்சி தோற்றம் பெற்றுவிட்டது. ஆனால் அவ்வொப்பந்தத்திற்கு இட்டுச்சென்ற இலங்கை- இந்தியப் பேச்சுவார்த்தை முஸ்லிம்களின் தனித்துவ இருப்பை அங்கீகரிக்க மறுத்தது ஒரு காரணமாகும். ஆனால் அது மாத்திரம்தான் காரணமல்ல.

அதற்கான அடிப்படை,  முஸ்லிம்களின் நலன் தேசியக்கட்சிகளின் நலனிற்குள் மூழ்கடிக்கப்பட்டதாகும். முஸ்லிம்களும் இந்நாட்டின் ஓர் அங்கம் என்றவகையில் அவர்களின் நலன் என்பதும் ஏனைய சமூகங்களின் நலனைப்போன்று தேசிய நலனில் ஓர் அங்கம்; என்ற யதார்த்தம் அன்று முஸ்லிம்களின் மொத்த ஆதரவையும் பெற்றிருந்த தேசியக்கட்சிகளின் உணர்வில் ஒருபோதும் இருக்கவில்லை.

இதுதொடர்பாக முஸ்லிம் தனித்துவ அரசியலின் தோற்றுவாய்க் காலத்திலிருந்து நிறைய பேசியும் எழுதியும் இருக்கின்றோம்.

அன்று தேசியக்கட்சிகளுக்குள் உள்வாங்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தக்காலில் நிற்க என்ன தேவை இருந்ததோ அத்தேவை இன்றைய சூழ்நிலையில் பலமடங்கு விரிந்துநிற்கிறதேதவிர மறைந்துவிடவில்லை மீண்டும் தேசியக்கட்சிகளில் பிணைந்துநிற்க.

அன்று முஸ்லிம்கள் வெறுமனே வாக்களிக்கும் சமூகமாக மட்டுமே பார்க்கப்பட்டார்கள். அதனால்தான் இலங்கை-இந்தியப் பேச்சுவார்த்தை மட்டுமின்றி, புத்தள சம்பவமோ(1974), காலி இனக்கலவரமோ(1982) எதிலும் முஸ்லிம் பிரதிநித்துங்களுக்கு தன் சமூகத்திற்கு நடந்த அநீதிக்கெதிராகக்கூட குரல்கொடுக்கமுடியாமல் தந்தை செல்வாவும் அண்ணன் அமிர்தலிங்கமும் குரல்கொடுக்கவேண்டி ஏற்பட்டது.

அன்று ஐ தே க ஆட்சியில் அமரும்போது அதிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் ஶ்ரீ சு க ஆட்சியில் அதன் முஸ்லிம் அமைச்சர்களும் மாறி மாறி முஸ்லிம் தலைவர்களாக காட்டப்பட்டார்கள். முஸ்லிம்களால் ஒரு தலைமைத்துவத்தை அடையாளம்காண முடியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம் தனித்துவ அரசியல் உதயமாகியது. ஆனால் இன்று தேசிய அரசியல் மீண்டும் தமக்கு வெஞ்சாமரை வீசுபவர்களை முஸ்லிம் தலைமைத்துவமாக அடையாளம்காட்ட எடுக்கின்ற முனைப்பிற்க்கு நம்மவர்களில் சிலர் துணைபோகின்றனர்.

தனித்துவ அரசியல் இனவாதமா?
——————————————
ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் உரிமைக்காக, நலனிற்காக பேசுவது, செயற்படுவது ஒருபோதும் இனவாதமாக முடியாது. அடுத்த சமூகத்திற்கெதிராக பேசுவதும் செயற்படுவதும்தான் இனவாதமாகும்.

இன்று இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிரான குடியுரிமைச் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். அது வடிகட்டிய இனவாதமாகும். அதற்கெதிராக குரல்கொடுப்பதும் போராடுவதும் எவ்வாறு இனவாதமாக முடியும்?

இன்றைய பெரும்பான்மையின் முஸ்லிம்களுக்கெதிரான பார்வைக்கு இனவாத முஸ்லிம்கட்சிகளே காரணம்; என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இந்தியாவில் பெயர் சொல்லும்படியான எந்த முஸ்லிம்கட்சியும் இல்லை. ஒரு சில உதிரிக்கட்சிகளைத்தவிர. அவையும் ஏதாவதொரு தேசிய அல்லது மாநில கட்சியில் கட்டுண்டுபோய்த்தான் இருக்கின்றன. உவைஸ் கூட ஒரு தனி உறுப்பினர் மட்டும்தான் சொந்தக்கட்சியானபோதும்.

அதற்குக் காரணம் அவர்களின் தேர்தல்முறை. இலங்கையில் தேர்தல்முறை மாறினால் இங்கும் அந்நிலைதான். அவ்வாறான இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக தற்போது உச்சம் தொட்டிருக்கும் இனவாதத்திற்கு எந்த முஸ்லிம்கட்சி காரணம்?

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 20% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலேயே காஷ்மீருக்கு அடுத்ததாக அதிக முஸ்லிம் விகிதாசாரத்தைக்கொண்ட மாநிலம் உத்தர பிரதேசமாகும்.

கடந்த மாநிலத்தேர்தலில் ஒரு முஸ்லிம் சட்டசபை உறுப்பினர்கூட தெரிவுசெய்யப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சார்பான மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியரின் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றிபெறவில்லை. முஸ்லிம்களெல்லாம் பி ஜே பி க்குத்தான் வாக்களித்தார்கள். அபிமானத்தினால் அல்ல,அச்சத்தினால். அதற்காக முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாட்டை பி ஜே பி கைவிட்டதா?

மாடறுப்பிற்காக, ஶ்ரீராம் கூறாததற்காக முஸ்லிம்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டிருக்கின்றதா?

எனவே, ஒரு சமூகம் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த தமக்கென கட்சிவைத்திருப்பது ஒருபோதும் இனவாதமாகமாது.

முஸ்லிம்காங்கிரஸ் உருவான காலத்தில் இதே இனவாதப் பயங்காட்டல்கள் செய்யப்பட்டன. ஆனால் மறைந்த தலைவர் இந்த நாட்டின் அமைதிக்கு முஸ்லிம்கட்சி அவசியம் என்பதை நிறுவினார்.

அன்று தமிழ் இயக்கங்களில் முஸ்லிம் வாலிபர்களின் இணைவு மு கா வின் வரவினால் தடுக்கப்பட்டது. ஒரு சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும்போது அதற்கெதிராக குரல் எழுப்ப குரல் இல்லையாயின் வாலிபர்கள் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுவார்கள். அது நாட்டின் நலனுக்கு குந்தகமாகும். அவ்வாறான சூழ்நிலையை மு கா தவிர்க்கப் பாடுபடுகிறது; என்பதை அவர் நிறுவினார்.

நூஆவை நிறுவியதேன்?
——————————
மு கா வினூடாக தொடர்ந்தும் இனவாத அரசியலைச் செய்யமுடியாது; என்பதனை உணர்ந்ததனால்தான் மறைந்த தலைவர் நுஆவை நிறுவியதாக புரியாத சிலர் பேசுகின்றார்கள். உண்மை அதுவல்ல.

மு கா வினூடாக மறைந்த தலைவர் செய்த நேர்த்தியான அரசியல் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பலரை அவருடன் இணையத்தூண்டியது. இவ்வாறான ஒரு தலைவர் எங்களுக்கு கிடைத்திருந்தால் இந்நாடு பொன்கொழிக்கும் பூமியாக மாறியிருக்கும்; என்ற பெரும்பான்மையினர் எத்தனையோபேர்.

இவ்வாறு ஒரு தலைவர் கிடைத்திருந்தால் எப்போதோ தமிழீழம் பெற்றிருப்போம்; என்ற தமிழர்கள் எத்தனயோபேர்.

அவர்களுக்கெல்லாம் “ முஸ்லிம்” என்ற பெயர் அக்கட்சியில் இருந்தது; அதில் இணைவதற்கு சற்று தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்களையும் அரவணைப்பதற்காகத்தான் நுஆ என்ற கட்சியைத் தோற்றுவித்தார்.

“ நுஆ” என்ற கரு அவர் உள்ளத்தில் மையம்கொண்டபோது அவர் கலந்தாலோசித்த ஒரு சிலரில் அல்லது அவ்வாறு கலந்தோலோசித்த முதலாவது நபராக நான் இருந்திருப்பேன்.

அம்பாறைத் தொகுதியில் பல இடங்களுக்கும் ( சிங்களப் பிரதேசங்கள்) விஜயம் செய்துவிட்டு அன்று இரவு மகாஓயாவில் நாங்கள் தங்கினோம். அப்பொழுது தலைவர் என்னை அழைத்தார். நான் சென்றபோது ஒரு வெள்ளைத்தாளில் எதையோ கீறிக்கொண்டிருந்தார்.

நான் சென்றதும் என்னிடம் அதனை விபரித்தார். அப்பொழுதுதான் நுஆவைப்பற்றிய எண்ணக்கருவை வடிவமைத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர்கூறியதுதான்,  ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பலர் நமது கட்சியில் இணையவிரும்புகிறார்கள். பெயர் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கிறது. பெரும்பான்மை சமூகத்தில் இருந்து நமக்கு இரண்டு எம் பி க்கள் கிடைத்தாலும் அது பெரும் பலமல்லவா? முஸ்லிம்கள் தொடர்பாக நாம் சில விடயங்களைப் பேசுவதை விடவும் அவர்கள் பேசும்போது இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா? என்றார்.

அவருடைய கருத்தில் அந்த இடத்திலேயே உடன்பாடு கண்டவன்நான். அதன்பின் அம்பாறை மாவட்ட முதலாவது நூஆ அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

எனவே, நுஆவின் தோற்றுவாய்க்குப் பின்னால் இருந்த காரணத்தை நேரடியாக அறிந்தவன்; என்றவகையில் பதிவுசெய்கிறேன். மு கா இனவாதக்கட்சி என்பதனால் நுஆவைத் தோற்றுவிக்க தலைவர் விழையவில்லை. மு கா வினூடான செயற்பாட்டினால் தலைவர் பெற்ற அபிமானம் பெரும்பான்மை சமூகத்தையும் அரவணைக்கும் நிலையை உருவாக்கியபோது அவர்களையும் உள்வாங்கவே நுஆவை உருவாக்கினார். அதன்மூலம் ஆகக்குறைந்தது இரண்டொரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த எம் பி க்களைப் பெறலாம்; என அவர் எதிர்பார்த்தார். இது அவர் மு கா வினூடாக சாதித்தது.

தற்போதைய தலைமைத்துவங்கள்.
———————————————
முஸ்லிம் அரசியல் என்பது இனவாத அரசியலல்ல. துரதிஷ்டவசமாக தலைவரின் மறைவின்பின் உருவான தலைவர்கள் என்பவர்கள்  சரியான தலைமைத்துவத்துவத்தை வழங்கத் தவறிவிட்டார்கள். நிறைய பிழை செய்துவிட்டார்கள். முஸ்லிம்கள் அவர்களுக்கு வழங்கிய அமானிதத்தைப் பாழ்படுத்திவிட்டார்கள். இனவாதம் வளர்வதற்கு அவர்களும்  தெரிந்தோ, தெரியாமலோ சில பங்களிப்பைத் செய்துவிட்டார்கள்; என்பதும் கசப்பான உண்மைதான்.

தலைவர்கள் என்பவர்கள் விட்ட தவறிற்காக தனித்துவ அரசியல் எனும் தாரகமந்திரம் பிழையாக முடியாது. வாகனத்திற்கு பொருத்தமான சாரதி அமையவில்லை; என்பதற்காக வாகனத்தையே பிழைகூறமுடியாது.

தலைவர்கள் பிழைவிட யார் காரணம்?
—————————————————
தலைவர்கள் பிழை என்பதனால் தகுதியான புதிய தலைமைத்துவத்தை அடையாளம்கண்டு அவர்பின்னால் அணிதிரள முயற்சித்தவர்கள் எத்தனை பேர்? ஒரு புதிய தலைமைத்துவமாக ஓரளவாவது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அவர் ஆகக்குறைந்தது ஒரு அமைச்சராக இருக்கவேண்டும்; என்பதுதான் சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.  மறைந்த தலைவர் மட்டுமே அதற்கு விதிவிலக்காக இருந்தார்.

நீங்கள் தெரிவுசெய்யும் தலைவர் அமைச்சராவது வேறு. ஒரு அமைச்சர் தலைவராவது வேறு. நீங்கள் இரண்டாவதற்குத்தான் தயார் எனும்போது எவ்வாறு உங்களுக்கு தகுதியான தலைமைத்துவம் கிடைக்கமுடியும்?

சரி. அவ்வாறாக நீங்கள் ஏற்றுக்கொண்ட தலைமைத்துவங்கள் சரியாக நடக்காதபோது ஆகக்குறைந்தது அவர்கள் உங்கள் பிரதேசங்களுக்கு வருகின்றபோது அவர்களிடம் கேள்வி கேட்டவர்கள் எத்தனைபேர்? அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்கள் எத்தனைபேர்?

புதிய தகுதியான தலைமைத்துவத்தைத் தேடவும் நீங்கள் தயாரில்லை. இருப்பவர்களைத் திருத்தவும் நீங்கள் தயாரில்லை. இப்பொழுது ஒரு கூட்டம் விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுவதுபோல் பேரினவாதத்திடம் மீண்டும் தஞ்சம் புகுவதுதான் தீர்வு என்கிறார்கள்.

இதுவரை முஸ்லிம்கள் அரவணைத்துவந்த ஐ தே கட்சியும் முஸ்லிம்களை உதறித்தள்ளிவிட்டு இனவாதத்திற்கு தயாராகிறது; பெரும்பான்மை வாக்குகளைக்கவர. ஒன்று இனவாத முதலீட்டில் இலாபம் அடைந்துவிட்டது. நட்டமடைந்த கட்சியும் அதே முதலீட்டிற்கு தயாராகின்றது. நம்மவர்களில் சிலர் இருட்டில் தடவிக்கொண்டிருக்கிறோம்.

பேரினவாதம் ஒரு போதும் தீர்வைத்தராது. நாம் அவர்களிடம் நமது அரசியல் பலத்தினூடாக பேரம்பேசித்தான் பெறவேண்டும்.

சிறுபான்மை அரசியல் என்பதே பேரம்பேசும் அரசியல்தான். உங்களுக்கு எதுவும் தங்கத்தட்டில் வைத்துத் தரப்படமாட்டாது. அதற்கு உதாரணமாகத்தான் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ஓட்டுமொத்த முஸ்லிம்களும் சட்டசபைத்தேர்தலில் பி ஜே பி க்கு வாக்களித்தும் அடிவிழுவதில் எந்தக்குறைவும் ஏற்படவில்லை; என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

நமது பிரச்சினை, துரதிஷ்டவசமாக சமூகத்திற்காக பேசப்படவேண்டிய பேரங்கள் தமக்காக பேசப்படுவதாகும். நீங்கள் தட்டிக் கேட்கமாட்டீர்கள்; என்ற தைரியம். மீறி எதையாவது பேசினால் மூளைக்கும் பேனைக்கும் தொடர்பில்லாமல் எழுதுகின்ற கூலிப்பட்டாளம் களத்திற்குவரும்.  இந்த வியாதி இன்று சகல கட்சிகளுக்கும் பரவிவிட்டது.

இன்றைய நவீன தொடர்பாடலில் முஸ்லிம்களின் மிகப்பெரும் சவால்; முகநூல்களில் மேயும் கூலிப்பட்டாளம். அதில் பாதி fake க்குகள். முஸ்லிம் அரசியல் இவர்களால் மிகவும் அருவருப்பான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. இது சுயமாக உருவானதல்ல. இந்தத் தலைவர்களால் அல்லது கட்சிக்காரர்களால் உருவாக்கப்பட்டது.

நேர்மையாக அரசியல் செய்யும் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் முகநூலில் எழுத கூலிப்பட்டாளம் தேவைப்படாது. நேர்மையற்றவனுக்கே அது தேவைப்படுகிறது.அவனிடம் உண்மை இல்லை. சமூகத்திற்கான உழைப்பு இல்லை. எனவே, அவன் எப்பொழுதும் ஓர் அச்சத்தில் இருக்கிறான் தன் உண்மை முகம் வெளிப்பட்டுவிடுமென்று.

எனவே, கூலிப்பட்டாளங்களை வைத்து சுயபுகழ்பாடுவதும் நியாயத்தை சுட்டிக்காட்டுபவர்களை வேட்டையாடுவதும் அதன்மூலம் அவன் உலமகா கள்வனாயினும் அவன் உத்தமன் என்று சமூகத்தில் பிரேமையை ஏற்படுத்துவதும் அதை உண்மையென நம்பி மக்கள் தொடர்ந்து வாக்களிப்பதும் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து விட்டில் பூச்சியாய் விளக்கில் விழுவதும் ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமா? என்பதைச் சிந்தியுங்கள்.

இன்றைய விந்தை என்னவென்றால் சிங்கள பௌத்தர்கள் ஒற்றுமைப்பட்டு சுயமாக ஒரு நாட்டின் ஜனாதிபதியையே ஒருவாக்க வேண்டும்; என்றவர்கள் சிறுபான்மைகள் ஒற்றுமைப்பட்டு தமக்கான பிரதிநிதித்துவங்களை சுயமாக பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அதைச் சரியென நியாயப்படுத்த சிறுபான்மைக்குள்ளேயே சிலர் இருப்பதும்தான்.

எனவே, முஸ்லிம்கட்சிகள் தேவை என்பதை யாரும் நிராகரிக்கமுடியாது. அவை சரியான பாதையில் பயணிக்க வேண்டும். அதனை வாக்களித்த மக்கள் உறுதிசெய்யவேண்டும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.