கிண்ணியா, உப்பாறு ஆற்றில்  ஐந்து பேர் பயணித்த  படகு கவிழ்ந்து இன்று (8) காலை விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், விபத்துக்குள்ளானவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட இருவர், கிண்ணியா தள வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
இவர் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக கிண்ணியாவுக்கு வந்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
விபத்தில் காணாமல் போன இருவரை, கடற்படையினரும் பிரதேச மீனவர்களும் இணைந்து தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,
சிறிய படகு ஒன்றில் உப்பாறு ஆற்றினூடாக  நேற்று (7) மாலை  கிண்ணியா கண்டல் காடு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல்களுக்கு யானைக்காவலுக்கு சென்று, இன்று (8) காலை 7.30 மணியளவில் அதே ஆற்றினூடாக திரும்பி வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது.
இன்று காலை காட்டு வெள்ளம் அதிகரித்திருப்பதால் நீரோட்டமும் அதிகரித்திருக்கிறது. இவர்கள் பயணித்த படகு நீரோட்டத்தில்  சிக்குண்ட  கவிழ்ந்து, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Tamilmirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.