முகமட் என்பவர் தலைமையில் இயங்கும் புற்றுநோயெதிர் இயக்கம் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தேவையான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வது என்ற பெயரில் மில்லியன் கணக்கில் பணம் சேர்க்கிறது என்றொரு குற்றச் சாட்டை அவ்வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் வீடியோ ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியிருந்ததை இரண்டொரு தினங்களுக்கு முன்னர் காண முடிந்தது.

இது சம்பந்தமாகத் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறித்த நபர்கள் தம்மை அச்சுறுத்தியதாகவும் அதில் அவர் தெரிவித்திருந்ததுடன் ஏப்ரல் 20, 22ம் திகதிகளில் அவருடைய வங்கிக் கணக்கிற்கு பெருந்தொகைப் பணம் வந்திருப்பதாகவும் அதன் விபரம் தன்னிடம் இருப்பதாகவும் அது எங்கிருந்து வருகிறது என்பது சந்தேகத்துக்குரியது என்றும் சொல்லியிருந்தார்.

ஏப்ரல் மாதம் - ஒரு முஸ்லிமின் வங்கிக் கணக்கு - பணமிட்டோர் - என்பதன் மூலம் இதை அவர் வேறு ஒரு திசைக்குத் திருப்ப முனைவது போல் தோன்றியது.

இவரது குற்றச் சாட்டுக்கள் பற்றி எஸ்.எல்.வ்ளொக் (SLvlog) - ஊடகவியலாளர், முகமட் என்பவரைப் பேட்டி கண்ட வீடியோ நேற்று வெளியிடப்பட்டிருந்தது.



அதில் புற்றுநோயெதிர் இயக்கம் (ஃபைட் கேன்ஸர்) நீண்டகாலமாக இயங்கி வருவதையும் அதில் இன, மன, சமூக நன்மை கருதும் பலர் இணைந்திருப்பதையும் அவர் சொல்லிச் சென்றார்.

புற்று நோய் வைத்திய சாலைப் பணிப்பாளர் சொல்வது போல் அது முகமட் என்பவரின் வங்கிக் கணக்கு அல்ல. அக்கணக்கு சுகாதார அமைச்சுக்குச் சொந்தமானது. அதில் பணம் இடுவதற்கு முடியுமே தவிர சுகாதார அமைச்சு அதிகாரிகளைத் தவிர வேறு யாராலும் மீளப் பெறமுடியாது.

ஏப்ரல் 22ம் திகதி மட்டும் (நாடு இருந்த சூழலிலும்) 8800 பேருக்கு மேல் 635 வங்கிக் கிளைகளிலிருந்து பொதுமக்கள் பணம் செலுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அப்படியானால் இந்த முயற்சிக்கு ஏன் இவ்வாற குற்றச் சாட்டை அவர் முன் வைக்கிறார் என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு அவர் தந்த பதில் முக்கியமானது.

சில பெறுமதி மிக்க இயந்திரங்கள் தனியார் வைத்திய சாலைகளில்தான் இருக்கின்றன. வைத்தியர்கள் அங்கே சென்று பரிசோதனை செய்யுமாறு நோயாளிகளைக் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு பரிசோதனைக்கு லட்சக் கணக்கான பணம் தேவை. இது எல்லோராலும் முடியாது என்பதாலேயே இந்த முயற்சியி்ல் நாம் இறங்கினோம்.
தனியார் வைத்தியசாலைகளுக்கும் இந்த வைத்தியர்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் இருக்கக் கூடும் என்று சொல்லியிருக்கிறார். (இந்த ஒளிப்பதிவு எனது பேஜ் இல் உள்ளது)
இனித்தான் உச்ச கட்டம்.
இன்று இன்னொரு வீடியோ கண்ணில் பட்டது.
இதே ஃபைட் கேன்ஸர் இயக்கம்,- முகம்மட் அவர்கள் மகரகம புற்று நோய் வைத்தியசாலைப் பணிப்பாளரைச் சந்திக்கிறார்.

ஃபைட் கேன்ஸர் இயக்கம் நாட்டுக்கு நன்மை செய்கிறது, நேர்மையாக இயங்குகிறது என்று அவர் வாக்கு மூலம் அளிப்பதைக் காண எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

இருக்கட்டும்-
ஒரு முக்கியமான வைத்தியசாலையின் பணிப்பார் தனது வைத்தியசாலையின் பெயரைப் பயன்படுத்திப் பணம் சேர்ப்பதையிட்டுத் தனது அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடாமல் குற்றச் சாட்டை முன்வைக்கும் அளவுக்கு “பேக்கு“ ஆக இருக்கலாமா?

அஷ்ரப் சிஹாப்தீன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.