இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக முறியடிக்கும் செயற்பாடுகளுக்கு புலனாய்வு தகவல்களை பகிர்வதனூடாக முழுமையான ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதியளித்துள்ளது.


போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் உதவும் வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான புலனாய்வுத்துறையை வலுப்படுத்த பாக்கிஸ்தான் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய புதிய உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கத்தாக் தெரிவித்தார்.
பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கத்தாக் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஜனவரி, 30) இடம்பெற்றது.
இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் 'இலங்கையும் பாகிஸ்தானும் இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமைந்திருப்பதால், போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு எதிரான புலனாய்வு தகவல் பகிர்வை வலுப்படுத்த இரு தரப்பினரிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியம்' என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொண்ட வேளையில் இலங்கை தலைமைகள் தனது நாட்டிற்கு உதவ எப்போதும் தயார் நிலையில் இருந்ததற்காக இலங்கைக்கு தனது நாடு நன்றிக்கடன் பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்பட்டபோதும் தனது கிரிக்கெட் அணியை அனுப்ப இலங்கை விருப்பம் தெரிவித்ததை பாராட்டிய அவர், 'இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பல தசாப்தங்களாக நீடித்துவருவதாகவும், இரு நாடுகளும் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொண்ட வேளையில் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்பட்டதாகவும் ,' தெரிவித்தார்.
இலங்கையுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ளல், இராணுவ திறன்களை வலுப்படுத்தலுக்கு அவசியமான தொழில்நுட்ப திறன்களை விரிவுபடுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்பட பாகிஸ்தான் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
உயர் ஸ்தானிகர் கத்தாக், பாகிஸ்தான் இராணுவத்தில் சேவையாற்றிய காலப்பகுதியில் முதற்தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அத்துடன் அவர், கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சுட்டிக்காட்டி, கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், இரு நாடுகளும் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் இணைந்து உறுதியான புலனாய்வு தகவல் பகிர்வை செயல்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
இராணுவ புலனாய்வுதுறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தீவிரவாதத்திற்கு எதிராக போராட இலங்கைக்கு உதவ முன்வரவேண்டும் எனவர் கேரிக்கை விடுத்தார்.
'முக்கிய புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்' என கூறிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான மூன்று தசாப்த கால யுத்தத்தை 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் நாட்டில் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளும் அறியப்படாத நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த தேசத்தில் இடம்பெற்றதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
'நாம் ஒரு விரிவான புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் 12,400 க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களை புனர்வாழ்வுவளித்து மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைத்தோம். இன்று, அவர்கள் அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார்கள், இலங்கையின் புனர்வாழ்வு செயல்முறை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாராட்டைப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து 190 கிலோ ஹெராயின் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்ததாக இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர், தீவிரவாதம் ஒரு வளர்ந்து வரும் அச்சுறுத்தல் ஆகும் என மேற்கோள் காட்டியதுடன், இராணுவ பயிற்சி வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிபுணத்துவ அறிவை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினார்.
மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கத்தாக் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோருக்கிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

சுதந்திரதின கொண்டாட்டத்திற்கான பயிற்சி நடவடிக்கைகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச, தனியார், சர்வதேச பாடசாலைகள் 15 இற்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு அமைவாக டி.எஸ்.சேனநாயக்க, ரோயல், தேர்ஸ்டன், யசோதரா, மியூசியஸ், புனித பிரிஜெட் கன்னியர் மடம், மகளிர் வித்தியாலயம், கொழும்பு சர்வதேச பாடசாலை, விச்சேலி சர்வதேச பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
கொழும்பு 12 – மிஹிது வித்தியாலயம், அல்- ஹிதாயாக வித்தியாலயம், அசோக வித்தியாலயம் என்பன திங்கட்கிழமை காலை 9.00 மணியில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை மூடப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பயிற்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி வழங்குவதற்காக கொழும்பு மஹாநாம, பொல்வத்த புனித மைக்கல், புனித மேரி கனிஷ்ட வித்தியாலயம் என்பன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 5.00 மணி வரை மூடப்படும் என்ற கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கொரோனா வைரஸ் தொற்றையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதானி டொக்டர் ரஷியா பென்சே தெரிவித்துள்ளார்.


´எட் ஹைட் பார்க்´ அத தெரண நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இதற்காக சர்வதேச சுகாதார அமைப்பு இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகிறது.

இலங்கை சுகாதார அமைச்சும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதேபோல், தொற்று நோய்கள் பரவுவதை கண்காணிக்கவும், அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் உலக சுகாதார நிறுவனம் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

(adaderana)


அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் படி, நிட்டம்புவ நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இராணுவ வீரர்களுக்கான நினைவுச் சின்னம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நேற்றைய தினம் (30) நடப்பட்டது.

இந்நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த புஷ்ப குமர உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், பௌத்த, கிறிஸ்தவ இஸ்லாமிய மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இதற்கான நிதி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தே சேகரிக்கப்பட்டுள்ளன.

தகவல் - அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP 





வரி குறைப்பின் சலுகை அடுத்த மாதம் முதல் தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பில் தொலைபேசி கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் மேலும் கூறுகையில்,
வரிக்குறைப்பின் பயன் மக்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. தொலைபேசி பாவனையாளர்களுக்கும் குறைக்கப்பட்ட வரிகளின் பயன் சென்றடையவில்லை. அடுத்த மாதம் முதல் பாவனையாளர்களுக்கு இதன் பயன் கிடைக்கும்.

கடந்த வாரமே நிறுவன தலைவர்களை நியமிக்கும் பணி நிறைவடைந்தது.எனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களினூடாக வழங்கப்படும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏனைய அமைச்சர்களும் தமக்குக் கீழுள்ள நிறுவனங்களினூடாக வழங்கப்பட வேண்டிய சலுகைகளை வழங்க ஆவன செய்வர் என்றார்.
ஷம்ஸ் பாஹிம்

    ‘ஹாஷிம்’ இவரின் பெயரை உச்சரித்தாலே விகடமாய் இருக்கும்.அதற்காக விகடகவி என்று எண்ணிவிட வேண்டாம். அன்பானவர்,ஆதரவானவர், தெரிந்தோர் தெரியாதோர், அறிந்தோர், அறியாதோர் என எல்லோரையும் குஷிப்படுத்தக்கூடியவர். திருமணமாகியும் அவர் குணத்தால் குன்று. மனைவியோ அழகான அடக்கமான பெண். ஏழை தான், அவளும் ஜாடிக்கு ஏற்ற மூடி. இருவருக்கும் குட்டி தேவதையை அல்லாஹ் பரிசாக கொடுத்தான்.  ஒரு வருடம் உருண்டோடியது. ஹாஷிம், தான் வெளிநாடு சென்று வந்தாலும், உடனடியாக வீட்டைக் கட்ட முடியாமையால் தனக்காக தன் தகப்பன் கொடுத்த காணிப்பங்கில் தற்காலிகமாக மண் கொண்டு வரிச்சில் வீடு கட்ட முடிவு செய்தார். ஏனைய சகோதரர் களுக்கும் பக்கத்தில் பங்குகள் கொடுக்கப்பட்டன. தன் மனைவி சுரையாவும் பெரிய பணக்கார வீட்டுப்பெண் அல்லவே.அவளின் உதவியும் இல்லாமலில்லை. மாஷா அல்லாஹ் என்று அவர்களுக்கான குடிசை தயார். அன்பும் பாசமும் துரு துருவென வளரும் ஷாஹினும் அவர்களுக்கான மகிழ்ச்சியை கொடுத்தன.அழகான வாழ்க்கை அமைதியாக நகர… திடீரென ஹாஷிம் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். அதுவும் மஞ்சல் காய்ச்சல். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது கால போராட்டத்திற்கு பின், இன்னாலில்லாஹ்… முப்பதுகளையும் தாண்டாத  ஹாஷிம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மையினால் இறைவனடி சேர்ந்தார். அந்தப்பிஞ்சுக்கு எதுவும் தெரியாத வயது. இரண்டு வயதில் என்னதாம் புரியும்.? சுரையா வீட்டவர்கள் வந்து எவ்வளவு ஆறுதல் சொல்லியும் இழந்த கணவனை பெற முடியுமா.?  கணவனின் வீட்டில் இத்தா இருக்கலாமா..? தன் வீட்டில் இத்தா இருக்கலாமா? என்ற யோசனையிலும் , விரக்தியிலும் உட்கார்ந்து இருந்தாள். சுரையாவின் கவலைகளும் , காயங்களும் ஷாஹினை பாதிக்கக்கூடாது என சுரையாவின் வீட்டார், சுரையாவையும்  இரண்டே வயதான ஷாஹினையும் கூட்டிப்போய் விட்டார்கள்.  குடிசை விளக்கில்லாது இருண்டது. ஹாஷிம் மரணித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவசர அவசரமாக ஹாஷிமின் அரண்மனை தரை மட்டம் ஆனது. அதுவும் காணி யாரால் கொடுக்கப்பட்டதோ, அதே நபர் தான் இடிப்புக்கும் காரணம். தன் மகன் தான் மெளத்தாகி விட்டானே.. இனி காணி கேட்டு யார் வரப்போகிறார்கள்..? என்று நினைத்திருப்பார் சலீஹ் நானா.மேலும் தன் இரண்டாவது மகளான நஸ்ஹானாவுக்கு திருமணம் செய்து வைக்கும் போது காணி தருவதாக கூறிய வாக்குறுதிக்காக ஹாஷிமின் காணியில் அவசர அவசரமாய் அத்திவாரமும் இடப்பட்டது. இவற்றை எல்லாம் கேள்விப்பட்ட சுரையாவின் உள்ளமோ உடைந்தே விட்டது. தந்தையின் பங்கு பிள்ளைக்கு அல்லவா? ஷாஹினை அரவணைத்த படி, தன் வாழ்வில் வரையப்பட்ட கோடுகளை மெதுவாக அசை போட்டாள்.    
பயாஸா – கஹட்டோவிட               

   

கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு ஒன்றை காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
முன்னைய அரசாங்கத்தைப் போன்று தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஊர்வலங்களில் ஈடுபடும் இளைஞர் யுதவிகளை தாக்கி சிரமத்துக்கு உள்ளாக்குவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக இந்த செய்தியாளார் மாநாடு நடத்தப்பட்டது.
இந்த செய்தியாளர் மாநாட்டில் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல அக்குமுர, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உயர் கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் சுமூகமாக பேச்சுவார்தை நடத்தி அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேபோன்று யாழ் பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்விருப்பதாவும் அமைச்சர் கூறினார்.
இதில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே, கலாச்சார மத அலுவல்கள் அமைச்சில் கடந்த அரசாங்த்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான நியமனங்கள் குறித்தும் விபரித்தார். கலாச்சார நிதியத்துக்கு ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிக அடிப்படையிலும் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பலரது சேவைக்காலம் முடிவடைந்துள்ளது. 3000 ற்கு மேற்பட்டோர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பார்க்க சாதாரணதர பதவிப் பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனிதநேய கொள்கைக்கு அமைவாக இவர்களது பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார். கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில் கலாச்சார நிதியம் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் கடந்த அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட முறை குறித்து விபரித்தார்.
1600 மில்லியன் ரூபாவை இந்த நிதியம் தனியார் துறைக்கு செலுத்த வேண்டியுள்ளதுடன், டிசம்பர் மாத்தில் ஊழியர்களில் சம்பளத்துக்காக 270 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிதியம் முறைகேடான செயற்பாட்டின் காரணமாக பெருந்தொகை நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்பொழுது எதிர்நோக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 2 வாரத்துக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)



சீனாவின் நகரிலிருக்கும் இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட குழுவை அழைத்து வருவதற்காக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விசேட விமானம் இன்று (31) பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

மதுபோதையில் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கறைப்பற்று வரை பயணிக்கும்  இ.போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதியின் சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறு, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவால் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சாரதி நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பொலிஸ், பொலிஸ் விசேடப் படையணிக்கு கிடைத்த தகவலுக்கமைய,  இராணுவத்தினரின் உதவியுடன் யாழ் நாவக்குழி பிரதேசத்தில் வைத்து பஸ் சோதனையிடப்பட்டதுடன், இதன்போது சாரதி மது​போதையில் இருந்துள்ளதுடன் அவரது போக்குவரத்து பையில் சாராயம், பியர் என்பன இருந்துள்ளன.


தமிழ் மிரர் 

எயார் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று இன்று (31) சீனாவின் வூஹான் பிராந்தியத்துக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வூஹான் பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானம் சீனாவை நோக்கி இன்று பகல் பயணித்துள்ளதுடன், இந்த விமானத்தில் 400 பயணிகளை அழைத்துவரும் வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த விமானத்தில் 5 வைத்தியர்களும் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மிரர் 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நாளை நிறுத்தப்படவுள்ளது.
வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மிரர் 


பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரின் இந்த விஜயத்தின் ​போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி​யையும் சந்திக்கவுள்ளார்.

தமிழ் மிரர் 


சீனாவில், 6000-க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 130-க்கும் அதிகமான மக்களைப் பலி கொண்டுள்ள இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, 'ஊகான்' (wuhan) நகரத்தில் புதிய தற்காலிக மருத்துவமனை ஒன்றை சீன அரசு கட்டத் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மருத்துவமனைப் பணிகள், பிப்ரவரி 2-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பிப்ரவரி 3-ம் தேதியிலிருந்து சிகிச்சைகள் தொடங்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது ஊகான் நகரத்திலிருந்துதான். 11 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில், வைரஸ் பாதிப்பிற்குப் பின்னர் அந்த நகரத்திலிருந்த மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியதால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் போதிய சிகிச்சை அளிப்பதற்காகத் தற்காலிக மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 1000 படுக்கைகள் கொண்டதாக 25,000 சதுர மீட்டர்கள் பரப்பளவில் இம்மருத்துவமனை அமைய உள்ளது.
corona virus
corona virus

சரியாக ஆறு நாள்களுக்குள் இம்மருத்துவமனையைக் கட்டிமுடிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, 2003-ல் Sars வைரஸ் தாக்குதலின்போதும், அந்த வைரஸ் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏழு நாள்களில் ஒரு தற்காலிக மருத்துவமனையைக் கட்டியது சீன அரசு. இதுபோன்ற கட்டடப் பணிகளை விரைவாக முடிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்கள். அவர்களால் எப்படி இது சாத்தியமாகிறது... எந்த முறையில் இந்தக் கட்டடத்தை விரைவாகக் கட்டு,கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
Corona Hospital, Wuhan
Corona Hospital, Wuhan

இந்த வகையில் கட்டடங்களை உருவாக்கும்போது, நெரிசலான இடங்களில் வழக்கமான முறையைப் பின்பற்றி அவதிப்படத் தேவையில்லை. விரைவான கட்டுமானம்தான் இந்த முறையின் மிகப் பெரிய பலமே. ஊகான் நகரத்தில் இந்த மருத்துவமனையைக் கட்டுவதற்காக, ஆயிரக்கணக்கான பணியாளர்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக 500 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். கட்டுமானம் முடிந்தவுடன், 1300 மருத்துவப் பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
Corona Hospital
Corona Hospital

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, 40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட 14 நகரங்களில், தரைவழிப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த வைரஸ் தாக்குதலால், அது கண்டுபிடிக்கப்பட்ட ஊகான் மாவட்டத்தில் மட்டும் 3,50,000-க்கு மேல் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிவருகிறது. அதைத் தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

நன்றி - விகடன்

சீனாவின் வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விசேட விமானத்தை அனுப்புவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை சீன அரசாங்கம் ஆராய்ந்துவருகிறது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்ஹ இதுதொடர்பாக தெரிவிக்கையில் Hubei வெளிநாட்டு அலுவலகமும் வுஹான் நகர சபையும் பேஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகமும் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார்.
சீனாவில் 284 இலங்கையர்கள் மாத்திரமே தற்பேது உள்ளனர். சீனாவிலிருந்து 580 பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்ரில்லா ​ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹில்ஹாம் அஹமட் என்ற குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த குண்டுதாரியின் தந்தையான மொஹமட் ஹயாது மொஹமட் ஈப்ராஹிம் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (31) கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் இதன்போது நீதிமன்றில் கோரியுள்ளனர்.

குறித்த கோரிக்கையை ஏற்ற மேலதிக நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அததெரண 

உணவு ஒவ்வாமையினால் சுகவீனமுற்ற 41 மாணவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கினிகத்தேன, கலுகல சிங்கள மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர், மாணவியே இவ்வாறு திடீர் சுகவீனமுற்றுள்ளனர்

கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற பாடசாலை விளையாட்டு போட்டியின் போது (மாலுபாண்) உட்கொண்டதுடன் மைதானத்திலுள்ள கிணற்று நீரையும் பருகியுள்ளனர்.

இதன் பின்னர் மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம், மற்றும் வயிறு எரிச்சல் போன்றனர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (31) தரம் 05 தொடக்கம் 11 வரையில் கல்விப் பயிலும் 11 மாணவிகளும் 30 மாணவர்களுமாக 41 பேர் திடீரென சுகவினமுற்ற நிலையில் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு பாரிய பாதிப்புகள் இல்லை எனவும் உணவு ஒவ்வாமையே நோய் ஏற்பட்டமைக்கான காரணமென்றும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.



-இராமச்சந்திரன்-

பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு எந்தவொரு வார்த்தையையும் பேசாத மற்றும் ஒரேயொரு முறை மாத்திரம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு புள்ளி விபரங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் Manthiri.lk இணையத்தளம் மேற்படி பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேலுள்ள படத்தை Click செய்து பார்க்கவும்.

புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவை தவிர வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

குறைந்தளவு ஊட்டச்சத்தை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை 18 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் அதனால் 98 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் வேறு நாடுகளில் கொரோனா வைரஸால் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, பாக்., தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியதையடுத்து சர்வதேச சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.

இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் 5 முறை, உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

2009 - எச்1என்1(H1N1)

2014 - போலியோ

2014 - எபோலா (வட ஆப்ரிக்கா)

2016 - ஜிக்கா

2019 - எபோலா (காங்கோ)

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 213-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 9700 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ´´ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்´´ என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக போராடிவரும் சீனா குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரயான், ´´கொரோனா வைரஸ் அளிக்கும் சவால் கடுமையாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் பணியை சீனா சிறப்பாகவே செய்து வருகிறது´´ என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும்.

ஆனால் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் சீனா எங்கும் பரவியது. மேலும் தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது .

இதனை குணப்படுத்த பிரத்யேக மருந்து அல்லது மருத்துவமுறை எதுவும் இல்லை. ஆனால் சிகிச்சைக்கு பிறகு ஏராளமான மக்கள் குணமாகியுள்ளனர்.

இந்நிலையில், சீன நாட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல விமான சேவை நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் விமான நிறுவனங்கள் சீனாவிற்கான விமான சேவைகளை குறைத்துள்ளன. அதே நேரத்தில் லயன் ஏர் நிறுவனம், சீனாவிற்கு விமான சேவையை மொத்தமாக நிறுத்தியுள்ளது.

சீனாவுக்கு சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று பயணிக்கவுள்ளதாக தெரிவித்த மைக் ரயான், அங்குள்ள மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை சர்வதேச குழு அறிந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

´மிகவும் இக்கட்டான மற்றும் முக்கியமான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்´´ என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த வாரத்தில் சீனாவுக்கு சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ், ´´தற்போதைய சூழலில் சீனாவுக்கு உலகின் ஆதரவு மிகவும் தேவை´´ என்று குறிப்பிட்டார்.

AdaDerana.lk 


பிறந்ததென்னமோ கேகாலையில் தான் ஓரிரு வருடங்கள் இரம்புக்கணையில் வாப்பா வீட்டாருடன்…

எதுவும் புரியாத மழலை வயது அன்பை கொட்டி வளர்த்தாராம் ஆசை ஆசையை பேசுவாராம் கைவீசி கடை கூட்டிப்போவாராம் அழகழகாய் போட்டோ எடுப்பாராம்

இவைகள் கூட உம்மா சொல்லித் தான் தெரியும் ஏனெனில் நான் அறிந்த வயதில் என் வாப்பா இறைவனிடம்… அறியும் வயதில் அடைக்கலம் எனக்கு உம்மா வீட்டார்

என் குறும்புகள் சாச்சி மாருடன் களவு அடிக்காமல் சென்ற மொண்டசூரி என் நினைவில் என்றும்

சிறியதாய் ஒற்றை யடிப்பாலம் சேட்டைகளுடன் சாச்சியோடு சென்றடையும் பொழுதுகள் தெல்கஹகொட ஜும்ஆ பள்ளியின் ஒரு பக்கம் தான் எமது மொண்டசூரி படியேறித்தான் செல்ல வேண்டும்
கபுருத் தோடமும் அந்த ஸியாரமும் கொஞ்சம் புதினமானவை தான், நான் இருந்த வயதில்….அழகான வயல்வெளி ஆங்காங்கே சிற்சில பாதைகள் மறக்க முடியாத அனுபவம் தான் இன்றும்..ஆனால்., சில வருடம் தான், அங்கும் என் வாழ்க்கை நிலைக்கவில்லை.


( ஐ. ஏ. காதிர் கான் )

   கொழும்பு - 09, தெமட்டகொடை, கைரிய்யா மகளிர் கல்லூரியின் வருடாந்த (மெய் வல்லுநர்) இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், கல்லூரி அதிபர் திருமதி ஏ.எல்.எஸ். நஸீரா ஹஸனார் தலைமையில், கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில், (26) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

   இதில், ஹம்ரா இல்ல (சிவப்பு) அணியினர் 325 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவாகி, 2020 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் வெற்றிக்  கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. 

   இரண்டாம் இடத்திற்கு ரவ்தா இல்ல (ஆரஞ்சு) அணியினர் 310 புள்ளிகளையும், மூன்றாம் இடத்திற்கு வர்தா இல்ல (ஊதா) அணியினர் 290 புள்ளிகளையும், நான்காம் இடத்திற்கு ஸர்கா இல்ல  (நீலம்) அணியினர் 280 புள்ளிகளையும் பெற்று, முறையே வெற்றிக் கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர்.

   இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்களான மொஹமட் பாயிஸ், மொஹமட் பைரூஸ் உள்ளிட்ட அதிதிகள் பலர்  கலந்து சிறப்பித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )



இன்று (30) அதிகாலை சீனாவில் இருந்து வந்த 3 ஸ்ரீ லங்கன் விமானங்கள் மூலம் 10 இலங்கை மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 
ஷங்ஹாயில் இருந்து வந்த யூ.எல் 867 விமானத்தில் இன்று காலை 5.10 மணிக்கும், காலை 5.50 மணிக்கு பீஜிங்கில் இருந்து வந்த யூ.எல் 869 விமானத்திலும், இக்வென்சோவில் இருந்து அதிகாலை 6.10 மணிக்கு வந்த யூ.எல் 885 விமானத்தில் இருந்தும்; இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதே போன்று நேற்று இரவு 6.10 மணிக்கும், 6.18 மணிக்கும் வந்த 2 விமானங்களிலும் மாணவர்கள் இலங்கை வந்துள்ளனர். நேற்று இரவு 9.10 மணிக்கு வந்த வமானத்தில் 30 மணயவர்கள் இலங்கை வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(adaderana)

கூகுல் நிறுவனம் சீனாவில் உள்ள தனது செயற்பாட்டு அலுலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசிற்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தில் உள்ள அலுவலகமும் மூடப்படவிருப்பதாக அந்த தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இந்த அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தமது வீடுகளில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு கூகுல் நிறுவனம் அறிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து தன்னை நீக்கியமை குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தன்னை செயற்குழுவில் இருந்து நீக்குவதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லையென்றும், ஒழுக்காற்று நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன்,  ஐக்கிய தேசிய கட்சியின் புதிய செயற்குழுவில் இருந்து கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilmirror 

நேற்று (30) நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இவர்களுக்கு கலந்து கொள்ள முடியாது என அக்கட்சித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(AdaDerana)
Blogger இயக்குவது.