இப்கார் ஃபயூமி
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் அதிகாரத்தை பல தசாப்தங்களுக்குத் தக்கவைப்பதற்கும் சிறுபான்மை மக்களை அரசியல் பங்கேற்பிலிருந்து சேய்மைப்படுத்துவதற்கும் முடியுமான அனைத்து மூலோபாயங்களிலும் கவனம் குவித்து வருகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் தெவிட்டாத ருசியை சுவைப்பதற்கு வரலாற்றில் என்றென்றைக்கும் இல்லாத அரசியல் சூழ்ச்சித் திட்டங்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் விஜேதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பு திருத்தம் குறித்த தனிநபர் பிரேரணை இந்நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்த மிகப் பெரும் சந்தேகங்களையும் அச்சங்களையும் உருவாக்கி வருகின்றது. ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியது போன்று, இது விஜேதாஸவின் பிரேரணையா மஹிந்த அரசின் பிரேரணையா என்பதை அரசாங்கமே கூற வேண்டும்.
பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களை மட்டும் உள்ளடக்கிய பாராளுமன்றத்தையும், அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தீர்மானிக்கும் ஒரே வாக்கு வங்கியாக சிங்கள மக்களை மாத்திரம் ஆக்கும் இந்த சதித் திட்டத்தை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்தை பிமல் காட்டமாக வலியுறுத்தியிருப்பது கவனிப்புக்குரியது.
1977 இல் அதிகாரத்திற்கு வந்த ஐ.தே.க. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது. தேர்தல் முறை மாற்றப்பட்டது. அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. விகிதாசாரத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தனது 70 ஆவது வயதில் ஜே.ஆர். ஜெயவர்தன கையில் எடுத்தார்.
நாட்டின் அனைத்து மக்களாலும் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் வாக்களித்த அனைத்து மக்களையும் முட்டாளாக்கும் நிறைவேற்று அதிகார முறைமையை ஜனாதிபதி கையில் எடுத்தார்.
ஜே.ஆர். 1977 இல் உருவாக்கிய அரசியல் அமைப்பு, விக்டர் ஐவன் குறிப்பிடுவது போன்று இலங்கை அரசியல் வரலாற்றில் அரசிலமைப்பு நெருக்கடியின் உச்சகட்டமாகும். ஏற்கனவே நிலவி வந்த அரசியல் சீர்கேடுகளை ஜே.ஆர். உச்சத்திற்குக் கொண்டு வந்தார். ஊழல், இலஞ்சம், வீண்விரயம், நிதி மோசடி, அரச அதிகாரிகளின் துஷ்பிரயோகம் இவை அனைத்திற்கும் ஜே.ஆர்.இன் அரசியலமைப்பெ பிரதான காரணமாகும். குறிப்பாக நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் அவர்களின் தலைவிதியையும் கையாளும் அதிகாரத்தை ஓர் ஒற்றைப் பூதத்திடம் ஒப்படைக்கும் ஜனாதிபதி முறைமை ஜே.ஆர்.இனால் அறிமுகப்படுத்தப்பட்ட சாபக்கேடாகும்.
கடந்த 37 ஆண்டு காலமாக இம்முறையைக் கையாண்ட ஜனாதிபதிகள் தமது எண்ணங்களுக்கு ஏற்ப நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைத்து, பெரும் அரசியல் சீர்கேடுகளுக்குக் காரணமானார்கள். “நான் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற மாட்டேன். அது என்னால் முடியாது. அதைத் தவிரவுள்ள அனைத்தையும் எனக்கு மாற்ற முடியும்” என ஜே.ஆர். ஜெயவர்தனவைச் சொல்ல வைத்தது இது.
“நான் சொல்வதே சட்டம். ஏனென்றால் நான் ஜனாதிபதி” என்றார் சந்திரிக்கா. “நாம் எண்ணினால் அரசியலமைப்பையே மாற்றியமைப்போம்” என்றார் மஹிந்த. இதுதான் நிறைவேற்று அதிகாரத்தின் சாபக்கேடு.
ஒருவர் ஆறு வருட பதவியைக் கொண்ட ஜனாதிபதியாக இருக்கலாம். அவர் எத்தனை முறைமையும் தேர்தலில் போட்டியிடலாம். மிக முக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசம் வைத்துக் கொள்ளலாம். ஜே.ஆர். நிதி, பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரம் ஆகிய அமைச்சுக்களை தம் வசம் வைத்திருந்தார். மஹிந்தவும் அவ்வாறே செய்தார். அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. அதற்கு பிரதமரின் ஆலோசனையையோ சிபாரிசையோ பெற வேண்டியதில்ல. எவரது ஆலோசனையையும் பெறாமல் தலைமை நீதிபதி, தலைமைப் பொலிஸ் அதிகாரி, முப்படைகளின் தளபதி ஆகியோரை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கான செலவினங்களைத் தீர்மானிப்பது, ஒதுக்குவது அனைத்துமே அவரது அதிகாரத்திலேயே இருந்தது. பிரதமர் உட்பட நாட்டின் எந்த உயர் அதிகாரியையும் தான் நினைத்த மாத்திரத்திலேயே பதவி நீக்கம் செய்யும் அதிகாரமும் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருந்தது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக விரும்பும் நேரத்தில் பாராளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.
இவற்றையெல்லாம் முழு நிறைவாக துஷ்பிரயோகம் செய்த ஒரே ஜனாதிபதி சர்வதிகார வெறி பிடித்த ஜே.ஆர் மட்டுமல்ல. தொடர்ந்து வந்தவர்கள் அதே பாதையில்தான் பயணித்தார்கள். நீண்டகாலமாக இம்முறை மாற்றப்பட வேண்டும் என்ற விவாதம் அரசியல் அரங்கில் சூடேற நிகழ்ந்து வந்துள்ளது. புத்திஜீவிகள் மதத் தலைவர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் குறிப்பாக நேர்மையையும் நீதியையும் நேசிக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இம்முறையில் மாற்றம் வேண்டும் என்று போராடி வந்துள்ளனர். குறிப்பிட்டளவு அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வெண்டும் என்பதே அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு.
2015 ஜனவரித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்ரியை களமிறக்கி, முன்னின்று உழைத்தவர்கள் அனைவரும் அதிகாரத்திற்கு வந்து 100 நாட்களில் தாம் செய்து முடிக்கப் போகும் காரியங்களில் ஒன்றாக நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதை முன்னிறுத்தினர். ஆனால் நான்கரை ஆண்டுகாலம் முடிந்தும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் நிகழவில்லை. ஆனால், குறிப்பிட்ட அளவு 19 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன.
இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதிப் போட்டியில் ஒருவர் களமிறங்க முடியாது, ஜனாதிபதி எந்தவொரு அமைச்சர் பதவியையும் வகிக்க முடியாது, பிரதமரின் சிபாரிசின் பேரிலேயே அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர், பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது. பொலிஸ், நீதி, நிருவாகம் சார்ந்த சுதந்திர ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படும். அதன் மூலம் அவை ஜனாதிபதியின் தலையீடு இன்றி, சுதந்திரமாகச் செயல்படும்.
இத்தகைய மாற்றங்கள் சில 2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டது. அதுவே 19ஆவது திருத்தம் என அழைக்கப்படுகின்றது. தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பாக விஜேதாச முன்வைத்துள்ள திருத்தங்கள் 19ஐ மீண்டும் திருத்துவதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மீளவும் அதிகரித்து ஜே.ஆர். யுகத்திற்கு நாட்டை இட்டுச் செல்வதற்கு முயற்சிப்பதாகும். அவர் 21, 22 ஆகிய இரு சட்ட மூலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவை அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளமை திரைமறைவுக்குப் பின்னால் நிகழும் ஒரு அரசியல் சூழ்ச்சித் திட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, விஜேதாஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள இத்திருத்தங்கள் சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரவேசத்தைத் தடுக்கும் கபட நோக்கம் கொண்டவை என கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் வகையிலேயே விஜேதாச 21 ஆவது திருத்தத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
1978 இல் ஜே.ஆர். கொண்டு வந்த விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின்படி ஒரு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தேர்தெடுப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்று பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய வாக்கு சதவீதம் 12.5 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் மூலம் சிறிய கட்சிகள் -குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள் பாராளுமன்றம் நுழைவது மிகப் பெரும் சவாலாக விளங்கியது.
இதனை உணர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், இம்முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு கடும் பாடுபட்டார். 1988 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆர். பிரேமதாஸ வேட்பாளராகக் களமிறங்கினார். அப்போது அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது திருத்தத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்று பெற்றுக்கொள்ள வேண்டியெ 12.5 வீத வெட்டுப் புள்ளியை 5 வீதமாகக் குறைப்பதற்கு உடன்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கும் என்று சாமர்த்தியமான முறையில் சமரசம் செய்தார் அஷ்ரப்.
விளைவாக அது 12.5 வீதத்திலிருந்து 5 வீதமாகக் குறைக்கப்பட்டது. சிறு கட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் பாராளுமன்றம் நுழையும் வாய்ப்பு வாய்த்தது. அஷ்ரபின் இந்த அரசியல் சாதனையால் சின்னஞ் சிறு தமிழ் கட்சிகள் கூட குறைந்த வாக்குகளோடு பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. இன்று மீன்பிடி அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இம்முறை மாற்றப்பட்டதன் மூலமே பாராளுமன்றத்தைக் காணும் வாய்ப்பைப் பெற்றனர்.
விஜேதாச, மஹிந்த அரசாங்கம் சார்பில் முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தம் 15 ஐ மாற்றி பழைய யுகத்திற்கு நாட்டை இட்டுச் செல்லும் நோக்கிலானது. 12.5 என வெட்டுப் புள்ளி அதிகரிக்கப்பட்டால் அதாவது 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் சிறிய கட்சிகள் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது பெரும்பாலும் இல்லாமல் போய்விடும். இது சிறுபான்மைச் சமூகங்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து முற்றாகவே ஒதுக்கும் உள்நோக்கம் கொண்டது.
21 நடைமுறைக்கு வந்தால் தற்போது மஹிந்த அணிக்கு ஆதரவளிக்கும் சில சில்லறைக் கட்சிகள் கூட பாராளுமன்றப் பதவி நிலைகளை இழக்க நேரிடும். மாற்றீடாக மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியிலேயே போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். எப்படியோ சிறுபான்மைச் சமூகங்களை அரசியல் பலமற்றவர்களாகவும் பேரம் பேசும் ஆற்றல் அற்றவர்களாகவும் ஆக்குவதே இதன் இறுதி நோக்கம். ஆனால், இதை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டை சிறுபான்மையினரின் பங்கேற்பு இன்றி பெற்றுக் கொள்வதுதான் அரசாங்கத்திற்குள்ள அடுத்த சவால்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தமும் மிகுந்த சர்ச்சைக்குரியது. அதன் பிரகாரம் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது அரசியலமைப்புப் பேரவையின் அனுமதிக்குப் பதிலாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதியினால் நீதிபதிகளை நியமிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
ஏற்கனவே 2015 இல் கொண்டு வரப்பட்ட மாற்றத்தின்படி அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியின்றி உயர் நீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது. விஜேதாசவின் திருத்தப் பிரேரணை வெறும் நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெறுவது போதுமானது என வாதிடுவதன் மூலம் நீதித் துறையின் சுயாதீனம் இழக்கப்படுவதோடு, தனது கட்டளைக்குப் பணியாத ஒரு நீதிபதியை பதவியிலிருந்து தூக்கி வீசும் அதிகாரத்தையும் ஜனாதிபதி தன் வசம் எடுத்துக் கொள்கின்றார்.
அதேபோன்று சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், பாராளுமன்ற செயலாளர், குறைகேள் அதிகாரி (Ombudsman) போன்ற பதவிகளுக்காக நபர்களை நியமிக்கும்போது அரசியலமைப்புப் பேரவையின் அனுமதி பெறப்பட வேண்டும் என 2015 இல் 19 ஆவது திருத்தம் கூறுகிறது. அதை மாற்றுவதற்குப் பரிந்துரைக்கப்படுகின்ற 22 ஆம் திருத்தம், பிரதமரின் கருத்தைக் கேட்டு ஜனாதிபதியால் நியமிக்க முடியும் என வாதிடுகின்றது.
எந்த அமைச்சும் ஜனாதிபதி வசம் இருக்க முடியாது என 19ஆவது திருத்தம் வலியுறுத்துகின்றபோது விரும்பும் அமைச்சுப் பதவியை ஜனாதிபதி தன் வசம் வைத்துக் கொள்ளலாம் என்று 22 பரிந்துரைக்கின்றது.
இவ்வாறு ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக் திகழும் ஒருவருக்கு மென்மேலும் அதிகாரத்தைக் குவிக்கும் 21, 22 திருத்தங்கள் ஜனநாயகத்தைப் புதைகுழிக்கு அனுப்பும் சதியாகும். ஜே.வி.பி. கட்சி விஜேதாச ராஜபக்ஷவின் தனிநபர் பிரேரணை அரசாங்கத்தின் முன்னோட்டம் என்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலை அடுத்து இந்த சூழ்ச்சியில் அரசாங்கம் ஈடுபடும் எனவும் அதை தாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
தேர்தல் மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்குப் புறம்பாகவே அரசாங்கத்தின் அனைத்து நகர்வுகளும் உள்ளது என்று அவர் சாடியுள்ளார்.
“நாட்டு வளங்களை விற்க மாட்டோம் என ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்தவர்கள் 2 மாதங்கள் முடிவதற்குள் கொழும்பு சாரணர் மாவத்தை, பேரே வாவி, மற்றும் சங்கரில்லா ஹோட்டலுக்கு இடைப்பட்ட மூன்று ஏக்கர் காணியை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்குக் கொடுத்துவிட்டது” என விமர்சித்துள்ளார் பிமல் ரத்நாயக்க.
எவ்வாறாயினும், மங்கள சமரவீர, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுவது போன்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒரு தகாவழிச் சூழ்ச்சி நடக்கின்றது. பாராளுமன்றத்திற்கு வரும் புதிய கட்சிகள் புதிய, புரட்சிகர கொள்கையுடனும் எதிர்கால நோக்குடனுமே வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு விஜேதாச கொண்டுவந்துள்ள திருத்தம் பழங்குடிச் சிந்தனையையே பிரபலிப்பதாக விஜித ஹேரத் கூறியுள்ளமையும் கவனிப்புக்குரியது.
யார் என்ன சொன்னாலும் சர்வதிகாரத்தின் தெவிட்டாத சுவை ருசிப்பதற்கு இதமானது என்பதற்காய் நாம் மீண்டும் ஜே.ஆர்.இன் இருண்ட யுகத்தை நோக்கி நகராமல் இருக்கக் கடவது.

(Meelparvai)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.