எதிர்மறை அனுபவங்கள் மற்றும் முக்கியமற்றவை அல்லது தேவையற்றவை என்றாலும் கூட நாம் எதிர்மறையில்தான் அதிக கவனம் செலுத்த முனைகிறோம். பெரும்பாலும் இங்கு ஒரு நல்ல செய்தியை விட கெட்ட செய்திதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதற்குக் காரணம், நேர்மறையான நிகழ்வுகளை விட எதிர்மறை நிகழ்வுகள் நம் மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இது உங்கள் நடத்தை, உங்கள் முடிவுகள் மற்றும் உங்கள் உறவுகளில் கூட ஒரு ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.
நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நேர்மறை எண்ணங்களைக் காட்டிலும் தோற்றுவிடுவோம் என்று பயந்துகொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள்தான் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதுபோன்ற எண்ணங்கள் உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உளவியல் நிகழ்வு உங்களின் முன்னேற்றப் பாதையைத் தடுக்கும். மேலும் எதிர்மறை சிந்தனையாளர் எப்போதும் பிறரிடம் உள்ள குறைகளையே காண்பார். இந்த கட்டுரையில் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளைப் பற்றி காணலாம்.
நேர்மறை அல்லது நடுநிலை அனுபவங்கள் மற்றும் எண்ணங்களைக் காட்டிலும், எதிர்மறை அனுபவங்களுக்கும் எண்ணங்களுக்கும்தான் அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இது எதிர்மறை சார்பு என்று அழைக்கப்படுகிறது. எதிர்மறையான எண்ணங்கள் நேர்மறையான எண்ணங்களை விட மக்களை அதிகம் பாதிக்கின்றன.
நம் முன்னோர்கள் கடினமான சூழலில் வாழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது. கொடிய பல தடைகளைத் தாண்டி அவர்கள் உணவு சேகரிக்க வேண்டியிருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு எதிர்மறை சார்பு நம் மூளையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உணவை கண்டு பிடிப்பது என்பது நேர்மறை எண்ணம், இயற்கை ஆபத்து மற்றும் விலங்குகளிடம் மாட்டிக்கொள்வது என்பது எதிர்மறை எண்ணங்கள். ஆனால், உணவைக் கண்டுபிடிப்பதை விட வேட்டையாடுபவர்களையும் இயற்கை ஆபத்துகளைதான் அதிகமாக கவனத்தில் வைத்துள்ளனர் மக்கள். எதிர்மறையாக நாம் யோசிப்பது காலங்காலமாக மரபணு வழியாக பரவிக்கொண்டுதான் இருக்கிறது. நேர்மறை எண்ணம் மற்றும் அனுபவங்களை நினைப்பவர்கள் என்பது மிகமிக குறைவு.
மக்கள் உலகைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போதே, எதிர்மறையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று கூறுகிறது ஆராய்ச்சி. நேர்மறையான நிகழ்வுகளை விட எதிர்மறை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அதிக செலுத்தப்படுகிறது. எதிர்மறையான முடிவுகள் மற்றும் அனுபவங்களிலிருந்து நாம் பல விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
நேர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை ஒருவர் தொடங்கலாம் என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய குடும்பத்தார், உறவினர் மற்றும் நண்பர்களிடம் கூறியவுடன் அதில் பெரும்பாலானோர் வேண்டாம், இது சரியாக வராது என்றே கூறுவார்கள். நேர்மறையாக யோசிப்பவராக இருந்தாலும், மற்றவர்களின் எதிர்மறை எண்ணத்தால் இவரும் பாதிக்கப்பட்டிருப்பார். உளவியல் ஆராய்ச்சி படி, எதிர்மறையான சார்பு ஒரு பணியை முடிக்க உதவும் ஊக்கபடுத்துதலைப் பாதிக்கிறது. எனவே, எதிர்மறை எண்ணங்களை தகர்த்து நேர்மறை எண்ணங்களோடு மற்றவர்களை ஊக்க படுத்த வேண்டும்.
ஒரு நல்ல செய்தி வெளிவருவதற்கு நாட்கள் தேவைப்படும். ஆனால், ஒரு கெட்ட செய்தி காட்டு தீ போல வெகு விரைவாக அனைவரிடத்தும் பரவிவிடுகிறது. கூடுதலாக, எதிர்மறையான செய்திகள் உண்மையாக கருதப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதிர்மறை தகவல்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால், இது அதிக செல்லுபடியாகும் தன்மையைக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மோசமான செய்தி அதிக கவனத்தை ஈர்ப்பது இதன்காரணாமாகத்தான்.
எதிர்மறை சார்பு வேறுபாடுகள் அரசியல் சித்தாந்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தாராளவாதிகளை விட பழமைவாதிகள் எதிர்மறையான தகவல்களுக்கு வலுவான உளவியல் பதில்களைக் கொண்டிருப்பார்கள் என்று சில ஆராய்ச்சி கூறுகிறது. உதாரணமாக, தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வேட்பாளரின் தனிப்பட்ட தகுதிகளுக்கு மாறாக தங்கள் எதிரி வேட்பாளரைப் பற்றிய எதிர்மறையான தகவல்களின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த எதிர்மறை சார்பு குழந்தை பருவத்திலேயே வெளிவரத் தொடங்குகிறது என்று கூறுகிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. மிகவும் இளம் குழந்தைகள் நேர்மறையான முகபாவனை மற்றும் குரலின் தொனியில் அதிக கவனம் செலுத்த முனைகிறார்கள். ஆனால் இது ஒரு வயதுக்கு மேல் மாறத் தொடங்குகிறது. அந்த நேரத்தில், குழந்தைகள் எதிர்மறை தூண்டுதல்களுக்கு ஏற்ப மாறுகிறார்கள் என்று மூளை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
எதிர்மறை ஒரு இயல்புநிலை அமைப்பு என்று தோன்றினாலும், அதை நாம் தவிர்க்க முயலவேண்டும். உங்கள் வாழ்க்கையில் எது முக்கியம் மற்றும் முக்கியமல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கலாம். அத்துடன் நேர்மறையான அம்சங்களை மதிப்பிடுவதிலும் பாராட்டுவதிலும் கவனம் செலுத்துங்கள். எதிர்மறையான எதிர்விளைவுகளின் முறையை உடைத்து, நேர்மறையான அனுபவங்களை ஆழமாக பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
எதிர்மறை சார்பு உங்கள் மன ஆரோக்கியத்தை பாதித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது இருண்ட எண்ணங்களில் தங்கியிருக்கவும், அன்பானவர்களுடனான உங்கள் உறவை புண்படுத்தவும், வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையான பார்வையை பராமரிப்பதைக் கடினமாக்கும்.
உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை பற்றி கவனம் செலுத்துங்கள். எதிர்மறையான பேச்சு உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதை வடிவமைக்கிறது. எதிர்மறை எண்ணங்கள் தொடங்கும் போதெல்லாம் அவற்றை நிறுத்துவதே ஒரு சிறந்த தந்திரமாகும். மாற்ற முடியாத கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்குப் பதிலாக, நீங்கள் அதில் கற்றுக்கொண்டதையும் எதிர்காலத்தில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பற்றி நேர்மறையாகச் சிந்தியுங்கள்.
எதிர்மறை மனநிலையிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கான ஒரு மேம்பட்ட செயல்பாட்டை செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, சில விரும்பத்தகாத நிகழ்வு அல்லது விளைவுகளை நீங்கள் மனதளவில் மதிப்பாய்வு செய்தால், உங்கள் கவனத்தை வேறு செயலில் செலுத்துங்கள், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு செயலில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். உற்சாகமான இசையைக் கேட்பது, நடை பயணத்திற்குச் செல்வது அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பது ஆகியவை எதிர்மறையான எண்ணங்களிலிருந்து உங்கள் விடுவிக்கும் வழிகள்.
நேர்மறையான அனுபவங்கள் நினைவில் வைக்க நேரம் அதிகம் தேவைப்படுவதால், நடக்கும் நல்ல விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர்மறையான விஷயங்கள் விரைவாக மாற்றப்பட்டு உங்கள் நீண்டகால நினைவகத்தில் சேமிக்கப்படும்போது, நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே இருக்கும். உங்களிடம் இருக்கும் நேர்மறை எண்ணங்களை, உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் கொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.