கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

வருடத்தில் இக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுகின்றமை ஒரு சாதாரண நிகழ்வாயினும் தற்போது பரவியுள்ள காட்டுத்தீ முன்னொருபோதும் இல்லாதவாறு உக்கிரமானதாக காணப்படுகின்றது.

இந்த பயங்கர காட்டுத்தீயினால் தற்போது சுமார் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுள் மீட்புப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்துள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சமாக கணக்கிடப்பட்டுள்ள போதிலும் அந்த எண்ணிக்கை இதனை மிகவும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

பொதுவாக அவுஸ்திரேலியாவில் கோடைக்காலம் நிலவும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் காட்டுத்தீ மேலும் உக்கிரமடையலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது. அவுஸ்திரேலியாவின் அனைத்து பிராந்தியங்களும் அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் நியூ சவுத்வேல்ஸ் பிராந்தியமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள புகையினால் இங்கு வளிமண்டலம் மிகவும் மாசடைந்துள்ளது.

தமது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் மற்றும் இடைக்கிடையே ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த நாடு என்ற வகையில் இலங்கையர்களால் தற்போது அவுஸ்திரேலிய பிரஜைகள் அனுபவிக்கும் வேதனையை புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.

இந்த துயரமான வேளையில் அவுஸ்திரேலிய மக்களுக்காக இலங்கை தேயிலை தொகையொன்றினை நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.