வை எல் எஸ் ஹமீட்

தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை மாற்றவேண்டுமென்பதில் அனைத்து தேசியக்கட்சிகளுக்கு மத்தியிலும் உடன்பாடுண்டு. குறிப்பாக, 2001ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சியை மு கா கவிழ்த்ததிலிருந்து இந்நிலைப்பாடு முனைப்புப் பெற்றது.

2015 ம் ஆண்டு ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசும் 20வது திருத்தம் என்ற பெயரில் இதற்கான முயற்சியை எடுத்தது. சிறுபான்மைக் கட்சிகளின் உடன்பாட்டைப் பெறுவதற்காக வெவ்வேறு முறைமைகள் பிரேரிக்கப்பட்டன. அவை அனைத்தும் சிறுபான்மையைக்கு பாதிப்பாகவே இருந்ததனால் சிறுபான்மைக் கட்சிகளின் பலமான எதிர்ப்பினைத் தொடர்ந்து அவை கைவிடப்பட்டன.

நல்லாட்சி சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் இருந்ததால் அது சாத்தியமற்றதாகிவிட்டது. தற்போதைய ஆட்சியும் பொதுத்தேர்தலின்பின் தேர்தல்முறையை மாற்றப்போவதாக அறிவித்திருக்கின்றது. ஜனாதிபதி தனது கொள்கை உரையில் அதனைக் குறிப்பிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர்களும் 70-30 என்ற அடிப்படையில் தேர்தல்முறையை மாற்றப்போவதாக அறிவித்திருந்தார்கள்.

70-30 என்பது 2015ம் ஆண்டு முதலாவது முன்வைக்கப்பட்ட முறையாகும். இது அன்றைய தினேஷ் குணவர்த்தன தெரிவுக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டது. கடந்த எனது ஆக்கத்தில் இதனால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு குறைவடையும்; என்பதை சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

அன்று சிறுபான்மைக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக நல்லாட்சி கைவிட்ட முறைமையை புதிய ஆட்சி மீண்டும் கொண்டுவர முன்னறிவித்தல் தந்திருக்கிறார்கள். அதாவது சிறுபான்மைக்கு பாதகமானது; என்று நன்றாகத் தெரிந்துகொண்டும் அதனைக்கொண்டுவர முனைகிறார்கள்.

மறுவார்த்தையில் கூறுவதானால் சிறுபான்மைகளின் பிரதிநிதித்துவத்தை செல்லாக்காசாக ஆக்குவதற்கு முன்னறிவித்தல் தந்திருக்கிறார்கள். இதனைச் செய்வதற்கு சிறுபான்மைகளிடமே ஆதரவு கேட்கிறார்கள். இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளமுடியாத சிறுபான்மையைச் சேர்ந்த ஒரு கூட்டம் ஆதரவு தரவும் தயாராக இருக்கிறார்கள்.

தேர்தல் சட்டத்தை மாற்றமுனைவதேன்?
—————————————————-
ஆட்சி அமைப்பதற்கு 50% மேற்பட்ட ஆசனங்கள் தேவை என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்தவருக்கும் தெரியும். அதாவது 225 ஆசனங்களில் ஆகக்குறைந்தது 113 தேவை. 50% ஆசனம் பெறுவதாக இருந்தால் 50% வாக்குகளைப் பெறவேண்டும்; என்பதுதான் ஜனநாயகமாக இருக்கமுடியும். தற்போதைய தேர்தல்முறை அண்ணளவாக இதனை உறுதிப்படுத்துகிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தேசியக்கட்சிகள் அபூர்வமாகவே 50% வாக்குகளை பொதுத்தேர்தலில் பெற்றிருக்கின்றன. ஜனாதிபதித்தேர்தல் விதிவிலக்கானது; ஏனெனில் யதார்த்தத்தில் அது இரு முனைப்போட்டியாகும். பொதுத்தேர்தல் பல்முனைப் போட்டியாகும்.

விகிதாசாரத் தேர்தல்முறை அறிமுகத்திற்குமுன் தேசியக்கட்சிகள் 50% வாக்குகள் பெறாமல் 50% மேல் ஆசனம் பெறுகின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. விகிதாசாரத் தேர்தலின் நிலைமை மாறிவிட்டது.

தேசியக்கட்சிகள் 50% வாக்குகள் பெறாத நிலையில் 50% ஆசனங்களையும் பெறமுடியாதபோது சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவைப்படுகிறது. இதன்மூலம் சிறுபான்மைகள் ஆட்சியில் பார்வையாளர்களாக அமர்ந்திருக்காமல் பங்காளர்களாக ஆகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இலங்கை சுதந்திரம் பெற்றபோது இத்தேர்தல்முறை இருந்திருந்தால் பெரும்பாலும் தமிழர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை தோன்றாமல் இருந்திருக்கலாம். ஏதோ இறைவனின் நாட்டம் . அன்று அவர்கள் தனிநாடோ, சமஷ்டியோ கேட்கவில்லை. அவர்களின் கோரிக்கை மிகவும் அடிப்படை அம்சங்களுடன் தொடர்புபட்டதாக இருந்தது.

மட்டுமல்ல, சிலவேளை தனிச்சிங்கள சட்டம்கூட சாத்தியமில்லாமல் போயிருக்கலாம். விகிதாசாரத் தேர்தல்முறை அமுலுக்கு வந்தபோது தமிழரின் சாதாரண கோரிக்கை தனிநாட்டுக் கோரிக்கையாக மாறியிருந்தது. ஆயுதப்போராட்டம் உச்சத்தில் இருந்தது.

இத்திருத்தத்தின் மூலம் மீண்டும் 50% வாக்குகளைப் பெறாமல் 50% இற்குமேல் ஆசனம்பெற்று ஓரின ஆட்சிக்கு வித்திடப்படுகின்றது.

தேர்தல் முடிவுகள்
———————-
முதலாவது தேர்தல்- 23/08/1947 அன்றைய மொத்த ஆசனங்கள்- 95
ஐ தே க-
வாக்குகள் 39.81%
ஆசனங்கள் 42 அதாவது மொத்த ஆசனங்களில் 44.21%

ACTC ( அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)
வாக்குகள் 4.37%
ஆசனங்கள் 7
இந்த 7 ஆசனங்களுடன் ஐ தே க கூட்டாட்சி அமைத்தது.

அதேநேரம் ‘ இலங்கை இந்திய காங்கிரஸ்- (மலையகக்கட்சி) 6 ஆசனங்கள்.

இங்கு கவனிக்க வேண்டியது தமிழர்களைப் பொறுத்தவரை வட கிழக்கில் தெற்கில் தேசியக்கட்சிளுக்கிருக்கின்ற சூழ்நிலையே கிட்டத்தட்ட தமிழர்களுக்கிருக்கின்றது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்நிலை அம்பாறையில் மட்டும் இருக்கின்றது. திருமலையில் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் அந்நிலைவரும். இல்லையெனில் ஒரு ஆசனம் மட்டுமே!

இரண்டாவது தேர்தல்- மே, 1952
மொத்த ஆசனம் 95
ஐ தே க
வாக்குகள் 44.08%
ஆசனங்கள் 54, இது மொத்த ஆசனத்தில் 56.84%

அதாவது 50% இற்கு குறைவான வாக்குகளைப்பெற்று 50% மேற்பட்ட ஆசனங்கள். இது நியாயமா?
அதேநேரம் சு கட்சி 15.22% வாக்குகள்பெற்று 9 ஆசனங்கள். அதாவது 9.47% ஆசனங்கள்.

இந்த ஆட்சியில்தான் மலையகத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டது.

ஐ தே க பெற்ற 44% வாக்குகளுக்கு சமாந்திரமான ஆசனங்கள் பெறக்கூடிய தேர்தல்முறை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? தமிழ், மலையகக் கட்சிகளின் துணையுடனே ஆட்சியமைக்க வேண்டியேற்பட்டிருக்கும். மலையக மக்களின் பிரஜா உரிமையைப் பறிக்க அவர்கள் அனுமதித்திருப்பார்களா?

மூன்றாவது தேர்தல் ஏப்ரல் 1956
மொத்த ஆசனம் 95
M E P பண்டாரநாயக போட்டியிட்ட கட்சி
பெற்ற வாக்குகள் - 39.52%
ஆசனம்-51 அதாவது மொத்த ஆசனத்தில் 53.68%

39 இற்கும் 53 இற்குமுள்ள இடைவெளியைப் பாருங்கள். 50% இற்கு குறைவான வாக்கு; 50% மேற்பட்ட ஆசனம்- இது நியாயமா?

இவ்வாறு ஆட்சியமைத்த பண்டாரநாயக்க அரசுதான் தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்தது.

வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப ஆசனம் பெற்றிருந்தால் தமிழ்க்கட்சிகளின் தயவுடன் ஆட்சியமைக்க வேண்டி ஏற்பட்டிருக்கும். தனிச்சிங்கள சட்டம் சாத்தியப்பட்டிருக்குமா?

மட்டுமல்ல, பண்டா- செல்வா ஒப்பந்தத்திற்கெதிரா ஐ தே க டட்லி- ஜே ஆர் தலைமையில் கண்டிக்கு பாதயாத்திரை சென்றதால் அது கிழித்தெறியப்பட்டது. இன்றைய சமஷ்டி, அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வுக் கோரிக்கைகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிட்டுக்கூறும்படி எதுவும் அவ்வொப்பந்தத்தில் இருக்கவில்லை. சிறுபான்மைகளின் தயவில் ஆட்சியமைத்திருந்திருந்தால் அது கிழித்தெறியப்பட்டிருக்குமா? நாடு யுத்தத்தைச் சந்தித்திருக்குமா?

இந்நாடு 30 வருட யுத்தத்தால் அதலபாதாளத்திற்கு சென்றதற்கு அன்றைய தேர்தல்முறை பிரதான காரணமில்லையா? சகல சமூகங்களுக்குமாக உருவாக்கப்பட்ட ஐ தே க ஏன் பாதயாத்திரை சென்றது.

தனிச்சிங்கள வாக்குகளினால் ஆட்சியமைக்கும் தேர்தல்முறை காரணமாக அடுத்தமுறை ஆட்சிக்குவர இனவாதத்தை கையிலெடுத்த செயற்பாடு இல்லையா அது?

எனவே, இனவாதத்திற்கும் தேர்தல்முறைக்கும் நேரடித்தொடர்பு இருப்பது புரிகிறதா?

50% இற்கு குறைவான வாக்குகளைக்கொண்டு 50% இற்குமேல் ஆசனம் பெறுகின்ற தேர்தல்முறை ஒன்று அமுலுக்கு வந்தால் ஒருபுறம் சிறுபான்மைகளின் ஆசனங்கள் குறையும். மறுபுறம் ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதம்தான் தேசியக்கட்சிகளின் மூலதனமாக இருக்கும். அந்நிலையில் சிறுபான்மைகளின் நிலை என்ன?

இன்று ஜனாதிபதித் தேர்தலில் பேசப்படும் இனவாதம் அதன்பின் பொதுத்தேர்தலில் பிரதான பேசுபொருளாக மாறும். பொதுத்தேர்தல் முறையில் கைவைக்காமல் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கக் கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை நமது பெருந்தலைவர்களே எட்டி உதறிவிட்டார்கள்.

அடுத்து பொதுத்தேர்தல் முறையிலும் நமக்கு வேட்டு வைக்க முயற்சி. ஆனாலும் தலைவர்களுக்கென்ன? அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். சமூகம்?

தனித்துவக்கட்சிகள் தேவை என்பது வேறு. இன்றைய தலைவர்களுடன் இத்தனித்துவக் கட்சிகளை கொண்டுசெல்வதென்பது வேறு. இவைகள் தொடர்பாக சிந்திப்பதற்கு சமூகத்திற்கு நேரம் இருக்கின்றதா?

ஒன்றில் ஓட்டைப்படகில் ( முஸ்லிம் கட்சிகள் )செல்வோம் அல்லது கடலில் ( தேசியக்கட்கள்) குதிப்போம்; என்பது சமூகத்தின் நிலைப்பாடு.

படைகைத் திருத்தி அல்லது புதிய தரமான படகைத் தயார்செய்து பயணிக்க சமூகம் தயாரில்லை. எனவே, கடலில் குதிப்பதைவிட ஓட்டைப்படகானாலும் பரவாயில்லை. அதிலேயே பயணியுங்கள்; என்று கூறுவதைத்தவிர எமக்கும் வேறுவழியில்லை.

( இறுதித் தேர்தல் முடிவுவரை தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.