அஷ்ஷைக் பளீல் (நளீமி)

மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டிருக்கிறார்கள்.பலர் தொழில்களை இழந்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு கூட வசதியற்ற நிலையில் இருக்கிறார்கள். நோயாளிகள் தமது மருந்துகளை ஏனைய நோய்களுக்கு கூட எடுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அன்றாட கருமங்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தையும் வைத்து அவர்களுடைய மனதில் ஒரு பெரிய கவலை இருக்கிறது. இப்படியான ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதற்கு வைரஸும் அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காரணம் என்று அவர்கள் நினைத்து ஓரளவு நிம்மதி அடைகிறார்கள்; பொறுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணகர்த்தாக்களாக அமைபவர்கள் பற்றிய தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்கின்ற பொழுது இந்த பொதுமக்கள் ஆத்திரப்படுவார்கள். அத்தகையவர்களை நாட்டினதும் தேசத்தினதும் துரோகிகளாகவே கணிப்பார்கள்.

அந்தவகையில், முஸ்லீம்கள் மத்தியில் இந்த நோய் கண்டவர்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து அண்மைக்காலத்தில் நாடு திரும்பியவர்கள் தமது நோயை மறைத்துக்கொண்டு அல்லது உயர் அதிகாரிகளுக்கு இதனைப்பற்றி தெரிவிக்காமல் இருந்தால் அத்தகையவர்கள் தான் இந்த நோய் பரவுவதற்கு காரணகர்த்தாக்கள் என்ற கருத்து இந்த பொதுமக்களுக்கு மத்தியில் நிச்சயமாக செல்லும். சென்றால் இவர்கள் ஏற்கனவே வீடுகளுக்குள் அடைபட்டு இருப்பதனால் ஏற்பட்டிருக்கின்ற அந்த மனக் கவலையும் ஆத்திரமும் முஸ்லிம்கள் மீதுதான் திரும்பும். எனவே, முஸ்லீம்களால் தான் இந்த பிரச்சினை இன்னும் தொடர்கிறது என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.

அந்தவகையில், ஏற்கனவே இன உணர்வை இந்த நாட்டில் விதைத்து இனங்களுக்கு இடையிலான உறவுகளை உடைப்பதற்கும் இனவாதத்தில் குளிர் காய்வதற்கு காத்துக் கொண்டிருக்கின்ற பலருக்கும் குறிப்பாக மீடியாக்களுக்கும் முஸ்லிம்களது இந்த நடவடிக்கைகள் சும்மா இருந்தவன் வாய்க்கு அவல் கிடைத்ததாக அமையும்.முஸ்லிம்கள் மட்டுமா சட்டங்களை மீறுகிறார்கள்? அவர்கள்  மட்டுமா நோயை மறைத்து இன்னும் பதுங்கியிருக்கிறார்கள்? எல்லா இனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் சம்பந்தப்படுகிறார்கள். முஸ்லிம்களில் ஒருவர் செய்தாலும் அது பூதாகரமாக மாற்றப்படும். ஊதிப் பெருப்பிக்கப்படும்.

எனவே, முஸ்லிம்கள் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.

கரிநாள் ஏப்ரல் 21ஆம் திகதியும் தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கிறன. இப்படியான சூழலில் இனவாதிகளுக்கு நாம் தீனி போட்டு விடக்கூடாது. நாம் மாத்திரம்தான் இந்த நாட்டில் பிரச்சினைக்குரியவர்களாகவும் சிக்கலுக்குரியவர்களாகவும் காட்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஏனைய சமூகங்களில் இருக்கும் சிலர் செய்கின்ற தவறுகள் வெளிப்படுவதில்லை. அல்லது வெளிப்படுத்தப்படுவதில்லை. இனவாத, பக்கசார்பான மீடியாக்களும் கூட எப்போதும் முஸ்லிம்களுடைய சிறிய தவறுகளை வெளிப்படுத்துவதில் தான் கவனமாக இருக்கின்றன.

எனவே, இந்த நாட்டில் நாம் பலவீனமான ஒரு சமூகம் சிறுபான்மையினர் என்ற வகையில் மிகவும் ஜாக்கிரதையாகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

யாருக்காவது நோயின் அறிகுறிகள் தென்பட்டால், வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தால் உடனடியாக அதனைப் பற்றி உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதும் நோய்க்கு உள்ளானவர்களதும் அவர்களது உறவினர்களதும் கடமையாகும். இது இந்த நாட்டுக்கும் இந்த உலகத்துக்கும் செய்யும் ஒரு சேவையாகும், நாட்டுப் பற்றின் அடையாளமாகும். இந்த நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களது கோபப் பார்வைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு அது  வழிவகுக்கும்.

எனவே, எமது பொறுப்பை நாம் சரியாக செய்வோம். அந்த நேரத்தில் எமக்கு தலைநிமிர்ந்து பேச முடியும்.இனவாதிகளுக்கு தீனிபோடும் நடவடிக்கைகள் எமது பக்கத்தில் இடம் பெற்று விடக்கூடாது.

இனவாத ஊடகங்கள் முஸ்லிம் ஒருவர் தவறு செய்கின்ற பொழுது 'முஸ்லிம் ஜாதிகயா' என்று கூறுவதையும் முஸ்லிமல்லாதவர்கள் செய்கின்ற பொழுது அவ்வாறு அவர்களது இனத்தை குறிப்பிடாமல் இருப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. எனவே இப்படிப்பட்ட மோசமான மீடியாக்காரர்கள் இருக்கின்ற, 'மீடியா அதர்மம்' தாண்டவமாடும் சூழலில் நாம் அவர்களது பசிக்கு பலியாகி விடக்கூடாது.

அல்குர்ஆனின் கருத்தின்படி சாட்சியம் சொல்வது ஒரு கடமையாகும்.

فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ ۗ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ۚ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ (283)

"யார் மீது நம்பிக்கை வைக்கப்பட்டு அவரிடம் அமானிதம் ஒப்படைக்கப்ட்டதோ அவர் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;அவர் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவர் ஒருவர் அதை மறைக்கின்றாரோ  நிச்சயமாக அவருடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்." (2:283) என அல்லாஹ் கூறுகிறான்.

இமாம் இப்னு அப்பாஸ் (ரலி) இந்த வசனத்திற்கு விளக்கம் கூறுகின்ற பொழுது , அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பொய் சாட்சியம் சொல்வது, சாட்சியத்தை மறைப்பது ஆகிய மூன்றும் பெரும்பாவங்களுக்கு மத்தியிலுள்ள பெரும் பாவங்களாகும்.(தப்ஸீர் தபரீ-6447) எனக் கூறியுள்ளார்கள்.

அந்த வகையில் கொரோனாவை மறைத்துக் கொண்டிருப்பது சாட்சியத்தை மறைப்பதற்கு சமனான குற்றமாகும். அதாவது பெரும் பாவங்களுக்கு மத்தியில் உள்ள ஒரு பெரும் பாவமாகும்.

அதேபோன்று நாட்டின் சட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

 "அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் அவனது தூதருக்கும்  உங்களுடைய பொறுப்புதாரிகளுக்கும் கட்டுப்படுங்கள்" என்ற வசனத்தில் 'உலுல்அம்ர்' (பொறுப்புதாரிகள்) எனப்படுவோர் இடுகின்ற கட்டளைகளுக்கு நாம் கட்டுப்பட்டே ஆக வேண்டும். அது மார்க்கக் கடமையாகும்.

எனவே, தற்போதைய சூழலில் இந்த நாட்டில் நாம் தொடர்ந்தும் மரியாதையோடு வாழவேண்டுமாயின் நாட்டின் அனைத்துப் பிரஜைகளதும் உள்ளங்களை வென்று, அல்லாஹ்வின் அருளைப் பெற்று வாழவேண்டுமாயின் ஊரடங்குச் சட்ட நேரத்தில் வீட்டுக்குள் அடங்கியிருப்பதுடன் சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வாழ்வது நல்லதாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.