இன்று மாலை இந்தியாவில் இருந்து அழைத்துவரப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுவரும் கொவிட் 19 கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதில் ஒருவர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர். ஏனைய 18 பேரும் கந்தகாடு தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விசேடமாக இவர்களில் 90 வீதமானவர்கள் இலங்கை வரும் போது அவர்களுக்கு காய்ச்சல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏனையவர்களுக்கு 24 மணித்தியாலங்களில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இந்தியாவிற்கு விசேட விமானம் ஒன்று செல்லவுள்ளது அதில் இந்தியாவிலிருந்து இலங்கை வரும் யாத்திரிகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

அவர்கள் இலங்கை வந்தவுடன் உடனடியாக தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக நாம் தற்போது மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

மேலும், சிலர் விடுமுறை வழங்கப்பட்டுள்ள இத்தினங்களில் கிரிக்கட் விளையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

சுமார் 100 முதல் 200 பேர் வரை ஒன்று கூடி இவ்வாறு கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

இதன்காரணமாக, தயவுசெய்து பொதுமக்கள் இவ்வாறு ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.