உலகம் எங்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டு நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் நட்டம் ஏற்பட்டு இருப்பதாக ஏவியேஷன் வாய்ஸ் அலறுகிறது.உலகமெங்கும் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் பலர் கட்டாய லீவில் அனுப்பப்பட்டும் தூக்கியடிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.சரித்திரம் காணாத பேரவலமாக ஏமிரேட்ஸ் அதன் அத்தனை ஆபரேஷனையும் நிறுத்திக் கொள்ளப் போகிறது.

தங்கள் பிரஜைகளை தத்தம் நாடுகளுக்கு திரும்ப அழைத்து வருவதற்காக மட்டுமே விமானங்கள் பறக்கின்றன.இதில் என்ன பகிடி என்றால் மூன்று ஆசனங்கள் உள்ள விமான இருக்கைகளில் நடு இருக்கையில் உட்கார யாரும் ப்ரியப்படாமல் வெருண்டு ஓடுகிறார்களாம்.பூமியில் மட்டுமல்ல வானத்திலும் ஒரு மீட்டர் இடைவெளி கேட்கிறார்கள்.

"நான் ஈ " படத்தில் ஒரு ஈ வில்லன்களை எல்லாம் பழி வாங்குவது  போல ஒரே ஒரு வைரஸ் சீனா வூஹானில் இருந்து விமானம் ஏறிப் போய் இத்தாலி தென் கொரியா,ஸ்பெய்ன் பிரான்ஸ் என்று சீண்டி ஆனானப்பட்ட அமெரிக்காவை நொக்கவுட் செய்து  முழு உலகத்தின் இருப்பையும் லொக்டவுன் செய்து இருக்கிறது.

ஏப்ரல் பத்து வரை நமது நாட்டின் நோயாளர் எண்ணிக்கை இதே ரேஞ்சில் இருந்தால் கொரானாவாவது கொக்காவது என்று 96 உலகக் கிண்ண கிரிக்கட் வெற்றி போல கொண்டாடலாம்.அநேகமாய் இலங்கை மீண்டுவிடும்.ஆனால் அடி குப்புற விழப் போகும் பொருளாதாரத்தை நினைத்தால் தான் சர்வமும் நடுங்குகிறது.அமெரிக்காவும் ஐரோப்பாவும் சீனாவும் கொரானாவில் கோட்டைவிட்டாலும் பொருளாதாரத்தில் மீளும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஒன்றும் இல்லாது போகும் நிலமை வந்தால் அமெரிக்கா பிரம்மஸ்திரத்தைப் பாவிக்கும்.அடுத்த நூறு வருடங்களுக்குத் தேவையான பெற்றோலிய வளம் அங்கே கொட்டிக் கிடக்கிறது.

சுற்றுலாத்துறையை நம்பி வாழும் இலங்கையின் நிலைதான் பெரும் பரிதாபம்.விமானங்கள் எதுவும் வருவது இல்லை.வெறும் இருபதே இருபது ஓவர் ப்ளையிங் நேற்று பதிவானதாம்.

இப்போது இருப்பவர்கள்,  இல்லாதவர்களுக்கு உதவுகிறார்கள்.நாட்டின் ஆதார வருமானமான சுற்றுலாத்துறை சீர்குலைந்து திறைசேறி திவாலாக தொடர்ந்து வியாபார நிறுவனங்கள், கடைகள் எல்லாம் இழுத்துச் சாத்தப்பட்டு இருக்கும் இந்நிலை நீடித்தால் முப்பதுகளில் அமெரிக்காவில் ஜனாதிபதி ஹுவர் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற பெரும் மந்த நிலை (The Great Depression) ஏற்பட்டு யாரும் யாருக்கும் உதவ முடியாத திரிசங்கு நிலைதான் ஏற்படும்..

இப்படி ஏகப்பட்ட if கண்டிஷன்களில் ஊகங்களைச் சொல்லிக் கொண்டு போவது கூட பெரும் கிலியையும் வாழ்வு மீதான விரக்தியையுமே ஏற்படுத்தும்.தனிமனிதனாய் அன்றாட வாழ்க்கையில் அவதூறுகள்,முதுகில் குத்தல்களை எல்லாம் தாங்கி ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்வின் மீது பெரு விருப்பை ஏற்படுத்திக் கொள்வது போல இந்த சீரழிவில் இருந்தும் மீள வேண்டி இருக்கிறது.

உழைத்துக் களைத்துப் போய் நீண்ட ஓய்வில் இருத்தி வைக்கப்பட்டு இருக்கும் விமானங்களின் வரிசையைப் பார்க்கிறேன். ஸ்கூல் முடிந்து வீடு செல்ல வரிசையில் காத்து நிற்கும் சிறுமிகள் போல இருக்கிறது.

ஸபர் அஹ்மத்,
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.