ஊரடங்கு சட்டம் தளர்த்த பட்டதனை தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக நிவாரணங்களையும் பாதுகாப்பினையும் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஹட்டன் டிக்கோயா வனராஜா ஆலயத்திற்கு முன்பாக வனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பகல் (01) திகதி நடைபெற்றது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மலையக தன்னெழுச்சி இளைஞர் குழு ஒழுங்கு செய்திருந்தது.

இதன்போது சுகாதார அறிவுறுத்தலுக்கமைய ஒரு மீற்றர் இடைவெளியில் நின்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய், கொழும்பு வாழ் இளைஞர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடு இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய் போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தன்னெழுச்சி இளைஞர் குழுவின் தலைவர் கணேசன் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் வறட்சி காரணமாகவும் ஊரடங்கு சட்டம் காரணமாகவும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசாங்கம் நிவாரணம் தருவதாக தெரிவித்த போதிலும் இதுவரை நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவில்லை.

ஆகவே அவர்கள் சொல்லண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு உடனடியாக இலவசமாக நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாங்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஒழுங்கு செய்தோம்.

அரச ஊழியர்களையும் தனியார் ஊழியர்களையும் வேலைக்கு போக வேண்டாம் வீட்டில் இருங்கள் என்று அரசாங்கம் சொல்லுகின்றது.

ஆனால் தோட்டத்தொழிலாளர்களை மாத்திரம் வேலைக்கு போக சொல்லுகிறது. இதில் எந்ந நியாயம் இருக்கின்றது.

அவர்கள் வேலைக்கு போகும் போது அவர்களின் குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிலையத்திலேயே விட்டு செல்கின்றனர்.

அங்கு மாத்திரம் குழந்தைகள் கூட்டமாக இருக்கலாமா ? இது தொடர்பாக பேசுவதற்கு எவரும் இல்லை.

இதேவேளை மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் யுவதிகள் கொழும்பில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு இதுவரை எந்தவித நிவாரணமோ மருந்து பொருட்களோ பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

எனவே அரசாங்கமும் அரசியல் பிரதிநிதிகளும் இதனை கருத்தில் கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்கும் மலையக இளைஞர்களுக்கும் இலவசமாக நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

-சுந்தரலிங்கம்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.