- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் -

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக இன்று காலை முன்னாள் அமைச்சர் பௌசி அவர்களது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, H.M.M. ஹரீஸ், அலிஸாஹிர் மௌலானா மற்றும் நான் அவசரமாக கூடிய கலந்துரையாடிய பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு தீர்மானித்தோம்.

அதன்படி பிரதமரை சந்திப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டதுடன், இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் இருப்பதால் அதற்கு முன்னர் சந்திப்பதற்கு அலரி மாளிகைக்கு வருமாறு பிரதமர் கூறியதற்கு இணங்க நாம் அங்கு சென்ற போது, தற்போதைய நாட்டு நிலமை சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்றத்தை பிரிதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்கள், சுகாதார பணிப்பாளர் அணில் ஜாசிங்க மற்றும் இராணுவ அதிகாரிகள், சுகாதார பிரிவினர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்துடன், அந்தக் கூட்டத்தின் இறுதியில் பிரதமருடன் தனியாக பேச வேண்டும் என்று நம் சார்பாக ரவுப் ஹக்கீம் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

எனினும் தனியாக பேசுவதற்கு மறுப்புத் தெரிவித்த பிரதமர், அனைவரும் இருக்கும் இந்த இடத்திலேயே பேசுவோம் என்று கூறியதற்கு இணங்க, ரவூப் ஹக்கீம் அவர்களால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை பற்றி விளக்கப்பட்டது.

முதலில் வௌியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் படி தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய முடியும் என்று இருந்ததாகவும், நேற்று அந்த சுற்றுநிரூபம் திருத்தப்பட்டு, சடலங்கள் எரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதால் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் இதுசம்பந்தமாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் வெளியிட்ட வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டும் தெளிவுபடுத்தல்கள் முன் வைக்கப்பட்டது.

ஆகவே முஸ்லிம்களின் மத உரிமைகளையும், உணர்வுகளையும் மதிக்கும் வகையில் அந்த சுற்றுநிரூபத்தை திருத்தியமைப்பது சம்பந்தமாக ஆராய்வதற்கு சுகாதாரத்துறை மற்றும் விஷேட வைத்திய நிபுணர்கள், துறை சார் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றை நியமித்து மறுஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைக்கு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் எதிர்ப்பை வௌியிட்டிருந்ததுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வும் இந்தக் கோரிக்கை சம்பந்தமாக எந்தவொரு பதிலையும் எமக்கு வழங்காது கூட்டத்தை முடித்துக் கொண்டார்.

உண்மையில் கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்தல் என்று இருந்த சுற்றுநிரூபம் நேற்று மாற்றியமைக்கப்பட்டு, கட்டாயமாக எரிக்கப்பட வேண்டும் என்று குறிப்படப்பட்டு புதிய சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டதாலேயே இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.

இதன்காரணமாக எதிர்காலத்தில் இந்த தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலையும் தகனம் செய்யும் நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருக்கிறார்.

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு சாதகமான தீர்வு ஒன்றை எவ்வாறு பெறமுடியும் என்பது சம்பந்தமாக அடுத்த கட்டமாக ஆராயப்பட வேண்டி உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.