எந்த நூலும் அதன் எழுத்தாளனின் உடைய அறிவின்  தரத்திற்கு ஏற்பவே அமைந்திருக்கும். அல்குர்ஆனின் எழுத்தாளனாகிய அல்லாஹ் அண்டசராசரங்களையும் அறிவியலையும் படைத்தவன். அவனே அது பற்றிய முழுத் தகவல்களையும் உள்ளடங்கிய ஒரு புத்தகத்தை மனித இனத்துக்குப் பரிசாகத் தந்துள்ளான். எனவே அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்பதற்கு அதன் எழுத்தாளனே சாட்சியாளன்.

சமகால உலகம் அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் விஞ்ஞான தொழில்நுட்பங்களினாலும்  போர்வை இடப்பட்டிருக்கிறது. அவை அனைத்துக்குமான அஸ்திவாரம் அல்குர்ஆனின் மூலமாகவே இடப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அல்குர்ஆன் ஒரு பிரபஞ்ச நூல் மட்டுமன்றி அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும்  வளர்ச்சிக்கான பாடத்திட்டம். இதனாலேயே "அல்குர்ஆன் பேசும் பிரபஞ்சம். பிரபஞ்சம்  மௌனக் குர்ஆன்"  என்று பொதுவாக குறிப்பிடப்படுகின்றது. இக்கருத்தை  உஸ்தாத் மன்சூர் தன்னுடைய அல்-குர்ஆன் விளக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கருவின் உருவாக்கம் தொடக்கம் கடல்களுக்கு மத்தியில் காணப்படும் தடுப்புகள் ,வானம் பூமியின் தோற்றம், விண்வெளியின் அமைவு, சூரிய மண்டலம் , பூமியின் சுழற்சி, பூமி அதன் ஓரங்களிலிருந்து குறைக்கப்படுவது ,பெருவெடிப்புக் கொள்கை என 1400 ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆன் கூறிய  விடயங்களையே இன்று பல்லாண்டு காலம் கடந்து விஞ்ஞானம் நிரூபித்துக்கொண்டிருக்கின்றது.

 ((.... நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்))
 அல் ஹதீத் 17

 ((மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.))
 அர் ரூம் 20

 (( மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.))
 அர் ரூம் 22

 (( நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-))
 88 : 17
 (( மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,)) 
 88 : 18
 ((மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,))
 88 : 19
 (( இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) ))
 88 : 20

அல் குர்ஆனில் உள்ள அறிவியல் உணர்ச்சிகளைத் தூண்டும் சில வசனங்கள் இவை. அவர்கள் பார்க்கவில்லையா ?கேட்கவில்லையா? படிப்பினை பெறவில்லையா? எல்லாவற்றையும் அவர்கள்  ஆராயவில்லையா? பின்னர் அவர்கள் இதனை நம்பவில்லையா? என அறிவியல் எழுச்சியை தூண்டுகின்றன பல்வேறு வினாக்களையும அல்குர்ஆன் எம்மை நோக்கி தொடுக்கிறது.

அல்குர்ஆனின் இந்த  வினாக்களின் உஷ்ணக் காற்றினால் உந்தப்பட்டு ஆரம்பகால முஸ்லிம்கள் அறிவியலில் தம் பங்களிப்புகளை வாரி வழங்கினார்கள். மருத்துவம் , தாவரவியல் ,விஞ்ஞானம் ,புவியியல், வானியல் என அவர்களது அறிவு ஆராய்ச்சிகள் சகல துறைகளிலும் பரிணமித்தன.

 "வித்துக்களையும் கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடித்து முளைக்கச் செய்கிறான்" (6: 95)

 ((பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-)) 80 : 26
 (( பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.)) 80 : 27
(( திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-)) 80 : 28

போன்ற அல்குர்ஆன் வசனங்களால் தூண்டப்பட்டு ஜாபிர் பின் ஹையான்,
இப்னு  பாஷா ,அபூ ஸஈத் அல் அஸ்மஈ போன்ற தாவரவியலாளர்கள் உருவாகினார்கள். அதேபோல் மருத்துவத் துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றியப் பங்கு அளப்பரியது. அதனால்தான்  நவீன மருத்துவத்தின் தந்தை (Father of the modern medicine) என அலி இப்னு சீனா இன்றும் கூட அழைக்கப்படுகிறார். இப்னு சீனா எழுதிய 99 நூல்கள், அர்ராஸி எழுதிய 220 நூல்கள் மற்றும் 140 மருத்துவ நூல்கள், அர்ராஸியினால் அறிமுகப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை, மற்றும் சின்னம்மை பெரியம்மைக்கான மருந்துகள் என்பன அல்குர்ஆனின் அடியாகப் பிறந்த அறிவியல் அற்புதங்கள்.

வானியல் துறையில் இப்ராஹீம் அல் பஸரி வானோக்குக் கருவியை முதலில் திருத்தி அமைத்தார். அல் பரஹானி என்ற அறிஞரின் கீழ் நைல் நதி பொங்கி எழும் உயரத்தை அறிய உதவும் நைலோ மீட்டர் அமைக்கப்பட்டது. கோள்களின் அட்டவணையை தயாரித்தார் பதானி. வானியலுக்கு 150 நூல்களை பரிசளித்தார் அல் பிருனி. இவ்வாறாக இஸ்லாம் ஈன்றெடுத்த  பொக்கிஷங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அவ்வாறே அல் குர்ஆனின் புவியியல் கருத்துக்களை ஆராய்ந்ததால் பல புவியியல் அறிஞர்களும் தோற்றம் பெற்றார்கள். புவியின் அமைப்பு (கிதாபு சூரத்துல் அர்ழ்) எனும் நூலை அல் குவாரிஸ்மி எழுதினார். கொலம்பஸின் பயணத்திற்கு கூட இந்நூலே காரணமாய் அமைந்தது.  முதன்முதலில் உலகப் படத்தை அல் இத்ரீஸி வரைந்தார். அதே போல் முஸ்லிம் உலகின் பூகோள குதிரை என அழைக்கப்படும் அல் மஸ்ஊதி , இபுனு ஷஹ்ரயர் போன்றோரின் புவியியல் துறைப் பங்களிப்புக்கள் மற்றும்  ஹாரூன் ரஷீதின் காலத்தில் இருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட பைத்துல் ஹிக்மா , கலீஃபா முஸ்தன்ஸிர் சீரமைத்த பொது நூலகம் ,கலீபா மாஃமுனியின் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் ,
ஸ்பெய்னின்  நாலாபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த கல்வி மையங்கள் என அல்குர்ஆனின் ஒளியின் கீழ் ஆரம்ப கால முஸ்லிம்கள மேற்கொண்ட அறிவியல் பங்களிப்புக்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். "1001 Invention Muslim Heritage in our World " (முஸ்லிம்கள் உலகிற்கு வழங்கிய 1001 கண்டுபிடிப்புகள் ) என்ற ஆங்கில மொழி நூலில் இவற்றை தெளிவாக காணக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு இருந்த போதும் வேதனைக்குரிய விடயம் என்னவெனில் இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியோடு எமது அறிவியல் பாரம்பரியமும் தொலைந்து போயிற்று போலும். இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் நாலாபுறங்களிலும் படையெடுத்தாற் போல் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கமியூனிஸம் , சியோனிசம, யூதம் , கிறிஸ்தவம் என அனைத்துத் தரப்பினரும் அதற்குப் பங்காளிகளாக இருப்பதைக் காண்கிறோம். என்றாலும் அறிவியலின் கருவினை கையில் வைத்துக் கொண்ட சமூகம் பாலைவனப் பிணங்கள்  போல் உணர்ச்சியற்று கிடைக்கின்றது. விஞ்ஞானம் விழிகள் பிதுங்கி பார்க்கும் உண்மைகளையெல்லாம்  நாம் சாதாரணமாக ஓதல் என்ற பெயரில் கடந்து விடுகிறோம். நம் சமூகத்தின் வீழ்ச்சியின் துவக்கம்  இங்கிருந்துதான் ஆரம்பமாகி இருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான அறிவியல் உண்மைகள் பொதிந்த ஒரு நூலை வெறுமனே ஓர் ஆன்மீக நூலாக மட்டும் கையாளும் வரலாற்றுத்  தவறை நம் சமூகம்  சுமந்து இருக்கிறது என்றால் அது பொய்யாகாது.

அதனடிப்படையில் அறிவியல் நூலாகிய அல்குர்ஆனுக்கு நாம் செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதுமான கடமைகள் ஏராளம் உள்ளன. எந்த ஒரு நூலையும் அதன் அடிப்படை மொழியில் வாசிப்பதன் ஊடாக ஆழமாக  விளங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் அல்குர்ஆனுக்கு நாம் செய்யவேண்டிய முதற் கடமை அரபு மொழியைக் கற்பதாகும். பலரும் இன்னும் உணராத கடமையாகவே இது இருக்கின்றது.

" அரபு மொழியின் எதிர்காலத்தை எண்ணி எனக்கு ஆழ்ந்த கவலையும் பயமும் ஏற்படுகிறது. அரபு மொழி மரணித்து விட்டால் அல்குர்ஆனை அரும்பொருட் காட்சியகத்தில் பார்வைக்கு வைக்க வேண்டிவரும். அப்போது எமது அறிவியல்  பாரம்பரியமும் அழிந்து போய்விடும்."
ஷேக்  முஹம்மத் அல் கஸ்ஸாலி அவருடைய அல் ஹக்குல் முர் என்ற நூலில் அரபு மொழியின் நிலை  குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

அவ்வாறே அல்குர்ஆன் பேசுகின்ற பிரபஞ்ச உண்மைகளை நாம் உலகிற்கு உறுதிப்படுத்திக்காட்டவும்  வேண்டியிருக்கிறது. ஏனெனில் மாற்றுக் கொள்கைகள் கண்டுபிடித்த பின்னர் இது குர்ஆனில் உள்ளது என்று கூறிக்கொள்வது பெருமைக்குரிய விடயம் அல்ல. மாறாக சொந்த பயிர் நிலம் இருந்தும் புதிய உற்பத்திக்குத் தேவையான அனைத்தும் இருந்தும் முயற்சியின்றி முடங்கிக் கிடக்கும் அபலைகளாக  நாம் மாறிவிட்டோம் என்பதை நினைத்து ஒருவகையில் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.

அல் குர்ஆனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ,உறுதி செய்யப்பட்ட   உண்மைகள் மற்றும் இன்னும் ஆராயப்படவேண்டிய பக்கங்களையும்  வெளிக் கொணர்வதோடு
மீண்டும் நம் ஆய்வு மற்றும் அறிவியல் பாரம்பரியங்களை உயிர்ப்பிக்க வேண்டும். அதற்கென ஒவ்வொரு முஸ்லீம் வீட்டுக்கும் ஒரு நூலகம் அமைக்கப்பட வேண்டும்.
நம் பள்ளிகள் பலநூறு நூலகங்களை உள்ளடக்கி  அறிவியலுக்கான ஓர் உறைவிடமாக மாற வேண்டும் .

 (( (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.))  59 : 21

 (( அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?))
 56 : 81

 (( அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள))  4: 82

 (( மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?))
 47 : 24

இந்த குர்ஆனிய வசனங்கள் அல்-குர்ஆன் மீதான எமது கடமைகளை மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.

எனவே அறிவியல் நூலாகிய அல்குர்ஆன் எம் மீது சுமத்தப்பட்ட ஓர் அமானிதம் என்ற வகையில் அதற்கான கடமைகளை சரியாகச் செய்வோம். இனி அல்குர்ஆனின் ஔியில் ஓர் அறிவியல் புரட்சிக்கான எமது பங்களிப்புக்களை வாரி வழங்க ஆவன செய்வோம்.

"வழித்தடம்"- All University Muslim Students Association (AUMSA)
 N. Rasmiya
 University of Colombo

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.