நிற்காத நினைவலைகள்..


- கஹட்டோவிட்ட சிபான் -

ஏதோவொரு மாற்றம். உடம்பெங்கும் “சொறி” நிறைந்திருந்தது. அதற்கு ஒரு வாரத்தின் முன்னர் தோல்நோய் சம்பந்தமான வைத்தியரிடம் வாங்கிய கிறீமைப் பூசியும் குறைந்தபாடில்லை.

சூழல் மாற்றமோ, குளோரின் செறிந்த குடிநீரோ உணவுப் பழக்க வழக்கமோ மனஉணர்வோ ஏதென்று தெரியவில்லை.. கைகளைச் சொறிந்தவாறு அறைக்கு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டேன். பகல் சோறு உட்கொள்வதா இல்லை தேசிய உணவு சம்போசாவுக்கு சீனிபோட்டு சுடுநீரூற்றி உண்பதா... கட்டிலில் சாய்ந்தவாறு சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

கடைசியில் சமபோசா வென்றது. கவிப்பேரரசு வைரமுத்துவின்  புத்தகங்கள் யாருக்குத்தான் பிடிக்காது.. வாசித்துவிட்டு வரலாமென நூலகம் நோக்கி நடந்தேன். நூலக நுழைவாயிலருகே அந்த மகா மனிதர். அன்றுதான் நானறிந்து கலாநிதி சுக்ரியை அண்மையில் பார்க்க வாய்த்தது. புன்முறுவலோடு சலாமுன் அலைக்கும் என்றேன்.பூ விரிவது போன்று புன்னகைத்துப் பதிலுரைத்தார். நான் நளீமியாவுக்கு வந்து கொஞ்சநாளாகிறது. முதல் வகுப்பு மாணவன் என என்னை அறிமுகப்படுத்தினேன். மகிழ்ந்தார். ஊர் பற்றிக் கேட்டார். அருள் கொழிக்கும் கஹட்டோவிட்ட என்றேன். பின் வருடாவருடம் பேருவளை ஸாவியாவுக்கு வருகிறேன். அப்பா,வாப்பா ஸாவியா உறுப்பினர்கள் என எல்லோரும் வருடா வருடம் வருகிறோம். சாதுலியாத்தரீக்காவொடு மிகுந்த பற்றுக்கொண்டுள்ளேன் என்றேன்.

 சாதுலியாத் தரீக்கர்கள் முஸ்லிம் சமூகத்திற்குச் செய்த சேவைகள் அளப்பரியவை. அறிஞர் பெருமக்கள் என சான்றோர் பற்றுவைத்து ஒழுகி வருகின்ற தரீக்கா என... என்னையும் கற்று ஒழுகி நடக்க வேண்டியபின் அல்லாஹ் அருள்பாளிக்கட்டும் என வாழ்த்தி சில புத்தகங்களைக் குறித்துக் கொள்ளுமாறு கூறினார். அறிஞர் பெருமகன் கலாநிதி சுக்ரி அவர்களின் பொன் நேரத்தைக் இனியும் காலலாக்கலாகாது என எண்ணி மரியாதையுடன் விடைபெற்று அவர் குறிப்பிட்ட புத்தகங்களை தேடச் சென்றேன். சுக்ரியவர்கள் ஸூபித்துவத் தரீக்கா மீது மரியாதையும் பற்றும் கொண்டவர். அவர் ஸூபித்துவம் பற்றியெழுதிய கட்டுரைகள் நூல்கள் என்பன இதன் பின்தான் அறிந்து கொண்டேன். மஸ்ஜிதுந் நூரில் வருடாந்தம் நடைபெறும் கந்தூரிகளின் போது அவர் கூறிய வார்த்தைகள் மனதுள் வந்து போகும்.

 என் வாப்பவைப்போல மிகுந்த இரக்கமுள்ளவர். வாப்பாவினதும் உம்மும்மாவினதும் சுக்ரியவர்களதும் நினைவலைகள் அடிக்கடி மனக்கரையைத் தொட்டுச் சென்றுகொண்டிருக்கின்றன. வாப்பாவையும், தன் மகனாகவே என்னை வளர்ந்த உம்மும்மாவையும் கலாநிதி சுக்ரியவர்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும்.

அவர்களின் கப்றுகளை ஒளிமயமானதாக ஆக்கியருள்வானாக..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.