பன்னிரெண்டாவது தொடர்..................

பாலஸ்தீன போராட்டத்தின் எழுச்சியும், யூதர்களின் தோல்வியும், அகன்ற இஸ்ரேல் கனவும்


இஸ்ரேலுடன் நடாத்திய யுத்தங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோல்வி அடைந்ததன் பின்பு யாசீர் அரபாத் இஸ்ரேலை அங்கீகரித்து ஒஸ்லோவில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்மூலம் பாலஸ்தீன புனித போராட்டம் அரசியலாக மலினப்படுத்தப்பட்டது. 

ஆனால் பி.எல்.ஓ தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து இஸ்ரேலுடன் போர் செய்துகொண்டு விதைக்கப்பட்ட உயிர்களாலும், சிந்திய இரத்தங்களாலும் தங்களை பலப்படுத்திக் கொண்டனர்.

இவ்வாறான இயக்கங்கள் தோன்றி போராடாமல் இருந்திருந்தால், இன்றைய சந்ததிகளின் மனங்களில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பற்றிய உணர்வுகள் அகன்றிருக்கும். அத்துடன் அகன்ற இஸ்ரேல் என்ற யூதர்களின் கனவு நிறைவேறியிருக்கும்.

மலேசியா போன்ற பல இஸ்லாமிய நாடுகள் தங்களது நாட்டு கடவுச்சீட்டில் “இஸ்ரேல் தவிர்ந்த அனைத்து நாடுகளுக்கும்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இஸ்ரேலை தடை செய்திருந்தது. 

ஆனால் 1973 க்கு பின்பு இஸ்ரேலை சுற்றியுள்ள அரபுலக புதிய தலைமுறை ஆட்சியாளர்களின் கொள்கைகளில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து ஆயுத மோதலை தவிர்த்து இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டார்கள். இது யூதர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அந்தவகையில் எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளும் மற்றும் அமெரிக்காவின் கைபொம்மையாக இருந்த ஈரானின் ஷா அரசும் இஸ்ரேலுடன் வெளிப்படையாக ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதுடன், சவூதி அரேபியா போன்ற சில நாடுகள் மறைமுகமான உறவுகளை மேற்கொண்டார்கள். இதனால் பாலஸ்தீனர்களின் போராட்டம் கேள்விக்குறியானது.

தங்களை அரபுலகம் கைவிட்டுவிட்டது என்றே பாலஸ்தீன மக்கள் கருதினார்கள். ஆனால் போராளி இயக்கங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. சொந்தக்காலில் தனித்து நின்று போராட முடிவெடுத்தார்கள்.

பலம்பொருத்திய இஸ்ரேல் இராணுவத்துடன் தொடர்ந்து போரிட்டது. மரபுப்போர் முறையில் ஹமாஸ் இயக்கமும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் இயக்கமும் இஸ்ரேலுடனான இராணுவ சமநிலையை வெளிப்படுத்தியது.

இதனால் 2000 ஆண்டில் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் தென் லெபனானில் இருந்த இஸ்ரேலிய படைகளை பின்வாங்க செய்தது. அதுபோல் 2005 இல் ஹமாஸ் இயக்கத்தினர் காசாவில் இருந்த இஸ்ரேலிய இரானுவத்தினர்களையும், யூத குடியேற்றங்களையும் வெளியேற்றினார்கள்.

இந்த வெளியேற்றமானது ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ் போன்ற இயக்கங்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். அதன்பின்பு ஹமாஸுடன் நடந்த பல யுத்தங்களில் இஸ்ரேல் இராணுவம் தோல்வியடைந்தது. இதனால் பாலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தது.

அதாவது ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் என்ற அந்தஸ்து 2012 இல் பாலஸ்தீனத்துக்கு கிடைத்தது. வாக்கெடுப்பின் அடிப்படையில் கிடைத்த இந்த அங்கீகாரமானது இஸ்ரேலுக்கு பாரிய தலையிடியை ஏற்படுத்தியது.

பாலஸ்தீன இயக்க தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இன்று பாலஸ்தீன ஜனாதிபதி என்ற அந்தஸ்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றுகின்றார் என்றால் அதற்கு ஹமாஸ் இயக்கத்தின் தியாகமே காரணமாகும். 

அன்று யாசீர் அரபாத் இஸ்ரேலுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு போராளி இயக்கங்கள் போராட்டத்திலிருந்து விலகியிருந்தால், இன்று பாலஸ்தீனுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அது நாளடைவில் புதுப்புது யூத குடியேற்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டு பாலஸ்தீனர்கள் முழுமையாக விரட்டப்பட்டிருப்பார்கள்.

அதன் பின்பு யூதர்களின் அடுத்தகட்ட நகர்வான அகன்ற இஸ்ரேல் என்ற இலக்கை நோக்கி இஸ்ரேல் பயணித்திருக்கும்.

அகன்ற இஸ்ரேல் என்பது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனை மைய்யமாகக்கொண்டு லெபனான், ஜோர்டான், குவைத் ஆகிய நாடுகளை முழுமையாக கைப்பேற்றுவதுடன், மதினா உற்பட சவூதி அரேபியாவின் பெரும் நிலப்பரப்பினையும், மற்றும் ஈராக், எகிப்து, சிரியா ஆகிய நாடுகளின் அரைவாசி பகுதியையும், துருக்கியின் சில பகுதியையும் உள்ளடக்கிய பிரதேசத்தினை கொண்டு இஸ்ரேல் என்னும் நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதாகும்.

இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தடையாக இருப்பது தனது வீட்டு வாசலில் இருக்கின்ற போராளிகளின் மூர்க்கமான போராட்டமாகும். ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் முழுவதையும் தனது ஏவுகணை வீச்சு எல்லைக்குள் கொண்டுவந்ததனால் ஒவ்வொரு இஸ்ரேலியரும் நாளாந்தம் நின்மதியற்ற வாழ்வினையே மேற்கொள்கின்றார்கள்.

இதனால் இஸ்ரேலுக்கு வெளியே இருக்கின்ற யூதர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு வந்து குடியேற அச்சப்படுகின்றார்கள். தனது நாட்டின் எல்லையை விரிவு படுத்துகின்றபோது அங்கே குடியேற்றுவதற்கு யூதர்களின் மக்கள் தொகை போதாது. இதன் காரணமாக அகன்ற இஸ்ரேல் திட்டத்தினை விரைவுபடுத்துவதற்கு யூதர்களினால் முடியாமல் உள்ளது.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

தொடரும்...........................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.