பதினான்காவது தொடர்...............

அமெரிக்க பின்னணியும், இஸ்ரேலின் ராஜதந்திர வெற்றியும், போராளிகளிடம் அடைந்த தோல்வியும்


இஸ்ரேலுக்கு இருக்கின்ற ஒரேயொரு தலையிடியனது பாலஸ்தீன போராட்ட இயக்கங்களாகும்.

தனது இதயத்திலேயே குடிகொண்டிருக்கின்ற அவர்களை அச்சமூட்டும் நோக்கில் பொதுமக்கள் மீது தொடர்ந்து கெடுபிடிகளை மேற்கொள்வதோடு எப்பொழுதும் தனது நாட்டினை இருபத்திநான்கு மணிநேர அதிதீவிர கண்காணிப்பில் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை செயல்படுகிறது.

இஸ்ரேல் தனது நவீன விமானங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான குண்டுகளை வீசியும், பலமான உளவுப்பிரிவு இருந்தும், ஹமாஸ் இயக்கத்தினதும் ஏனைய போராளிக் குளுக்களினதும் ஏவுகணை தாக்குதல்களை தடுக்க முடியவில்லை.

அத்துடன் ஏவுகணை கட்டமைப்பையோ அதன் தளங்களையோ கண்டுபிடித்து முற்றாக அழிக்கவும் முடியவில்லை.

மொசாட் அமைப்பானது ஹமாஸ் இயக்கத்தின் இரகசியங்களை அறிந்துகொள்வதில் படுதோல்வி அடைந்துள்ளது. இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குகின்ற போராளிகளின் ஊடுருவலை முழுமையாக கட்டுப்படுத்தவும் முடியவில்லை. இன்றும் இஸ்ரேலிய மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள். 

சுருக்கமாக கூறுவதாயின் ஹமாஸ் இயக்கத்துக்கான ஆயுத விநியோகத்தை தடுப்பதிலும், அவ்வியக்கத்தை அழிப்பதிலும் இஸ்ரேல் தோல்விகண்டுள்ளது.

அதேபோல் உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமினதும் மனதில் குடிகொண்டிருக்கின்ற பாலஸ்தீன போராளிகளை அவர்களின் இதயங்களிலிருந்து பிரிப்பதிலும் இஸ்ரேல் படுதோல்வி அடைந்துள்ளது. 

ஆனால் அமெரிக்காவின் உதவியுடன் ஹமாஸ் இயக்கத்துக்கு முஸ்லிம் நாடுகளில் பரந்தளவில் இருக்கின்ற செல்வாக்கினையும், உதவிகளையும் தடுத்து நிறுத்துவதில் இஸ்ரேல் ஓரளவு வெற்றிகண்டுள்ளது.

அந்தவகையில் காசாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள எகிப்தினை தளமாகக்கொண்டு இயங்கிவருகின்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அனுசரணையுடன் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களினால் உருவாக்கப்பட்டதுதான் ஹமாஸ் இயக்கமாகும்.

அரபு வசந்தத்தின் மூலம் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த முர்ஷி அவர்கள் எகிப்தின் ஆட்சியை கைப்பேற்றி அதிகாரத்திலிருந்தபோது எகிப்திடமிருந்து ஹமாஸ் இயக்கத்துக்கு தாராளமான உதவிகள் கிடைத்தது.

முஸ்ர்ஷியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எகிப்து அமெரிக்காவின் கைக்கூலியாக மாறியதிலிருந்து ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்ததுடன், அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்பட்டது.

இதனால் ஹமாஸ் இயக்கம் மட்டுமல்லாது காஸாவில் உள்ள பொதுமக்கள் கடுமையான நெருக்கடி நிலைக்கு உள்ளானார்கள்.   

சதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் ஆட்சி செய்துவந்த ஈராக், லிபியா போன்ற நாடுகள் பாலஸ்தீன போராட்டத்துக்கு அதிகமான உதவிகளை செய்தது.

பின்பு இந்த இரு நாடுகளுக்கும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்டதனால் அமெரிக்காவின் கண்காணிப்பை தாண்டி எந்தவொரு உதவிகளையும் செய்ய முடியவில்லை.

1967 இல் இஸ்ரேலுடன் நடைபெற்ற ஆறு நாட்கள் யுத்தத்தில் ஜோர்டான் இராணுவத்துக்கு தலைமைதாங்கி யுத்தம் செய்த ஹுசைன் அவர்கள் ஜோர்டான் நாட்டின் மன்னராக இருக்கும் வரைக்கும் பாலஸ்தீன் போராட்டத்துக்கு அதிகமான உதவிகளை செய்தார்.

மன்னர் ஹுசைனின் மரணத்துக்கு பின்பு ஜோர்டான் அரசு அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் ஹமாஸ் இயக்கத்தை தடை செய்ததனால் அங்கிருந்த காரியாலயம் சிரியாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

சிரியா, ஈரான் போன்ற நாடுகள் பாலஸ்தீன போராட்டத்துக்கு பல உதவிகளை செய்தது மட்டுமல்லாமல் இஸ்ரேலுடன் நேரடி யுத்தம் செய்து சிரியா தனது நிலங்களையும் இழந்தது. இன்று யுத்தத்தினால் நிலைகுலைந்துள்ளதனால் பாலஸ்தீன போராட்டத்துக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை சிரியாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டதன் பின்பு தாராளமான உதவிகளை ஈரான் வழங்கிவருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் ஏவுகணை மேம்படுத்தலுக்கு ஈரானே உதவியதாக கூறப்படுவதுடன், இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் இருந்து இயங்குகின்ற ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஈரானின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.

அத்துடன் ஈரான் மீது அமெரிக்கா விதித்த இறுக்கமான பொருளாதார தடையினால், அமெரிக்காவின் கண்காணிப்புக்கு மத்தியில் இன்றும் ஈரான் பாலஸ்தீன போராட்டத்துக்கு மறைமுகமான உதவிகளை செய்துவருகின்றது. இது ஈரான் மீது இஸ்ரேலயும், அமெரிக்காவையும் கோபமடைய செய்ததற்கான முதன்மை காரணிகளில் ஒன்றாகும். 

இன்று அரபு நாடுகளில் கட்டாரை தவிர எந்தவொரு அரபு நாடுகளும் பாலஸ்தீன போராட்டத்துக்கு உதவிகள் செய்வதில்லை. இவர்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், இஸ்ரேலுடன் கள்ள உறவுகளை பேணி வருவதுதான் இதற்கு காரணமாகும்.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

தொடரும்........................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.