கோவிட்-19 வைரஸ் காரணமாக உயிரிழந்த முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் மனுவொன்றை இன்று காலை (20) தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் சார்பில் உயர்நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சி. முகம்மட் நவாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் உயர்நீதிமன்ற  சட்டத்தரணி முகம்மது ஹனிபா முகம்மட் ஹைர் அவர்கள் குறித்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில் கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 2170/08 எனும் வர்த்தமானி சட்டத்திற்கு முரணானது. அதை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை உரியமுறைப்படி நல்லடக்கம் செய்யவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளதுடன் மேலும் தான் ஒரு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவன் என்றவகையிலும், மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் தனது மத சுதந்திர உரிமை மீறப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மன்று உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அம்மனுவில் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே, இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.