(நா.தனுஜா)

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் தடுத்து வைப்பு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளின்றி 18 மாதங்களுக்கும் அதிகமான காலம் ஒருவரைத் தடுத்து வைப்பதென்பது சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானதாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட குண்டுதாரிகளுடன் தொடர்பினைப் பேணியதாகக்கூறி கடந்த மாதம் 14 ஆம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார்.

எனினும் இதுவரையில் அவர் விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது ஒருவரை வழக்கு விசாரணைகளின்றி 18 மாதங்களுக்கும் அதிகமான காலம் தடுத்து வைப்பதற்கு பயங்கரவாதத்தடைச் சட்டம் அனுமதியளிக்கிறது. எனினும் இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதுடன், சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைக்கும் எதிரானதாக அமைகிறது.

விசாரணைக்கு முன்னதான தன்னிச்சையான தடுத்து வைப்பு என்பது உரிய சட்ட வரையறைகளுக்கு அமைவாக பல்வேறு காரணிகளைக் கருத்திற்கொண்டே மேற்கொள்ளப்படலாம். எனவே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் தடுத்து வைப்பு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.