(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்ற சுகாதார அமைச்சரின் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பின்னணியில், தற்போது இரு கத்தோலிக்கர்கள் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

ஓசல லக்மால் அனில் ஹேரத் மற்றும் ரன்மல் என்டனி அமரசிங்க ஆகிய இருவரே சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இந்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தககல் செய்துள்ளனர்.

அதன்படி இந்த சடலங்களை எரிக்கும் விவகாரத்துக்கு எதிராக மட்டும் 4 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் சில அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய நடவடிக்கைகல் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரா ஜயவர்தன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியினால் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2170/8 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரியே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.