இலங்கையில் பல்கலைக்கழக உருவாக்கத்தின் முன்னோடி ஜஸ்டிஸ் அக்பர் (அன்னாரது 140 வது ஜனன தினமான இன்று அவர் பற்றிய  நினைவுகளை மீட்கும் பதிவு)

இலங்கையின் சட்டத்துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, இலங்கையின் கல்வித்துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, இலங்கை முஸ்லிம் ஆளுமைகளை பட்டியலிட்டாலும் சரி, இவை அனைத்திலும் இடம்பெறக்கூடிய மிக முக்கியமான ஆளுமையே மறைந்த நீதிபதி, சட்டத்தரணி, சிலோன் சொலிசிட்டர் ஜெனரல் ஜஸ்டிஸ் அக்பர் என அழைக்கப்படும் மாஸ் தாஜூன் அக்பர் ஆவார்.

அன்னார் 1880 ம் ஆண்டு ஜூன் பதினைந்தாம் திகதி M.S.J. அக்பர் என அழைக்கப்பட்ட வசதி படைத்த தென்னந்தோட்ட உரிமையாளருக்கு மகனாக இலங்கையில் பிறந்தார், இவர் தனது கல்வி நடவடிக்கைகளை கொழும்பு ரோயல் கல்லூரியில் பெற்றார். அங்கே London Matriculation பரீட்சையில் முதல்தர சித்தியடைந்ததால் 1897 இல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்தில் இயந்திரவியல் விஞ்ஞான பட்டப்படிப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். என்ன காரணமோ தெரியவில்லை, திடீரென தனது இயந்திரவியல் விஞ்ஞான பட்டப்படிப்பை இடைநிறுத்திவிட்டு அதே பல்கலையில் சட்ட பீடத்தில் இணைந்துகொண்டார்.

இந்தத்தெரிவே பின்னாட்களில் இலங்கைக்கு அவர் ஆற்றப்போகும் ஏராளமான சேவைகளை முன்னிலைப்படுத்தியதாக அமையப்போகிறது என்பது அப்போது அவருக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் இறைவனின் நாட்டமே.
தனது பட்டப்படிப்பை 1905 இல் முடித்துவிட்டு இலங்கைக்கு திரும்பி இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்துறை விரிவுரையாளராக இணைந்துகொண்டார். பின்னர் 1907 இல் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்டர் ஜெனரல் ஆகவும் பதில் சட்டமா அதிபராகவும் தெரிவு செய்யப்பட்டார். இக்காலப்பகுதியில் அவர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் தனது சேவைகளின் சிறகுகளை விரிவுபடுத்தினார். அதேவேளை ஆங்கிலேயர்களின் அரச சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் பிரஜை என்ற சிறப்பையும், உச்ச நீதி மன்றத்தின் முதலாவது முஸ்லிம் நீதியரசர் என்னும் வரலாற்று சாதனையையும் இவரே பெறுகிறார்.

தனது அதீத திறமைகளால் சட்டத்துறையில் மிக ஆழமான முத்திரையை பதித்துக்கொண்டதால், இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை காலமும் தானாற்றிய சேவைகளுக்கு முத்தாய்ப்பாய் இவர் பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு தலைவராக அமர்த்தப்பட்ட காலத்தில் இவர் மேற்கொண்ட முயற்சிகளும், சேவைகளும் இவரின் பெயரை காலமெல்லாம் உச்சரிக்கும் நிலையை தோற்றுவித்தது என்பதில் துளியளவும் மிகையில்லை.
இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும் என்ற ஆங்கிலேயர்களின் அவாவுக்கமைய பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு தலைவரான ஜஸ்டிஸ் அக்பர், 1928 இல் இடம்பெற்ற பல்கலை அமைவிடம் தொடர்பான கூட்டத்தொடரில் கண்டியில், பேராதெனிய எனுமிடத்திலுள்ள “தும்பர” பள்ளத்தாக்கிலேதான் பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்ற கருத்தை சபையில் முன்வைத்தார்.

அதே சபையில் அமையப்போகும் புதிய பல்கலையானது கொழும்பில்தான் அமைய வேண்டும் என சேர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களும். இல்லை இல்லை அது யாழ்ப்பாணத்தில்தான் அமைக்கப்படவேண்டும் என சேர் பொன்னம்பலம் ராமநாதன் ஆகியோரும் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். ஈற்றில், ஜஸ்டிஸ் அக்பர் முன்மொழிந்த “தும்பர” பள்ளத்தாக்கிலேயே அப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, இன்றுவரை அழகியல் அம்சங்களிலும், இயற்கை வனப்பிலும், கல்வித்தரத்திலும் இன்னொரு பல்கலைக்கழகத்தால் ஈடுகொடுக்கமுடியாத உயரத்தில் இன்றைய பேராதெனிய பல்கலைக்கழகம் திகழ்கிறது என்பது ஜஸ்டிஸ் அக்பர் அவர்களின் தூர நோக்கையும், திட்டமிடல் ஆற்றலையும் பறைசாற்றி நிற்கின்றது. (அண்மையில் வெளியான உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் பேராதெனிய பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்).

அதனாலேதான் பேராதெனிய பல்கலையின் பொறியியல் பீட ஆண்கள் விடுதிக்கு “அக்பர் விடுதி” என்றும், பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள தனிச்சிறப்புமிக்க பாலத்துக்கு “அக்பர் பாலம்” என்றும் பெயர் சூட்டப்பட்டு ஜஸ்டிஸ் அக்பர் கௌரவிக்கப்பட்டுள்ளார். பொறியியல் கற்க ஆசைப்பட்ட அக்பரின் நாமம் இன்று இலங்கையின் முதல்தர பொறியியல் பீடத்தில் தினமும் உச்சரிக்கப்படுவது இறைவனின் விசித்திர ஏற்பாடேயன்றி வேறொன்றுமில்லை.

அதேபோன்றே கொழும்பு ஹுசைனியா ஆண்கள் பாடசாலை, கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலை, ஜாவத்தை பள்ளிவாசல் ஆகியவற்றின் உருவாக்கத்துக்கும் ஜஸ்டிஸ் அக்பரின் உழைப்பு மகத்தானது.
இலங்கை சட்டக் கல்லூரி விரிவுரையாளர், சட்டப்பரீட்சைகளுக்கான பரீட்சகர், மாவட்ட நீதிபதி, சொலிசிடர் ஜெனரல், சட்ட மன்ற உறுப்பினர், பேராதனைப் பல்கலைக் கழக நிறைவேற்றுக் குழுத் தலைவர், பல்கலைக்கழக ஆணைக்குழு தலைவர்,  உச்ச நீதி மன்றத்தின் முதலாவது முஸ்லிம் நீதியரசர் என்ற இத்தனை சிறப்புக்களையும் தனிமனிதனாக கடின உழைப்பின் மூலம் அடையப்பெற்ற ஜஸ்டிஸ் அக்பர் 1944 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ம் திகதி தனது அறுபத்து நான்காவது வயதில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அக்பர் போன்ற ஆளுமைகளின் தேவை தற்காலத்தில் நம் சமூகத்தில் அதிகம் உணரப்படும் இந்நிலையில், இன்றைய மாணவ சமூகமும், இளைஞர் சமூகமும் புரையோடிப்போயிருக்கும் நம் சமூகத்தின் நீண்டகால பிரச்சினைகளை ஆழ்ந்த சிந்தனைகளின் வாயிலாகவும், கல்வி நிலையில் உயர்வு மட்டத்தை அடைவதன் மூலமும், காத்திரமான படைப்புக்களின் மூலமும் ஓரளவுக்கு தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டியது நம் எதிர்கால சமூகத்தின் தெளிந்த நிலைக்கு கால்கோளாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது.

எப்.எச்.ஏ.ஷிப்லி
சிரேஷ்ட விரிவுரையாளர்
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.