டி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியை அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 18-ம் திகதி முதல் நவம்பர் 15-ம் திகதி  வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலகக்கிண்ண போட்டி நடைபெறுமா? என்பது  சந்தேகமே. இதுகுறித்து சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐ.சி.சி.) அடுத்த மாதம் முடிவு செய்யவுள்ளது.

இதற்கிடையே உலகக்கிண்ண போட்டியை நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரியம் தெரிவித்து இருந்தது. இதேபோல இந்த ஆண்டு உலகக்கிண்ணம் நடைபெற வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அமைப்பில் இருப்பவரும், பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவருமான ஈசான் மானி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உலகக்கிண்ணம் நடைபெற்றால் ரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

உலகக்கிண்ணத்தில் விளையாட 15 நாட்டு வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் இரசிகர்களையும் தடுத்து நிறுத்த மாட்டோம். போட்டியை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இரசிகர்கள் இல்லாமல் உலகக்கிண்ணம் இல்லை.

கொரோனா தொற்று உலகளவில் இருப்பதால் 15 அணிகளையும் வரவழைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.