இருபத்தி மூன்றாவது தொடர்................

ஈராக்கிய மக்களின் அவலத்துக்கு பொறுப்பு கூறுவது யார் ? அமெரிக்கா இலக்கை அடைந்ததா ?

சதாம் ஹுசைன் என்ற தனி நபருக்காக இலட்சக்கணக்கான ஈராக்கிய பொதுமக்களை கொலை செய்துவிட்டு அவரது ஆட்சியை கவிழ்த்தனர். இவர்கள் கூறியதுபோன்று பேரழிவு தரக்கூடிய ஆயுதங்களை இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவ்வாறான எந்தவித ஆயுதங்களும் ஈராக்கில் இல்லை என்பது அமெரிக்காவுக்கு முன்கூட்டியே நன்றாக தெரியும். ஆனால் உலகை நம்பவைப்பதற்காக நாங்கள் பொய் கூறினோம் என்று பின்னாட்களில் அன்றைய யுத்தத்தில் அமெரிக்காவுடன் பங்கெடுத்த பிரித்தானிய பிரதமர் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர இரட்டைகோபுர தாக்குதலின் சூத்திரதாரியான ஒசாமா பின் லேடனை கைதுசெய்வதற்காக என ஆப்கானிஸ்தான் மீது தொடுத்த போரில் அமெரிக்கா நினைத்ததுபோன்று இலக்கை அடைய முடியவில்லை.

இது அன்றைய அமெரிக்க அதிபர் ஜோஜ் டவிள்யு புஸ்சுக்கு உள்நாட்டில் எதிர்ப்புக்களை உருவாக்கியது. இதனாலேயே அவசர அவசரமாக ஒசாமாவுக்கு பதிலாக சதாம் ஹுசைனை காண்பித்து ஈராக் மீது போர்தொடுத்து அமெரிக்க மக்களை ஜோஜ் டவிள்யு புஸ் திருப்திபடுத்தியபின்பு  தேர்தலை எதிர்கொண்டார்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இலக்கை அடையாததுபோன்றே ஈராக்கிலும் அடைய முடியவில்லை. அதாவது ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனை கைதுசெய்வது, ஈராக்கில் இரசாயன ஆயுதங்களை கண்டுபிடிப்பது ஆகியன இலக்குகளாக உலகுக்கு அமெரிக்காவினால் கூறப்பட்டது.

ஈராக்மீது போர்தொடுத்து சதாமை ஆட்சியிலிருந்து அகற்றினால் ஈராக்கிய மக்கள் மகிழ்ச்சியடைந்து தாங்கள் அமைக்கும் பொம்மை அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றே அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் நடந்ததோ வேறுவிதமாக இருந்தது.

சதாம் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் தங்களது இன்னுமொரு எதிரி நாடான ஈரானுடன் இணைந்து போகமாட்டார் என்றும், தாங்கள் அமைக்கபோகும் பொம்மை அரசு ஈரானுடன் சேர்ந்து பயணிக்கும் என்பதனையும் அமெரிக்கா கணிப்பிட தவறிவிட்டது.

மேலும் சதாமின் படைகளை தோற்கடித்தால் அத்துடன் காரியம் முடிந்துவிடும் என்றுதான் அமெரிக்கா நினைத்தது. அன்று உலகில் பலமான நிலையில் இருந்த அல்-கொய்தா மற்றும் ஈரானிய ஆதரவு பெற்ற இயக்கங்கள் ஈராக்கினுள் ஊடுருவி அவர்கள் தங்களை எதிர்த்து போரிடுவார்கள் என்பதனையும் அமெரிக்காவினால் கணிக்க முடியவில்லை.

ஈராக்கிய மக்கள் சதாமைவிட அமெரிக்காவைத்தான் அதிகமாக வெறுத்தார்கள். தங்கள் நாட்டின்மீது அமெரிக்காவின் படையெடுப்பை அம்மக்கள் விரும்பவில்லை. அத்துடன் யுத்தத்துக்கு பிந்திய ஈராக்கின் நிலைமை மிகவும் மனித அவலங்கள் நிறைந்ததாக காணப்பட்டது.

அமெரிக்காவின் கொத்துக் குண்டுகளினாலும், கண்மூடித்தனமான விமான குண்டு வீச்சினாலும், உயிரிழந்த ஈராக்கிய மக்களின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இதன் துல்லியமான எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபையினாலும் கணக்கிட முடியவில்லை.

குடும்பங்கள் பிரிந்தன. கிராமங்கள் அழிந்தன. நகரங்கள் சுடுகாடுகளாக காட்சியளித்தன. குண்டுகள் விழாத இடமே இல்லை. செல்வமாக வாழ்ந்தவர்கள் உணவுக்கு கையேந்தினார்கள். வீதியெல்லாம் பிணங்கள். காயப்பட்டு உடல் அங்கங்களை இழந்தவர்களின் எண்ணிக்கை பல இலட்சங்கள். இத்தனைக்கும் அந்த மக்கள் செய்த குற்றம் என்ன ?

சதாம் ஹுசைன் என்னதான் குற்றவாளியாக இருந்தாலும் குற்றம் செய்தவரைத்தான் தண்டித்திருக்க வேண்டும். அவர் செய்த குற்றத்துக்காக பல மில்லியன் அப்பாவி மக்களை கொலை செய்தது மனித குலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஈராக்கிய மக்களின் இந்த பேரழிவுக்கு அமெரிக்காவை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. அமெரிக்காவுக்கு ஆலோசனை வழங்கிய யூதர்களும், இராணுவ தளம் அமைக்க இடமும், நிதியுதவியும் வழங்கிய அரபு நாடுகளும் இதற்கு முழுப்பொறுப்பாகும்.

குறிப்பாக சதாம் ஹுசைன் மீது சவூதி அரேபிய அரச குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் சாதகமாக அமைந்தது. சவூதி அரேபியாவின் ஆதரவு இல்லாதிருந்திருந்தால் இந்த யுத்தத்தை அமெரிக்காவினால் மேற்கொண்டிருக்க முடியாது.

சதாம் ஹுசைன் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் பாலஸ்தீன மக்களை அவர் கைவிடவில்லை. தனது நாட்டு மக்களுக்கு என்னதான் வறுமை இருந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு உதவி வந்தார்.

பாலஸ்தீன போராட்ட இயக்கங்களுக்கும் மற்றும் இஸ்ரேலிய தாக்குதலினால் கொல்லப்படுகின்ற, காயப்படுகின்ற பாலஸ்தீன குடும்பங்களுக்கு குறிப்பிட்ட தொகையை நிதிஉதவியாக வழங்கி வந்தார். சதாமின் வீழ்ச்சிக்கு பின்பு இதுபோன்று உதவி செய்வதற்கு எந்த நாட்டுத் தலைவர்களும் முன்வரவில்லை.

இறுதியில் விசாரணை என்றதொரு நாடகத்தை உலக மக்களின் பார்வைக்கு அரங்கேற்றிவிட்டு எதிர்பார்த்ததுபோன்று 30.12.2006 அன்று சதாம் ஹுசைனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அவரது புதல்வர்களான உதய் ஹுசைன், குசே ஹுசைன் ஆகியோர் 2003 இல் அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

தொடரும்.......................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.