(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, மாளிகாவத்தை, லக்செத செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 35 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் பமுனாரச்சிகே ருக்ஷான் அல்லது உக்ஷான் எனப்படும் பிரதான சந்தேக நபர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளின் பிரதிபலன் என தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வாவுக்கு அறிவித்தது.

இந்த சம்பவத்துடன் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரான் என அறியப்படும் மொஹம்மட் நிஜாம் மொஹம்மட் இம்ரான் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மாலை 5.00 மனியளவில் பதிவான இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் அன்றையதினமே சந்தேக நபர் ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் இருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை, வெல்லம்பிட்டி, மாளிகாவத்தை பகுதிகளில் வைத்து சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கொலன்னாவை, மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 31 வயதினையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் கைது செய்யப்படும் போதே காயமடைந்திருந்த நிலையில் பொலிஸ் காவலில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு அருகே வைத்து பிரதான சந்தேக நபராக கருதப்படும் பமுனாரச்சிகே ருக்ஷான் அல்லது உக்ஷான் அதிரடிப் படையினரால் ரிவோல்வர் ஒன்றுடன் கைது செய்யப்பட்டார்.

அவரையும் பொறுப்பேற்ற சி.சி.டி. அவரையும் ஏற்கனவே கைது செய்த இருவரில் ஒருவரையும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்து அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரியது. அதற்கு அனுமதியளித்த நீதிமன்றம் அவர்களை 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.