இக்பால் அலி
குருநாகல் மாவட்டம், மாவத்தகம பகுதியில் ஒருவாரத்தும் மேலாக பயிர்களுக்கு சேதம் விளைவித்துவரும் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
மாவத்தகம, கட்டுப்பிட்டிய எட்வட் தோட்டப் பகுதியில் ஒருவகை வெட்டுக்கிளிகள், தென்னை, வாழை, சோளம், மரவள்ளி, பப்பாசி போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன் இதனால் விவசாயிகள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். 
வெட்டுக்கிளிகளை அழிப்பதற்காக, ஒருவகை கிருமிநாசினி தெளிக்கப்பட்டப்போதிலும் அது பலனளிக்கவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, இந்த வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான கிருமிநாசினியைக் கண்டுபிடிக்குமாறு, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.டபிள்யூ. வீரக்கோன், பேராதெனிய விவசாய ஆராய்ச்சி நிலையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் வெட்டுக்கிளிகள் சில பிடிக்கப்பட்டு, பேராதெனிய விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
இந்தியாவின் பல மாநிலங்களில், ஒருவகை வெட்டுக்கிளிகளின் தாக்கத்தால் பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து வருகின்ற நிலையில், வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் பரவியுள்ள வெட்டுக்கிளிகளை இந்தியாவுக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ள மாவத்தகம, கட்டுப்பிட்டிய எட்வட் தோட்டத்துக்கு, நேற்று (02) விஜயம் செய்த வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில், வெட்டுக்கிளிகளின் தாக்கத்ததால் பாதிக்கப்பட்ட வாழைத்தோட்டம், தெங்கு பயிர்ச் செய்கைகளை நேரடியாகப் பார்வையிட்டார்.
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதலளித்த அவர், விவசாயிகளை அச்சுறுத்தி வரும் இந்த வெட்டுக்கிளிகளை முற்றாக இல்லாமற் செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் விவசாய அமைச்சு,  விவசாயத் திணைக்களத்தின் மூலம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான பூச்சிநாசினி விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் ஆதரவுடன் பூச்சியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள், மற்றும் பிராந்திய விவசாய இயக்குநர்கள் ஆகியோர் இணைந்து,  வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெட்டுக்கிளிகளை உடன் அளிக்காவிடின் அவை ஓரிரு நாள்களில் 500 மடங்காக பெரிகிவிடும் என்று, வடமேல் மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.சீலரத்ன தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.