(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்திருக்க வேண்டிய தீர்மானத்தையே முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எடுத்திருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, நிதி வழங்கல் நிலையத்தின் முன்னால் உயிரிழந்த முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் திட்டமற்ற செயற்பாட்டின் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாங்கள் பொதுத் தேர்தலை வெற்றி கொண்டு ஆட்சியை கைப்பற்றினாலும், ஆட்சி செய்வதற்கு நாடு எஞ்சியிறுக்குமா ? என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமையில் நாட்டுமக்களின் வருமானம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்துவது தொடர்பில் பெரும் சிக்கல் நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு சலுகைகள் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தது. ஆனால் எதுவும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்த தேவையில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டுள்ளார். அதனால் ஒருவரும் செலுத்த வேண்டாம்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தார். அதனாலேயே விலகுவதாக தீர்மானித்திருப்பார். ஓய்வு பெறுவதற்கு எதாவது காரணம் இருக்கலாம். அது தொடர்பில் எமக்கு தெரியாது. அவர்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்திற்கும் பெரும் பங்காற்றியவர்.

இது புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி இதில் பல அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பங்கு கொண்டுள்ளனர். கொரேனா காலத்தில் எல்லோருடைய மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. நான் கூட அரசியலை விட்டு விலகியிருக்கலாம் என்று சிந்தித்திருந்தேன். அவரும் அவ்வாறு சிந்தித்திருக்கலாம்.

அவருக்கு வெற்றி பெறமுடியும். எம்.பி பதவியை ஏற்கமாட்டேன் என்று கூறியுள்ளார். எம்மை பொருத்தமட்டில் ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய செயற்பாட்டையே மங்கள செய்துள்ளார் என்று எண்ணுகின்றேன்.

மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியை முன்னேற்றுவது தொடர்பில் எமக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.